யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 1வது வாரம் வியாழக்கிழமை
2015-01-15

கிறிஸ்தவ பொங்கல்




முதல் வாசகம்

அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க் கட்டினைக் குருவிடம் கொண்டுவர வேண்டும்
லேவியர் 23:9-14

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:10இஸ்ரயேல் மக்களிடம் நீ சொல்ல வேண்டியது: நான் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டில் நீங்கள் வந்து அறுவடை செய்யும் போது அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க் கட்டினைக் குருவிடம் கொண்டுவர வேண்டும்.11�உங்கள் சார்பாக ஏற்கத் தக்கதாக, குரு அந்தத் தானியக் கதிர்க்கட்டினை, ஓய்வு நாளுக்குப் பின்வரும் அடுத்த நாளில் ஆண்டவரின் திருமுன் ஆரத்திப் பலியாக்குவார்.12�அதனை ஆரத்தியாக காட்டுகிற அன்று, ஆண்டவருக்கு எரிபலியாக ஓராண்டான பழுதற்ற ஆட்டுக்குட்டி ஒன்றைச் செலுத்துங்கள்.13�இருபதுபடி அளவுள்ள மரக்காலில் பத்தில் இரண்டு பங்கான மிருதுவான மாவை எண்ணெயில் பிசைந்து ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க எரிபலியாகச் செலுத்துங்கள். திராட்சைப் பழ இரசத்தை நீர்மப் படையலாகப் படையுங்கள்.14�உங்கள் கடவுளின் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்த நாள்வரை, அப்பமோ, சுட்ட கதிரோ, பச்சைக் கதிரோ, உண்ணலாகாது. இது நீங்கள் வாழும் இடமெங்கும் உங்களுக்குப்பின் வரும் உங்கள் வழிமரபினரும் கடைப்பிடிக்க வேண்டிய என்றுமுள நியமம் ஆகும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுளே, உம்மைப் புகழ்ந்து பாடுவது ஏற்புடையது.
திருப்பாடல்65:1, 9-13

மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர்! கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது; அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது; நீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர்.பல்லவி

10�அதன் படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்; அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிருதுவாக்கினீர்; அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர்.பல்லவி

11�ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன.12�பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன; குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன. பல்லவி

13புல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன; பள்ளத்தாக்குகள் தானியங்களால் தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன. அவற்றில் எங்கும் ஆரவாரம்! எம்மருங்கும் இன்னிசை!பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-24

மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். 23�ஏனெனில், ' ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும் ' என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. 24�அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''சிமியோன் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்'' (லூக்கா 2:25)

இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்த நிகழ்ச்சியை விவரிக்கின்ற லூக்கா சிமியோன் என்னும் நேர்மையாளர் பற்றியும் அன்னா என்னும் திருப்பணியாளர் (லூக் 2:37) பற்றியும் உயர்வாகக் குறிப்பிடுகிறார். இவ்விருவரும் கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து வாழ்ந்தவர்கள்; கடவுளை மையமாகக் கொண்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள். இயேசு கோவிலுக்கு வந்ததும் இவர்கள் கடவுளின் திட்டம் இயேசுவில் நிறைவேறுவதைக் கண்டுகொள்கிறார்கள். பழைய ஏற்பாட்டு நேர்மையாளர்கள் வரிசையில் உயர்வாக எண்ணப்படுகின்ற சிமியோன், அன்னா ஆகிய இருவரும் யூத சமய அருள்நெறிக்குச் சீரிய எடுத்துக்காட்டுகளாகச் சித்தரிக்கப்படுகின்றனர். கடவுளின் வழி யாதெனக் கண்டு அதைக் கவனமாகக் கடைப்பிடிப்போர் அவருடைய அன்பிலும் அருளிலும் நிலைத்திருப்பார்கள். கடவுளிடத்தில் முழு நம்பிக்கை கொண்டிருப்பார்கள்.

சிமியோன் நேர்மையாளராக இருந்தார் என்பது அவருடைய வாழ்க்கை முறையில் துலங்கியது. கடவுள் தம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேறும் என சிமியோன் உறுதியாக நம்பினார். அந்த நம்பிக்கையின் காரணமாக அவர் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார். கடவுள் வாக்களித்த மீட்பு இயேசுவின் வழியாக நிறைவேறப் போகின்றது என்னும் உண்மை சிமியோனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. நம் வாழ்க்கையில் கடவுளின் வாக்குறுதிகள் நிறைவேறுவதை நாம் ஒவ்வொரு நாளும் காணலாம். கடவுளின் அன்புக் கரம் நம்மை வழிநடத்துவதை நாம் உணரலாம். நேர்மையான மன நிலையோடு கடவுளை அணுகுவோருக்கு அவருடைய ஆவி வாக்களிக்கப்படுகிறது. அந்த உறுதி நமக்கு இருப்பதால் நாமும் இறைப்பற்றுக் கொண்டு, இறைவழியில் தொடர்ந்து வழி நடக்க முன்வர வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளம் நேர்மையாய் இருக்க அருள்தாரும்.