இன்று குருத்து ஞாயிறு.

திருவழிப்பாட்டு ஆண்டு B (29-03-2015)

சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். 
எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்./> சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். 
எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்./> சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். 
எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்./> சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். 
எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்./>


திருப்பலி முன்னுரை -1

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்: தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக; இயேசு கிறிஸ்து ஆண்டவர்; என எல்லா நாவுமே அறிக்கையிடும். அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு. இயேசுவின் பிரசன்னத்தில் விசுவாசத்தோடும், வேண்டுதல்களோடும்; ஒன்று கூடியுள்ள நாம் புனித வாரத்திற்குள் நுழைகின்றோம்.

எருசலேம் நகரை நோக்கிய இயேசுவின் பயணம் அவரது எளிமையை, இறைத் தந்தையின் மீட்பின் திட்டத்திற்கு தன்னையே வெறுமையாக்கும் அவரது மனத் தாழ்ச்சியை வெளிப்படுத்துகின்றது.

யூத மக்கள் திரள் மரக்கிளைகளை ஏந்தி, இயேசுவை ஆரவாரமாக வாழ்த்துக்கள் பேரொலியுடன் வரவேற்ற போதும் வெகுவிரைவிலேயே அவர்களின் ஆரவாரம் அர்த்தமற்றதாகிப் போனது: அவரைச் சிலுவையில் அறையும் என்று எதிர் அலையாக மாறியது. இவை அனைத்திற்கும் மத்தியில், எல்லாம் இறைத் தந்தையின் திருவுளத்தின் படியே நடைபெறட்டும் என்று உலக மீட்புக்காக தன்னையே இழந்திட தயாராக இருந்தார் இயேசு கிறிஸ்து.

நமக்கும் இயேசுவின் மன நிலைமை வேண்டும். மக்கள் நம்மைப்போற்றினாலும், தூற்றினாலும் இறைத் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவது மட்டுமே நம் இலட்சியமாக இருந்திட இயேசுவுடன் இணைவோம். இப்புனித வாரத்தில் அவரது பாடுகளுடன் நம் துன்பங்களும், சவால்களும் மீட்பின் ஆற்றலாய் மாறிட இறைத் தந்தையிடம் வரம் கேட்ட புனித வார திரு வழிபாடுகளில் பங்கேற்போம்.

திருப்பலி முன்னுரை - 2

இறைத்திருமகன் இயேசுக் கிறிஸ்துவில் அன்பு கொண்டுள்ள இறைமக்களே! உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்தைக் கூறிக்கொள்வதில் பெரிதும் மகிழ்கிறேன். இன்று குருத்தோலை ஞாயிறு. இறை இயேசுவின் தூய பெயரில் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! நாற்பது நாள் தவத்தின் செயல்களில் ஈடுபட்டிருந்த நாம் இன்று புனித வாரத்தின் தொடக்கத்தில் இருக்கிறோம்.

புனித வாரத்தின் தொடக்கமாகவும், நுழைவு வாயிலாகவும் குருத்து ஞாயிறு அமைகின்றது. தாவீதின் மகனுக்கு ஓசான்னா முழக்ககங்களோடும், ஒலிவ கிளைகளை கைகளிலே ஏந்திய வண்ணமாய் எபிரேயர் எருசலேமிற்குள் வீரப்பயணம் மேற்கொள்கிறார்கள். இந்தப் பயணம், தான் இயேசு இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதாகவும், மீட்பின் முதல் படியாகவும் அமைகிறது. ஈராயிரம் ஆண்டுகளாய் விடுதலைக்காய், வாழ்வின் விடியலுக்காய் ஏழை எளிய மக்களுக்கு நம்பிக்கையும், புத்துயிரையும் கொடுப்பதாகவும் அமைகிறது. அத்தகைய நாளை நினைவு கூறும் இன்று நாமும் குருத்தோலைகளை உயர்த்தி கொண்டு பவனியில் பங்கெடுக்க இருக்கிறன்றோம். பட்டங்களையும், பதவிகளையும் எதிர்பார்த்து இயேசுவின் பின் சென்றால் அவரின் பயணத்தில் நிச்சயம் நமக்கு இடமிருக்காது. இயேசுவைப்போல நாமும் தன்னலப் போர்வையை தகர்த்தும், ஆணவத்தை அழித்தும் இயேசுவின் பின் பயணிப்போம். அப்போது இப்புனித வாரம் நம்மை புனிதர்களாக நிச்சயம் மாற்றும் என்ற மனநிலையோடு இத்திருவழிபாட்டில் பங்கெடுப்போம். இத்திருப்பவனியின் வழியாக இயேசுவோடு கல்வாரிக்குப் பயணமாவோம்.

