இன்று பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு

திருவழிப்பாட்டு ஆண்டு B (18-01-2015)

இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி/> இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி/> இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி/> இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி/> இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி/> இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி/> இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி/> இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி/> இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி/>


திருப்பலி முன்னுரை

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நம் பக்கம் சாய்ந்து நமது மன்றாட்டைக் கேட்டருளும் நம் இறைவனின் நாமத்தில் நல்வாழ்த்துக்கள். இன்று பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு

சுதந்திரத்தையும், சுயாதீனத்தையும் தரும் நம் கடவுள், தம் விருப்பத்தை நிறைவேற்ற நம்மை அழைக்கின்றார். அவருடைய விருப்பமும், அழைப்பும் நம்மை அடிமையாக்குவதல்ல: மாறாக அமைதியும், உடல் நலமும், பாதுகாப்பும் நிறைந்த வாழ்வில் நடக்க வைப்பது. உடல் பரத்தைமைக்கு அல்ல, ஆண்டவருக்கே உரியது. உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? என்னும் இறைவார்த்தைகள் நம் உடலை அழகு சாதனப் பொருட்களாலும், நறுமண தைலங்களாலும் அல்ல, இறைவனுக்குகந்த தூய வாழ்வினால் மேன்மைப்படுத்த வேண்டும் என்னும் தெளிவானதும், ஆழமானதுமான ஒரு அழைப்பை நமக்கு இன்று தெரிவித்து நிற்கின்றன. பெற்றோர்கள், ஆசான்கள் இறைவனுக்குள் வாழ்ந்தால்தான், பிள்ளைகளுக்கும், மாணவர்களுக்கும் நல்வழி காட்டமுடியும் என்னும் செய்தியை ஏலியினுடைய செயற்பாடு நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. இறைவனுக்குள் வாழும் அனுபவம் இருந்ததால்தான் யோவானும் இயேசுவை இனங்கண்டு மற்றவர்களுக்கு அடையாளம் காட்டினார் எனவே சாமுவேலைப் போல ஆண்டவரே பேசும் உம் அடியேன் கேட்கிறேன்: என்னும் முழுமையான அர்ப்பணத்தோடு ஆண்டவர் விரும்புவதை நிறைவேற்றி, நம் உடலால் கடவுளுக்குப் பெருமை சேர்ப்போம். அவரின் வெளிப்பாட்டை அறிந்து அவர் வழி செல்ல ஞானத்தையும், அருளையும் வேண்டி இத்திருப்பலியில் பங்கேற்போம்.





முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் சாமுவேலோடு உரையாடுவதை வெளிப்படுத்துகிறது. இந்த இறை-மனித உரையாடலின் உச்சக்கட்டம், ‘ஆண்டவரே பேசும் அடியேன் கேட்கிறேன்’ என்று சாமுவேல் பணிவுடன் கூறுகிறார். இந்த இறைபலியிலே இறைவார்த்தை வழியாக இறைவன் நம்மோடு உரையாடப் போகிறார். இதற்கு நாம் என்ன பதில் தரப்போகிறோம் என்று சிந்தித்தவர்களாய் வாசகத்திற்கு செவிமடுப்போம்.

ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்.
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 3b-10, 19

அந்நாள்களில், கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தார்.அப்போது ஆண்டவர் ' சாமுவேல் ' என்று அழைத்தார். அதற்கு அவன் 'இதோ! அடியேன்' என்று சொல்லி, ஏலியிடம் ஓடி, இதோ! அடியேன் என்னை அழைத்தீர்களா? என்று கேட்டான். அதற்கு அவர் 'நான் அழைக்கவில்லை. திரும்பிச் சென்று படுத்துக்கொள்' என்றார். அவனும் சென்றுபடுத்துக் கொண்டான்.ஆண்டவர் மீண்டும் 'சாமுவேல்' என்று அழைக்க, அவன் ஏலியிடம் சென்று, 'இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா? ' என்று கேட்டான். அவரோ 'நான் அழைக்கவில்லை மகனே! சென்று படுத்துக்கொள்' என்றார். சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை. அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. மூன்றாம் முறையாக ஆண்டவர் 'சாமுவேல்' என்று அழைத்தார். அவன் எழுந்து ஏலியிடம் சென்று 'இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா? 'என்று கேட்டான். அப்பொழுது சிறுவனை ஆண்டவர் தாம் அழைத்தார் என்று ஏலி தெரிந்துகொண்டான். பின்பு ஏலி சாமுவேலை நோக்கி சென்று படுத்துக்கொள். உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ 'ஆண்டவரே பேசும் உம் அடியேன் கேட்கிறேன் ' என்று பதில் சொல் ' என்றார். சாமுவேலும் தம் இடத்திற்குச் சென்று படுத்துக் கொண்டான்.அப்போது ஆண்டவர் வந்து நின்று, 'சாமுவேல் ' சாமுவேல் ' என்று முன்பு போல் அழைத்தார். அதற்கு சாமுவேல்'பேசும், உம் அடியேன் கேட்கிறேன் ' என்று மறு மொழி கூறினான்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்.
திருப்பாடல்40: 2,3. 6-7. 7-8. 9

அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக் கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கி எடுத்தார்; கற்பாறையின் மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார். 3 புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார். பல்லவி

6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். 7ய எனவே, `இதோ வருகின்றேன்.' பல்லவி

7b என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது; 8 என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். பல்லவி

9 என் நீதியை, நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

இவ்வாசகத்தில் திருத்தூதர் பவுல் உடல் இறை ஆலயம், இறைமக்கள் ஒவ்வொரும் தூய ஆவியானவரின் ஆலயம் என்பதையும், இந்த ஆலயத்தை சார்ந்த உடல் உறுப்புகள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்பதை வலியுறுத்தி உடல் சார்ந்த பாவத்தை விளக்க அறிவுரை கூறுகிறார். கவனமுடன் வாசகத்திற்கு செவிமடுப்போம்.

உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 13-15,17-20

சகோதர சகோதரிகளே, உடல் பரத்தைமைக்கு அல்ல, ஆண்டவருக்கே உரியது. ஆண்டவரும் உடலுக்கே உரியவர். ஆண்டவரை உயிர்த்தெழச் செய்த கடவுள் தம் வல்லமையால் நம்மையும் உயிர்த்தெழச் செய்வார். உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்று தெரியாதா? ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார். எனவே பரத்தைமையை விட்டு விலகுங்கள். மனிதர் செய்யும் எப்பாவமும் உடலுக்குப் புறம்பானது. ஆனால் பரத்தைமையில் ஈடுபடுவோர் தம் சொந்த உடலுக்கு எதிராகவே பாவம் செய்கின்றனர். உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல. கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!மெசியாவை, அதாவது அருள்பொழிவு பெற்றவரைக் கண்டோம். அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 35-42

யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்தார்.இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, 'இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி' என்றார். அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர். இயேசு திரும்பிப் பார்த்து 'அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, 'என்ன தேடுகிறீர்கள்? ' என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், 'ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்? ' என்று கேட்டார்கள்.அவர் அவர்களிடம், 'வந்து பாருங்கள்' என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள். யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர்.அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, 'மெசியாவைக் கண்டோம்' என்றார். 'மெசியா' என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, 'நீ யோவானின் மகன் சீமோன். இனி 'கேபா ' எனப்படுவாய் என்றார். 'கேபா' என்றால் 'பாறை ' என்பது பொருள்

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்!

பதில்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

ஆசீரும் அருளும் நிறைந்த அன்புத் தந்தையே இறைவா!

உமது பிரதிநிதிகளாக இருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் மக்களுக்கு ஆறுதலாகவும் ஆசீர்வாதமாகவும்: உலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் புளிக்காரமாகவும் இருந்து பணியாற்ற வேண்டிய பலத்தையும் உடல் நலத்தையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எம் பக்கம் சாய்ந்து எமது மன்றாட்டைக் கேட்டருளும் இறைவா!

பெற்றோர்கள், ஆசான்கள் உமக்குள்என்றும் வாழ்ந்து, பிள்ளைகளுக்கும், மாணவர்களுக்கும் நல்வழி காட்டவும், உமக்காகப் பொறுமையுடன் காத்திருந்து, உமது திருவுளத்தை நிறைவேற்றிடவும் தேவையான அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அரசருக்கெல்லாம் அரசரே எம் இறைவா!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும், துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் , நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆசியும், நல்வாழ்வும் தருகின்ற தந்தையே!

பிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும், பழிவாங்கும் மனநிலையோடும், கண்ணீரோடும் வாழும் அனைத்து குடும்பங்கள்மீதும் மனமிரங்கி அவர்கள் உண்மையான மன மாற்றம் பெற்று, கணவன், மனைவி ஆகியோர் ஒப்புரவாகி திருக்குடும்பமாகிய அன்னை மரியா, தூய யோசேப்பு, இயேசு ஆகியேரைப் பின்பற்றி வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உயர்களுக்கு உயிர் கொடுக்கம் அன்புத் தந்தையே!

