இரண்டாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 4வது வாரம் சனிக்கிழமை 2015-02-07
முதல் வாசகம்
கடவுள் இயேசு கிறிஸ்து வழியாகத் தமக்கு உகந்ததை நம்மில் செய்தருள்வாராக!
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 13: 15-17, 20-21
சகோதரர் சகோதரிகளே, இயேசு வழியாக எப்போதும் நாம் கடவுளுக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துவோமாக. அவருடைய பெயரை அறிக்கையிடுவதன் வழியாக நம் உதடுகள் செலுத்தும் காணிக்கையே இப்புகழ்ச்சிப் பலியாகும். நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். இவ்வகைப் பலிகளே கடவுளுக்கு உகந்தவை.
உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்; அவர்களுக்குப் பணிந்திருங்கள். அவர்கள் உங்களைப் பற்றிக் கணக்குக் கொடுக்க வேண்டியிருப்பதால் உங்கள் நலனில் விழிப்பாய் இருக்கிறார்கள். இப்பணி அவர்களுக்கு மகிழ்ச்சியுள்ளதாய் இருக்கும்படி நடந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு மனத்துயர் தராதீர்கள். அவர்களுடைய துயரம் உங்களுக்கு நலம் பயக்காது.
என்றுமுள்ள உடன்படிக்கையின் இரத்தத்தால், ஆடுகளின் பெரும் ஆயரான நம் ஆண்டவர் இயேசுவை இறந்தோரிடமிருந்து எழுப்பியவர் அமைதியை அருளும் கடவுளே. அவர் தம் திருவுளத்தை நீங்கள் நிறைவேற்றும்படி, எல்லா நன்மையும் செய்வதற்கு உங்களை ஆயத்தப்படுத்தி, இயேசு கிறிஸ்து வழியாகத் தமக்கு உகந்ததை நம்மில் செய்தருள்வாராக! இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
திருப்பாடல் 23: 1-3. 3-4. 5. 6
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 2 பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். 3ய அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; பல்லவி
3 தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; 4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி
5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி
6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர் அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-34
அக்காலத்தில் திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவை எல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள்.
அவர் அவர்களிடம், ``நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்'' என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள்.
பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்துகொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தனர். அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார்.
அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப் போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவுகொண்டு,
இயேசு அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்'' (மாற்கு 6:34)
கடவுளை அரசர், தலைவர், வழிகாட்டி, போர்வீரர் என்னும் பல உருவகங்கள் வழியாக வெளிப்படுத்துகிறது திருவிவிலியம். இந்த உருவகங்களில் சிறப்பான ஒன்று ''ஆயர்'' என்பதாகும். கடவுளை ஆயர் என உருவகிக்கின்ற ஒரு சிறப்பு மிக்க பகுதி 23ஆம் திருப்பாடல் ஆகும். ''ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்...'' எனத் தொடங்குகின்ற இப்பாடலில் கடவுள் தம் மக்கள்மீது காட்டுகின்ற அருளும் அன்பும் போற்றப்படுகின்றன (திபா 23:6). ஆடுகளை மேய்த்தலும் அவற்றைப் பராமரித்தலும் இஸ்ரயேலில் சாதாரணமாக நிகழ்ந்தது. ஆயர் தம் ஆடுகளை அன்போடு பராமரிப்பது கடவுள் தம் மக்களோடு பகிர்ந்துகொள்கின்ற அன்புக்கு உருவகமாயிற்று. இயேசு இந்த உருவகத்தைத் தமக்குப் பொருத்தியுரைக்கிறார். தம்மைத் தேடி வந்த மக்களைக் கண்டு இயேசு ''பரிவுகொண்டார்'' (மாற் 6:34). இப்பரிவு எதில் அடங்கியது என நாம் சிந்திக்கலாம்.
''பரிவு'' என்னும் பண்பைக் குறிக்கப் பயன்படும் சொல் ஓர் ஆழ்ந்த கருத்தை உள்ளடக்கியது. பிற மனிதர் துன்பப்படுவதைக் கண்டு அவர்களுடைய துன்பத்தில் நாமும் பங்கேற்று, நம் உள்ளத்தின் ஆழத்தில் அவர்களோடு நம்மை ஒன்றுபடுத்திக் கொண்டு, உணர்வு நிலையில் அவர்களோடு இணைவது ''பரிவு'' என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது. இயேசுவின் உள்ளம் மனித துன்பத்தைக் கண்டு உருகியது. கடவுளின் அன்பை நம்மோடு பகிர்ந்துகொள்ள வந்த இயேசு நம்மைப் போல மனித உணர்வுகளைத் தம் வாழ்வில் அனுபவித்தவர். எனவே அவர் நம் துன்பங்களிலும் இன்பங்களிலும் தம்மை ஒன்றுபடுத்தத் தெரிந்தவர். இவ்வாறு மனித உணர்வுகளோடு தம் உணர்வுகளை இணைக்கத் தெரிந்த இயேசு மக்கள் கூட்டத்திற்கு அளித்த உதவி என்ன? இயேசு ''அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்'' (மாற் 6:34). இயேசு மனிதர் மீது எதையும் திணிக்க வரவில்லை. அவர் மனித சுதந்திரத்தை எப்போதும் மதிக்கிறவர். மக்கள் கடவுளிடமிருந்து வருகின்ற உண்மையைத் தெரிந்துகொள்ளவேண்டும், அவ்வாறு தெரிந்துகொண்ட உண்மையை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் - இதுவே இயேசு மக்களிடமிருந்து எதிர்பார்த்தது. ஆகவே, அவர் மக்களுக்குக் ''கற்பித்தார்''. இயேசுவிடமிருந்து கற்றதை நாம் வாழ்வில் கடைப்பிடிக்க அழைக்கப்படுகிறோம். அவரைப் போல நாமும் பரிவுடைய மக்களாக மாறுவதே நாம் அவருடைய சீடர்களாக வாழ்கிறோம் என்பதற்கு அடையாளம் ஆகும்.
மன்றாட்டு:
இறைவா, எங்கள் உள்ளத்திலும் வாழ்விலும் பரிவு துலங்கிட அருள்தாரும்.
|