திருப்பலி முன்னுரை - 3

கிறிஸ்துவுக்குரியவர்களே,

நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால் திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு திருவழிபாட்டு நிகழ்வுகளுக்கு உங்களை வரவேற்கின்றோம். "தாவீதின் மகனுக்கு ஓசன்னா!" - "ஆண்ட வரே எங்களை விடுவித்தருளும்!" என்ற ஆர்ப்பரிப்போடு தொடங்கிய இயேசுவின் எருசலேம் பயணம், "பிறரை விடுவித்தான்; தன்னையே விடுவிக்க இயலவில்லை" என்ற ஏளனப் பேச்சோடு முடிவுக்கு வந்ததை இன்று நாம் தியானிக்க இருக்கிறோம். அமைதியின் அரசராய் கழுதை மீது பவனி வந்த இயேசு, கடவுளின் ஆட்டுக்குட்டியாய் கல்வாரியில் தம்மை பலியாக்குவதை காண்கிறோம். மரக்கிளைகளை வெட்டிப்போட்டு, தங்கள் மேலாடைகளை வழியில் விரித்து இயேசுவை வரவேற்ற அதே இஸ்ரயேல் மக்கள், அவரது ஆடைகளைக் களைந்து சிலுவை மரத்தில் தொங்கவிட்ட கொடூரக் காட்சியை நினைவுக்கு கொண்டு வருகிறோம். இறைத்தந்தையின் திட்டப்படி இறைவாக்கினர் உரைத்தது நிறை வேறுமாறு, நமது பாவங்களுக்காக இறைமகன் இயேசு மரணம் வரை கீழ்ப்படிந்தார். கடவுளின் திட்டத்தை செயல்படுத்த நம்மை முழு மனதோடு அர்ப்பணிக்கும் வரம் கேட்டு, இந்த திருவழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

கிறிஸ்துவுக்குரியவர்களே,

இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசாயா கிறிஸ்துவின் திருப்பாடுகளை முன்னறிவிப்பதை காண்கிறோம். கிறிஸ்துவின் தாழ்ச்சியும் பொறுமையும் இங்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுகிறது. அடிப்போருக்கு தன் முதுகையும், தாடியைப் பிடுங்குவோருக்கு தன் தாடையையும் அவர் ஒப்புவித்தார். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோருக்கும் தன் முகத்தை மறைக்கவில்லை. தந்தையாம் இறைவனில் நம்பிக்கை கொண்டவராய் தன்னை சிலுவை மரணத்துக்கு கையளித்த இயேசுவை பின்பற்றி வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு நாம் செவியேற்போம்.

நிந்தனை செய்வோர்க்கு என் முகத்தை மறைக்கவில்லை. இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 4-7

நலிந்தவனை நல் வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பதுபோல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார். ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார். நான் கிளர்ந்தெழவில்லை. விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?
திருப்பாடல் 22: 7-8. 16-17. 18-19. 22-23

என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து, 8 `ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்; தாம் அன்புகூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்' என்கின்றனர். பல்லவி

16 தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக்கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள். 17ய என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம். பல்லவி

18 என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக்கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர். 19 நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலையில் போய் விடாதேயும்; என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். பல்லவி

22 உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 23 ஆண்டவருக்கு அஞ்சுவோரே; அவரைப் புகழுங்கள்; யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்; இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள். பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

