இன்று தவக்காலம் மூன்றாம் ஞாயிறு.
திருவழிப்பாட்டு ஆண்டு B (08-03-2015)
 />
 />
 />
 />
 />
 />
 />
 />
 />
 />
திருப்பலி முன்னுரை -1
இறைமகன் இயேசுவில் அன்பு நிறை சகோதரர்களே சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வணக்கத்தை உரித்தாக்குகிறேன்.
தவக்கால மூன்றாம் வாரத்தில் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்க அணியமாயிருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன்.
தூயவர் என்று போற்றப்படும் இறைவன் மாசுகொண்டுள்ள உள்ளங்களை, மாந்தரைத் தூயவராக்கித் தன்னுடன் மீண்டும் இணைத்துக்கொள்ளவே விரும்புகிறார்.
தூயவரான அவர் இருக்குமிடத்தில் மாசுகள் இருக்க வழியில்லை.
மாசுள்ளதைத் தூய்மையாக்கி அங்கு அவர் அமர்கிறார்.
அவர் இருக்குமிடத்தில் தூய்மையும் மாசின்மையுமே இருக்கவேண்டும் என்பதை இன்றைய வழிபாடு நமக்கு உணர்த்துகிறது.
எனவே இறைவனுடன் இணைந்திருக்க விரும்பும் நாம் தூய்மை பெற வேண்டும் என்ற சிந்தனைகளை இன்றைய வழிபாட்டு அருள்மொழிகளோடு
இணைத்து ஆய்வு செய்து வாழ்வாக்க முயல்வோம்.
அவற்றின் வழியாக நமக்கு வரும் அருள் ஆசீர்வாதங்களைப் பெற்றிட வரம் கேட்ட நம்மை அர்ப்பணித்தவர்களாய் இத் திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
முதல் வாசக முன்னுரை
அன்புக்குரியவர்களே,
யாவே இறைவன் இஸ்ரயேல் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையின் அடையாளமாக பத்துக்கட்டளைகளை கொடுக்கிறார்.
பத்துக்கட்டளைகள் உடன்படிக்கை என்னும் மோதிரத்தில் பதிக்கப்பட்ட வைரக்கற்களாகும்.
அவற்றை மீறுவது பாவம் மட்டுமல்ல மாறாக உடன்படிக்கையை மீறுவதாகும் என்ற சிந்தனையோடு இந்த வாசகத்தை கேட்போம்.
திருச்சட்டம் மோசே வழியாக அளிக்கப்பெற்றது.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 20: 1-17
மோசே மக்களிடம் கூறியது: கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே: நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர். என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.
மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக் கொள்ளமாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்.
மாறாக என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன். உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே; ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார். ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய். ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள்.
எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப் பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.
ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வுநாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட. கொலை செய்யாதே.
விபசாரம் செய்யாதே. களவு செய்யாதே. பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே. பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே; பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: ஆண்டவரே, நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன.
திருப்பாடல் 19: 7. 8. 9. 10
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர்அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. பல்லவி
8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளி மயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. பல்லவி
9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. பல்லவி
10 அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை. பல்லவி
இரண்டாம் வாசகம்
இரண்டாம் வாசக முன்னுரை
அன்புக்குரியவர்களே,
இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட மனிதனின் சொல்லும், செயலும் இறைவனை மட்டுமே நாடி இருக்கவேண்டும்.
ஆனால் நாம் பலவற்றை நாடிக்கொண்டிருக்கிறோம் என்றும்,
கடவுளை நாடுவோருக்கு வல்லமையும், ஞானமும் கிடைக்கும் என்று கூறும் இவ்வாசகத்தைக் கேட்போம்.
சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவையே பறைசாற்றுகிறோம். அவரது சிலுவை யூதருக்குத் தடைக்கல்; அழைக்கப்பட்டவருக்கோ கடவுளின் ஞானம். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 22-25
சகோதரர் சகோதரிகளே, யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள்.
ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக் கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது.
ஆனால் அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார். ஏனெனில் மனித ஞானத்தை விடக் கடவுளின் மடமை ஞானம் மிக்கது; மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது. - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா!தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.
அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-25
அக்காலத்தில் யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்; கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்; அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப் போட்டார்.
அவர் புறா விற்பவர்களிடம், ``இவற்றை இங்கிருந்து எடுத் துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்'' என்று கூறினார்.
