யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 1வது வாரம் புதன்கிழமை
2015-02-25




முதல் வாசகம்

பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர்.
யோனா நூலிலிருந்து வாசகம் 3:1-10

1 இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர்,2 நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை3 அங்குள்ளோருக்கு அறிவி என்றார். அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார். நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக்4 கடக்க மூன்றுநாள் ஆகும். யோனா நகருக்குள் சென்ற, ஒரு நாள் முழுதும் நடந்தபின், உரத்த குரலில், இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும் என்று அறிவித்தார்.5 நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர்.6 இந்தச் செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக்கொண்டு, சாம்பல் மீது உட்காhந்தான்.7 மேலும் அவன் ஓர் ஆணை பிறப்பித்து அதை நினிவே முழுதும் பறைசாற்றச் செய்தான். இதனால் அரசரும் அரச அவையினரும் மக்கள் அனைவருக்கும் அறிவிப்பதாவது: எந்த மனிதரும் உணவைச் சுவைத்துக்கூடப் பார்க்கக் கூடாது. ஆடு, மாடு முதலிய விலங்குகளும் தீனி தின்னவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது.8 மனிதரும் விலங்குகளும் சாக்கு உடை உடுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்: தம் தீய வழிகளையும், தாம் செய்துவரும் கொடுஞ்செயல்களையும் விட்டொழிக்க வேண்டும்.9 இவ்வாறு செய்தால், கடவுள் ஒருவேளை தம் மனத்தை மாற்றிக் கொள்வார்: அவரது கடுஞ்சினமும் தணியும்: நமக்கு அழிவு வராது.10 கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்: தாம் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை.
திருப்பாடல்கள் 51:1-2,10-12,16-17

கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.2 என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்.

10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்.

16 ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.17 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! யோனாவின் அடையாளத்தைத்தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11:29-32

29 மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது: ' இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத்தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது.30 யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார்.31 தீர்ப்புநாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா!32 தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால் இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார்'' (லூக்கா 11:30)

யோனா இறைவாக்கினர் பற்றிய கதை விவிலியத்தில் ''யோனா'' என்னும் நூல் வடிவத்தில் உள்ளது. யோனா எந்த விதத்தில் ''அடையாளமாய்'' இருந்தார் எனப் பார்க்கும்போது, மூன்று கருத்துக்கள் வெளிப்படுகின்றன. முதலில் யோனாவைப் பெரியதொரு மீன் விழுங்கிற்று; கடவுளின் கட்டளைப்படி யோனாவை உயிருடன் கரையிலே கக்கிற்று. இதை அடையாளமாகக் கருதினால் இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி இதனால் குறிக்கப்படுகிறது எனலாம். இரண்டாவது, யோனா நினிவே நகருக்குச் சென்று அங்கு வாழ்ந்த மக்கள் தங்கள் தீய வழிகளை விட்டுவிட்டு மனமாற்றம் அடைந்து, கடவுளிடம் திரும்பவேண்டும் என போதித்ததை நாம் அடையாளமாகக் கருதலாம். இயேசுவும் மக்கள் மனமாற்றம் பெற்று இறையாட்சியில் புக வேண்டும் என போதித்தார். மூன்றாவது, யோனா நினிவே மக்கள் மீது கடவுளின் தண்டனை வரும் எனப் போதித்ததை அடையாளமாகக் கொள்ளலாம். அப்படியென்றால், கடவுளாட்சியை ஏற்காதோர் கடவுளின் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாவார்கள் என இயேசு கூறியதைக் குறிப்பதாக விளக்கலாம்.

இயேசு குறிப்பிடுகின்ற ''தலைமுறையினர்'' யார்? முதலில் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்களே அவர்கள் எனலாம். மேலும், லூக்கா நற்செய்தி எழுதப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் அங்கே குறிக்கப்படுகிறார்கள் எனலாம். தொடர்ந்து, இக்கால உலகில் வாழ்கின்ற நாமும் அத்தலைமுறையினருள் அடங்குவோம் எனலாம். எனவே, இயேசுவின் சொற்கள் பண்டைக் காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பொருந்தும். அந்த இரு காலங்களையும் நாம் மனத்தில் கொண்டு இயேசுவின் போதனையை இக்காலத்தில் வாசிக்கும்போது நாமும் இயேசு குறிப்பிட்ட ''தலைமுறையினராக'' மாறுகிறோம். நமக்கும் இயேசு அடையாளமாக இருக்கிறார். அவர் சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்து நமக்குத் தம் உயிரில் பங்களிக்கிறார் என்பது நம் நம்பிக்கை. மேலும் நாம் மனமாற்றம் பெற்ற மக்களாக மாறி இறையாட்சியின் மதிப்பீடுகளை நம் வாழ்வின் அடிப்படையாகக் கொண்டிட அழைக்கப்படுகிறோம். தொடர்ந்து, நாம் தவறிழைத்தாலும் நம்மை இடையறாது அணுகிவந்து நம்மில் நற்சிந்தனைகளையும் நற்செயல்களையும் தூண்டியெழுப்புகின்ற சக்தியாக இயேசு உள்ளார். இந்த வேறுபட்ட விதங்களில் நாம் கடவுளின் உடனிருப்பை நம் வாழ்வில் உணர்ந்து, அதிலிருந்து பிறக்கும் மதிப்பீடுகளுக்கு ஏற்ப வாழ்ந்திட வேண்டும். இயேசு என்னும் அடையாளம் நம் வாழ்வை மாற்றியமைக்கின்ற வெற்றிச் சின்னமாக மாறிட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் மனமாற்றம் பெற்று உம்மை விடாது பற்றிக்கொள்ள அருள்தாரும்.