கிறிஸ்துவுக்குரியவர்களே,

இன்றைய இரண்டாம் வாசகமும், நம் ஆண்டவர் இயேசுவின் தாழ்ச்சியை பற்றி பேசுகிறது. கடவுள் வடிவில் விளங்கிய அவர், தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார் என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகள் நம்மை சிந்திக்க தூண்டுகின்றன. சிலுவை மரணம் வரை இறைத்தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றத் துணிந்த இயேசுவைப் பின்பற்ற நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவின் சிலுவை வழியை தொடர்ந்து சென்று, அவரது மாட்சியில் பங்குபெற வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு செவியேற்போம்.

கிறிஸ்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்; எனவே கடவுளும் கிறிஸ்துவை உயர்த்தினார்
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 6-11

கடவுள் வடிவில் விளங்கிய கிறிஸ்து, கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக `இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் 14: 1-15: 47

பாஸ்கா என்னும் புளிப்பற்ற அப்ப விழா நிகழ இன்னும் இரண்டு நாள்கள் இருந்தன. தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவை எவ்வாறு சூழ்ச்சியாய்ப் பிடித்துக் கொலை செய்யலாம் என்று வழிதேடிக்கொண்டிருந்தனர்; ஆயினும், `விழாவின்போது வேண்டாம்; ஒருவேளை மக்களிடையே கலகம் ஏற்படக் கூடும்' என்று நினைத்தனர். இயேசு, பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார். அங்கே பந்தியில் அமர்ந்திருந்தபோது இலாமிச்சை நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் வந்தார். அந்தத் தைலம் கலப்பற்றது, விலையுயர்ந்தது. அவர் அப்படிகச் சிமிழை உடைத்து இயேசுவின் தலையில் ஊற்றினார். ஆனால் அங்கிருந்த சிலர் கோபமடைந்து, ``இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்? இதை முந்நூறு தெனாரியத்துக்கும் மேலாக விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே,'' என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அப்பெண்மீதும் சீறி எழுந்தனர். இயேசு அவர்களிடம், ``அவரை விடுங்கள். ஏன் அவருக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? அவர் எனக்குச் செய்தது முறையான செயலே. ஏனெனில் ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கின்றார்கள். நீங்கள் விரும்பும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்ய முடியும். ஆனால் நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை. இவர் தம்மால் இயன்றதைச் செய்தார். என் அடக்கத்திற்காக இவர் முன்னதாகவே என் உடலுக்குத் தைலம் பூசிவிட்டார். உலகம் முழுவதும் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இவர் செய்ததும் எடுத்துக் கூறப்படும்; இவரும் நினைவுகூரப்படுவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று கூறினார். பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் நோக்கத்தோடு தலைமைக் குருக்களிடம் சென்றான். அவர்கள் அதை அறிந்து மகிழ்ச்சியுற்று அவனுக்குப் பணம் கொடுப்பதாக வாக்களித்தனர். அவனும் அவரை எப்படிக் காட்டிக் கொடுக்கலாம் என்று வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான். புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக் குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், ``நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?'' என்று கேட்டார்கள். அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்: ``நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்து கொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், `` `நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?' என்று போதகர் கேட்கச் சொன்னார் எனக் கூறுங்கள். அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள்.'' சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். மாலை வேளையானதும் இயேசு பன்னிருவரோடு வந்தார். அவர்கள் பந்தியில் அமர்ந்து உண்டுகொண்டிருந்தபொழுது இயேசு, ``என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார். அவர்கள் வருத்தமுற்று, ஒருவர் பின் ஒருவராக ``நானோ? நானோ?'' என்று அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள். அதற்கு அவர், ``அவன் பன்னிருவருள் ஒருவன்; என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவன். மானிடமகன் தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளவாறே போகிறார். ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு! அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்'' என்றார். அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, ``இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்'' என்றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர். அப்பொழுது அவர் அவர்களிடம், ``இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார். அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள். இயேசு அவர்களிடம், ``நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள். ஏனெனில், `ஆயரை வெட்டுவேன்; அப்போது ஆடுகள் சிதறடிக்கப்படும்' என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால் நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்குமுன்பே கலிலேயாவுக்குப் போவேன்'' என்றார். பேதுரு அவரிடம், ``எல்லாரும் ஓடிப்போய்விட்டாலும் நான் அவ்வாறு செய்யமாட்டேன்'' என்றார். இயேசு அவரிடம், ``இன்றிரவில் சேவல் இரு முறை கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உனக்குச் சொல்கிறேன்'' என்றார். அவரோ, ``நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்'' என்று மிக அழுத்தமாகச் சொன்னார். அப்படியே அவர்கள் அனைவரும் சொன்னார்கள். பின்னர் இயேசுவும் சீடர்களும் கெத்சமனி என்னும் பெயர் கொண்ட ஓர் இடத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் தம் சீடரிடம், ``நான் இறைவனிடம் வேண்டும்வரை நீங்கள் இங்கே அமர்ந்திருங்கள்'' என்று கூறி, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரைத் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் திகிலும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். அவர், ``எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது; நீங்கள் இங்கேயே தங்கி விழித்திருங்கள்'' என்று அவர்களிடம் கூறினார். சற்று அப்பால் சென்று தரையில் விழுந்து, முடியுமானால் அந்த நேரம் தம்மைவிட்டு விலகுமாறு இறைவனிடம் வேண்டினார். ``அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்'' என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