நீர் எங்களுக்குக் கொடுத்துள்ள உறவுகளுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆனால் இன்று தவறான போதனைகளாலும், போலியான புரிதல்களாலும், தீய சக்திகளாலும், பொறாமையாலும் பிரிந்திருக்கின்ற எங்கள் உறவுகளை மீண்டும் உமதருளால் புதுப்பித்து, ஒன்றிணைத்து ஒற்றுமையிலும், அன்பிலும், மன்னிப்பிலும் என்றும் வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன் என்றுரைத்த தந்தையே இறைவா!

எமது இளைஞர்கள் அனைவர் மீதும் மனமிரங்கி நீர் உம் திருமகன் இயேசுவை அனைத்து நலன்களாலும் நிரப்பியது போல எம் இளைஞர்களையும் ஆவியின் வல்லமையால் நிரப்பி, ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அருள் வளங்களின் ஊற்றே இறைவா!

இன்றைய நாட்களிலே குடும்பத்தின் புனிதத் தன்மைக்கும் , உறவுக்கும், ஒற்றுமைக்கும் எதிராக இருக்கும் எல்லாச் சக்திகளையும் முறியடித்து: குடும்பங்களிலே அன்பும், ஒற்றுமையும், தோழமையும், புரிந்துணர்வும் நிலைபெற்று: குடும்பங்கள் திருக்குடும்பத்தின் தன்மைகளைக் கொண்டு வாழ அருளாசீர் அளித்திடவேண்டுமென்றும்: பிரிந்திருக்கும் குடும்பங்களை ஒன்று சேர்த்திடவேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நோயாளரின் ஆரோக்கியமே இறைவா!

நாங்கள் அனைவரும் எங்களின் வாழ்வில் கிறிஸ்துவை வெளிப்படுத்த தடையாக இருக்கும் கர்வம், ஆணவம், பொறாமை, போட்டி மனப்பான்மை போன்றவைகளை களைந்து கிறிஸ்துவுக்கு சான்று பகர்கிறவர்களாக திகழவும், எம் பங்கில் இருக்கின்ற நோயாளிகள், முதியவர்கள், கைவிடப்பட்டவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களை உமது அன்பில் திளைக்கவைக்கவும், உலக நாடு முழுவதும் பரவிவரும் பல்வேறுபட்ட கொடிய நோய்கள் இல்லாதொழியவும், இயற்கையாகவும், மனிதராலும் உருவாக்கப்படும் எல்லா அழிவுகளும் இல்லாது போகவும்: மக்கள் அனைவரும் உம்முடைய குரலுக்கே செவிகொடுத்து, உம்மைப் பின்பற்றி வாழவும் அருள் கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

-"ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?"-

'தங்கியிருத்தல்' உண்மையிலே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இன்றைய காலகட்டங்களில் ஆ.டு.யு களை கடத்தி தங்களோடு தங்க வைப்பது இந்த அனுபவம்தானே. ஒருவனோடு தங்கி, உண்டு, உறங்கி சில நாட்கள் இருந்தால் அது அவனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறதல்லவா!.

இத்தகைய பெரும் மாற்றத்தை, புரட்சியை இயேசுவோடு தங்கியிருப்பதும் செய்யவல்லது. இயேசுவோடு தங்கிய யாவரும் இந்த அனுபவம் பெற்றனர். எம்மாவு "எங்களோடு தங்கும்"(லூக்24'29) என்ற அழைப்பு மாபெரும் மாற்றத்தை அச்சீடர்களில் ஏற்படுத்தியது. "சக்கேயு,இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்" (லூக் 19'5) என்ற இயேசுவின் வார்த்தை சக்கேயுவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதும் நமக்கு தெறியும்.

இவ்வாறு தங்க ஆசைப்பட்டு "ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" எனக் கேட்டு அவரோடு தங்கியவருள் ஒருவர் அந்திரேயா. அவர் பெற்ற அனுபவம் "மெசியாவைக் கண்டோம்" என்பது. பெற்ற பெரு மகிழ்ச்சியை பேதுருவோடும் பகிர்ந்துகொள்கிறார். தானும் பேரானந்தம் அடைகிறார். பலரையும் இயேசுவில் மகிழச் செய்கிறார்.

இதேபோல் நாம் மகிழ, பிறரை மகிழ்விக்க, இயேசு தங்குமிடத்தை அறிந்து அவரோடு தங்குவோம். அல்லது நாம் தங்கும் நம் வீட்டை இயேசு தங்கும் வீடாக்குவோம். வாழ்த்துக்கள். ஆசீர்

மன்றாட்டு:

இறைவா, உம்மை நாடி வந்து உம் அன்பையும் இரக்கத்தையும் நாங்கள் பெற்று அனுபவிக்க எங்களுக்கு அருள்தாரும்.