யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 3வது வாரம் வியாழக்கிழமை
2015-01-29




முதல் வாசகம்

எதிர்நோக்கில் நிலையாய் இருந்து, அன்பு செலுத்தி, ஒருவரையொருவர் தூண்டியெழுப்புவோம்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 19-25

சகோதரர் சகோதரிகளே, இயேசுவின் உடலைக் கோவிலின் திரைச்சீலைக்கு ஒப்பிடலாம். இத்திரைச்சீலை வழியாகத் திருத்தூயகத்திற்குள் நுழைய நமக்குத் துணிவு உண்டு. ஏனெனில் அவர் இரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி. மேலும் கடவுளுடைய இல்லத்தின்மீது அதிகாரம் பெற்ற பெரிய குரு ஒருவர் நமக்கு உண்டு. ஆதலால், தீய மனச்சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள்ளமும் தூய நீரில் கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய், நேரிய உள்ளத்தோடும் மிகு உறுதியான நம்பிக்கையோடும் அவரை அணுகிச் செல்வோமாக. நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர். எனவே நாம் எதிர்நோக்கியிருப்பதைப் பற்றித் தயக்கமின்றி அறிக்கையிடுவதில் நிலையாய் இருப்போமாக. அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக. சிலர் வழக்கமாகவே நம் சபைக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. நாம் அவ்வாறு செய்யலாகாது; ஒன்று கூடி ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக. இறுதிநாள் நெருங்கி வருகிறதைக் காண்கிறோம்; எனவே இன்னும் அதிகமாய் ஊக்கமூட்டுவோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!
திருப்பாடல் 24: 1-2. 3-4

மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். 2 ஏனெனில், அவரே கடல்கள்மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. பல்லவி

3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? 4யb கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். பல்லவி

5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். 6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 21-25

அக்காலத்தில் இயேசு மக்களிடம், ``விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின்மீது வைப்பதற்காக அல்லவா? வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்'' என்றார். மேலும் அவர், ``நீங்கள் கேட்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்; இன்னும் கூடுதலாகவும் கொடுக்கப்படும். ஏனெனில், உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்'' என்று அவர்களிடம் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்'' (லூக்கா 6:39)

இயேசு வழங்கிய போதனைகளில் மிக முக்கியமான ஒன்று அன்புக் கட்டளை ஆகும். எல்லா மனிதரையும் அன்புசெய்யக் கேட்ட இயேசு நம் பகைவரையும் நாம் அன்புசெய்திட வேண்டும் என அறிவுறுத்துகிறார். நமக்கு எதிராகச் செயல்படுவோரை நாம் மன்னிக்காவிட்டால் கடவுளிடமிருந்து நாம் மன்னிப்பை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? பிறருக்கு அன்பு காட்டி, அவர்களை மன்னித்து நாம் ஏற்றுக்கொண்டால் நாமும் மன்னிப்பைப் பெற்றுக்கொள்வோம்; அன்புசெய்யத் தவறுவோர் தம்மைப் பிறர் அன்புசெய்ய வேண்டும் எனக் கேட்கலாமா? இதை விளக்குவதற்குத் தான் இயேசு ''நீங்கள் அளந்து கொடுப்பதற்கு ஏற்ப உங்களுக்கும் அளந்து தரப்படும்'' என்றார். நடைமுறை வாழ்க்கையில் இது எவ்வாறு செயல்படும் என்பதைக் காட்ட இயேசு, ''பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்'' என்று கூறினார். இயேசுவின் போதனையைச் சுருக்கமாகத் தருகின்ற இக்கூற்றினைப் ''பொன்விதி'' எனவும் கூறுவர்.

சிலர் தாராளமாக அளந்துகொடுக்கத் தயக்கம் காட்டுவர். பெருமளவில் பிறருக்குக் கொடுத்துவிட்டால் தமக்கு ஒன்றும் இல்லாமல் போய்விடுமே என இவர்கள் அஞ்சுகிறார்கள். ஆனால் நாம் தாராள உள்ளத்தோடு கொடுக்க முன்வர வேண்டும் எனக் கோருகிறார் இயேசு. நம்மிடம் இருக்கின்ற பொருள்களை மட்டுமல்ல, நம் நேரத்தையும் திறமைகளையும் நாம் பிறருக்கு உதவிசெய்வதில் செலவிடும்போது நாம் தாராள உள்ளத்தோடு செயல்படுகிறோம் எனலாம். நாம் அளந்தளிப்பது பிறருக்குத் தாராளமாகச் சென்று சேரவேண்டும் என்றால் நம் உள்ளம் அன்புணர்வினால் நிறைய வேண்டும்; கடவுள் நம் மட்டில் காட்டிய தாராளத்தை நாம் பிறர் மட்டிலும் காட்ட வேண்டும். எனவே, ''உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்'' (லூக்கா 6:36) என இயேசு வழங்கும் அறிவுரையின் அடிப்படையில் நம் உள்ளத்திலும் வாழ்விலும் இரக்கம் என்னும் நற்பண்பு மேலோங்கி விளங்கிட நாம் முயன்றிட வேண்டும். கடவுளிடமிருந்து இரக்கம் பெற்றோர் பிறர் மட்டில் இரக்கம் காட்டத் தவறமாட்டார்கள். ஆனால், கடவுளின் இரக்கத்தை உண்மையாகவே அனுபவத்து, நன்றியோடு ஏற்காதோர் இரக்கத்தின் உள்பொருளையே புரிந்துகொள்ளத் தவறிவிட்டார்கள் என்றுதான் கூறவேண்டும். அவர்கள் பிறர் மட்டில் இரக்கம் காட்டத் தயங்குவார்கள்.

மன்றாட்டு:

இறைவா, எங்களை நீர் மன்னித்து ஏற்பதுபோல நாங்களும் பிறரை மன்னித்து ஏற்றிட அருள்தாரும்.