எந்நாளும் எங்களை வழிநடத்தும் அன்பு தெய்வமே!

திருச்சபையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவறத்தார் அனைவரையும் ஆசீர்வதியும், அவர்கள் ஆற்றும் பணி வாழ்வில் சந்திக்கும் துன்ப துயரங்கள் மற்றும் இடையூறுகள் போன்றவைகளில் உடன் இருந்து அவர்களை காத்து வழிநடத்தியருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

துன்பமில்லாமல் இன்பம் இல்லை சிலுவையில்லாமல் சிம்மாசனம் இல்லை என்பதை உணர்த்திய எம் இயேசுவே!

எங்களுக்கு வரும் துன்பத் துயரங்களை தாங்கிக்கொள்ளவும், பிறர் வாழ்வில் உள்ள சுமைகளை பகிர்ந்து, கொண்டு அவர்களுக்கு உதவி செய்யும் நல் மனதைத் தந்தருள இறைவா உம்மை வேண்டுகிறோம்.

அன்புத் தந்தையே இறைவா!

நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அவர்கள் இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பின் நாள் என்னும் இறைவெளிப்பாட்டை தம் உள்ளத்தில் ஆழமாகப் பதித்து: இக்காலத்தை உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும் உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

விடுதலையின் தெய்வமே இறைவா!

புனித வாரத்தில் நுழைகின்ற நாங்கள், உமது பாடுகளையும், இறப்பையும் சிந்தித்த எங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்டு, எங்களுடைய பாவ வாழ்வைக் களையவும், உமது அருளின் துணையால் புதிய சமுதாயத்தை உருவாக்கி உமக்கேற்றவர்களாய் வாழவும் வேண்டிய வரம் அருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆறுதல் அனைத்திற்கும் ஊற்றாகிய இறைவா!

ஆதரவற்றோர், கைவிடப்பட்டோர், நோயுற்றோர் மற்றும் வறுமையில் வாடுவோர் அனைவரும் உமது பாதுகாப்பையும், பராமரிப்பையும் பெற்று மகிழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இரக்கம் காட்டுபவரே இறைவா,

எம்மை குணப்படுத்துவதற்காக காயப்பட்ட இயேசுவின் பாடுகள் வழியாக, எங்கள் உடல், உள்ள, ஆன்ம நோய்களை குணப்படுத்தி புது வாழ்வருள வேண்டுமென்றும், சிலுவையில் தம்மையே பலியாக்கிய கிறிஸ்து இயேசுவில் உமது திட்டத்தின் நிறை வினைக் கண்டுணர, உலக மக்கள் அனைவருக்கும் ஞானமருள வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.