அப்போது அவருடைய சீடர்கள், ``உம் இல்லத்தின்மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும்'' என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள்.
யூதர்கள் அவரைப் பார்த்து, ``இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?'' என்று கேட்டார்கள்.
இயேசு மறுமொழியாக அவர்களிடம், ``இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்'' என்றார்.
அப்போது யூதர்கள், ``இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பிவிடுவீரோ?'' என்று கேட்டார்கள். ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார். அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்து மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.
பாஸ்கா விழாவின்போது இயேசு எருசலேமில் இருந்த வேளையில் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டு பலர் அவரது பெயரில் நம்பிக்கை வைத்தனர்.
ஆனால் இயேசு அவர்களை நம்பிவிடவில்லை; ஏனெனில் அவருக்கு அனைவரைப்பற்றியும் தெரியும். மனிதரைப் பற்றி அவருக்கு யாரும் எடுத்துச்சொல்லத் தேவையில்லை. ஏனெனில் மனித உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது: அது புத்துயிர் அளிக்கின்றது.
பதில்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்க நியமங்களைத் தந்த தந்தையே இறைவா!
எளியவர்களான எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவருக்கும் புத்துயிரும், ஞானமும் அளித்து,
அவர்கள் உலக ஞானத்தை நாடாது, அழைக்கப்பட்ட அவர்களுக்கு கடவுளின் ஞானமாக விளங்கும் இயேசுவின்
சிலுவை தரும் பாடத்தை ஆழமாகக் கற்றுப் பணி செய்ய வேண்டிய அருளை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
என்றும் எம் சார்பாக செயலாற்றம் தந்தையே இறைவா!
நாங்கள் ஒவ்வொரும் இத் தவக்காலத்தில் உறவுகளைப் புதுப்பித்துக்கொண்டு,
அடுத்தவரின் நல் வாழ்விற்காக எம்மையே அர்ப்பணித்து,
உமக்கேற்ற அர்த்தமுள்ள வாழ்வு வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைககைக் கொண்டுள்ள தந்தையே இறைவா!
நாங்கள் ஒவ்வொரும் இத் தவக்காலத்தில் எம் கிறிஸ்தவ வாழ்வின் தன்மையை உணர்ந்து எந்நாளும் நிலைத்திருக்கும்
உமது நெறிமுறைகளின் பொருளை சரியான முறையிலே விளங்கிக் கொண்டு,
அவற்றைச் சரியாகக் கடைப்பிடித்து வாழும் வரத்தை அளித்திடம், கடின நோய்களினால் பாதிக்கப்பட்டு வீடுகளிலும்,
மருத்துவ மனைகளிலிருந்தும் வேதனைப்படும் அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம்.
மக்களை வாட்டி வதைக்கும் எல்லா நோய்களும் அகன்று,
அவர்கள் சுகமடையவும், அவர்களுடைய வேதனைகளைத் தணித்தருளவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அருள் வாழ்வை அள்ளி வழங்கும் இறைவா!
இன்றைய நாளில் இறைவார்த்தை யூடாக எமக்கு நீர் தந்திருக்கும் உமது செய்தியையும்,
விருப்பத்தையும் , சித்தத்தையும், வழிகாட்டுதல்களையும் நாம் சரியான விதத்திலே புரிந்துகொண்டு,
உமது வாக்குறுதிகளில் நம்பிக்கை கொண்டு, தீமைகளை விட்டுவிட்டு மனமாற்றமடைந்து
உமது விருப்பப்படி நடக்க வேண்டிய ஞானத்தை எமக்குத் தந்தருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
தாயும் தந்தையுமான எம் இறைவா!
இங்கே குழுமியுள்ள ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்காகவும், இங்கே வரஇயலாதவர்களுக்காகவும் மற்றும்
இங்கே வரமனமில்லாதவர்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். நல்ல ஆயர்களாக,
நாங்கள் அனைவரும் ஒரே தந்தையின் பிள்ளைகள் என்ற மனநிலையோடு
ஒரே மந்தையில் என்றுமே வாழ வரமருள வேண்டுமென்று தாயும் தந்தையுமான எம் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
|
இன்றைய சிந்தனை
''இயேசு கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்;
அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்'' (யோவான் 2:14-15)
''கோவிலைத் தூய்மைப்படுத்துதல்'' என அழைக்கப்படும் நிகழ்ச்சியை நான்கு நற்செய்தியாளர்களும் பதிவுசெய்துள்ளனர் (காண்க: மத் 21:12-13; மாற் 11:15-17; லூக் 19:45-46). ஆனால் மற்ற மூன்று நற்செய்தியாளர்களும் இந்நிகழ்ச்சி இயேசுவின் பணிக்காலத்தின் இறுதிக் கட்டத்தில் நடந்ததாகக் கூறுவர். யோவான் மட்டும் இயேசுவின் பணிக்காலத்தின் தொடக்கத்திலேயே இந்நிகழ்ச்சி நடந்ததாகக் குறித்துள்ளார். ஏன் இந்த வேறுபாடு? யோவான் நற்செய்தி ஒரு குறிப்பிட்ட இறையியல் பின்னணியில் எழுதப்பட்டது. அதாவது, இயேசுவின் பணி தொடங்கிய நாளிலிருந்தே அவரை எதிர்த்தவர்கள் இருந்தார்கள்; இயேசு தம் பணியைத் தொடங்கிய நாளிலிருந்தே தாம் ஒரு புதிய ஒழுங்குமுறையை இவ்வுலகில் நிலைநாட்ட வந்ததாக அறிவிக்கிறார். அவர் கானாவில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தண்ணீரைச் சுவைமிகு திராட்சை இரசமாக மாற்றினார். யூத சமயம் என்னும் பழைய ஒழுங்குமுறை மாறி ஒரு புதிய ஒழுங்குமுறை விரைவில் வருகிறது என அறிவித்தார். இயேசு கொணர்வது சுவைமிகுந்த திராட்சை இரசம். அது மக்களுக்கு மகிழ்ச்சி தருகின்ற ஒன்றாகும். மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியை அறிவிக்கவே இயேசு வந்தார். தொடர்ந்து, யூத சமயத்தின் ஒரு முக்கிய அம்சமாக விளங்கிய எருசலேம் கோவிலில் இயேசு தம் அதிகாரத்தை நிலைநாட்டுகிறார். அக்கோவிலை இயேசு ''என் தந்தையின் இல்லம்'' என அழைக்கின்றார் (யோவா 2:16). அந்த இல்லம் தூய்மையானது. அதை ஒரு சந்தைபோல ஆக்கிவிட்டவர்களை இயேசு கடிந்துகொள்கிறார்.
மேலும் இயேசு தம்மையே எருசலேம் கோவிலுக்கு ஒப்பிட்டுப் பேசுகின்றார்: ''தம் உடலாகிய கோவில் பற்றி அவர் பேசினார்'' (யோவா 21). கோவில் என்பது கடவுள் உறைகின்ற இடம் என்றால் இயேசு தம் உடலில் (தம்மில்) கடவுள் உறைகின்றார் என்றுரைத்தார். இனிமேல் கடவுளைத் தேடி மக்கள் கோவிலுக்குச் செல்ல வேண்டியதில்லை; கடவுள் தம் மகன் இயேசுவிடம் முழுமையாக உறைகின்றார். இதைக் கேட்ட ''யூதர்கள்'' கோபமுற்றனர். இயேசு, ''இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்'' என்று கூறியதைக் கேட்ட அவர்கள் அதிர்ச்சியடைந்திருக்க வேண்டும். எனவேதான் தங்கள் கோவிலின் பெருமையை அவர்கள் எடுத்துரைத்தார்கள். எருசலேம் கோவிலைப் புதுப்பித்து விரிவுபடுத்தும் பணி கி.மு. 20-19 அளவில் தொடங்கியது. அப்பணி கி.பி. 60களில் தான் நிறைவடைந்தது. பணி தொடங்கிய ஆண்டிலிருந்து ''நாற்பத்தாறு ஆண்டுகள்'' (காண்க: யோவா 2:20) ஆகும்போது இயேசு ''கோவிலைத் தூய்மைப்படுத்தினார்'' என்றால் அது கி.பி. 28 அளவில் நிகழ்ந்திருக்க வேண்டும். இயேசுவின் உடல் கடவுள் உறைகின்ற கோவில் என்னும் உண்மையைச் சீடர் இயேசு சிலுவையில் இறந்து அதன் பின் உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியின் ஒளியில் முழுமையாக அறிந்துகொண்டார்கள்.
மன்றாட்டு:
இறைவா, நீர் எங்கள் இதயத்தில் கோவில் கொண்டிருக்கின்றீர் என நாங்கள் உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும்.
|