இன்றைய சிந்தனை

`யூதரின் அரசே வாழ்க!'' என்று அவரை வாழ்த்தத் தொடங்கினர்.

குருத்து ஞாயிறன்று , சிலுவையின் பாடுகளை பார்க்கும் முன்பு, இயேசுவின் பாடுகளையும், சிலுவையின் வலியையும் , அவ்வளவு வேதனையையும், துன்பத்தையும், நம் மேல் உள்ள அபரிதமான அன்பினால், இயேசு தாங்கி கொண்டார். இன்றைய நற்செய்தியில், ஒரு பெண்ணின் ஆழ்ந்த அன்பையும், அவள் இயேவின் மேல் வாசனை தைலைத்தை கொண்டு அபிசேகம் செய்து அவளின் அன்பை வெளிப்படுத்தியதை நாம் பார்ப்போம். அந்த காலத்தில், டியோடரன்டோ, வீட்டுகுள்ளேயே பாத்ரூம் இருந்ததில்லை. அதனால், வாசனை திரவியத்தை தயாரித்து, அதனை உபயோகித்தனர். வாசனை என்னெய் மற்றும், மூலிகைகளையும் பாட்டிலில் போட்டு அதனை புளிக்க செய்து, உபயோகித்தனர். அதிக நாட்கள் அந்த பாட்டிலில் இருந்தால், அதன் மதிப்பு கூடி இன்னும் நல்ல வாசனையை கொடுக்கும். இன்றைய நற்செய்தியில், வாசனை திரவியம் மிகவும் விலை மதிப்புள்ள அன்பளிப்பாக இயேசுவிற்கு கொடுக்கபடுகிறது. அதனை அதிக நாட்கள் வைத்திருத்திருக்க வேண்டும். நாம் ஒரு அன்பளிப்பு கொடுப்பதாக இருந்தால், ஒரு கடைக்கு போய், புதிதாக ஒரு பொருளை வாங்குகிறோம். நாம் பல வருடங்களாக பாதுகாத்து வைத்திருக்கும் பொருளை தான் நாம் மிகவும் மதிக்கிறோம். அதனை மற்றவர்களுக்கு கொடுக்கும்போது நாம் மிக பெரிய தியாகம் செய்கிறோம். உங்களுக்கு மிகவும் முக்கியமான பொருளோ அல்லது முக்கியமான விசயம் இன்னும் வைத்திருக்கிறீர்கள்? அதிக நாட்களாக நீங்கள் காத்து வைத்திருக்கும் பொருள் என்ன ? அதனை நீங்கள் கொடுப்பதாக யோசித்து பாருங்கள்? நீங்கள் யாருக்கு கொடுக்கிறீர்களோ அவர் மேல் ஆழ்ந்த அன்பு கொண்டிருப்பீர்கள். கொடுப்பதில் தான் அதிக மதிப்பு!, அதனை வைத்திருப்பதைவிட. இது அன்பினால் தான் முடியும்.

இயேசுவின் மேல் உங்கள் ஆழ்ந்த அன்பு எவ்வளவு? அவர் உங்களிடமிருந்து பெறக்கூடிய மிகவும் மதிக்க கூடிய பொருள் எது? அதனை கொடுக்க மிகவும் யோசிப்பது எது? இயேசுவின் மேல் உள்ள அன்பினால் நீங்கள் அதனை கொடுக்க ஆமோதிப்பீர்களா? அவரின் மேல் உள்ள அன்பினால் நீங்கள் கொடுக்க தயாரா? இதனை மாற்றாக சொல்ல வேண்டுமானால், உங்கள் ஜாடியினுள் உள்ளவற்றை தாராளாமாக இயேசுவிற்கு மனமுவந்து கொடுப்பீர்களா? இயேசு உங்களுக்கு எவ்வளவு கொடுத்திருக்கிறார் என்பதனை நினைத்து பாருங்கள். இப்புனித வாரம் முழுவதும் அதனை நினைத்து பாருங்கள். புனித வியாழன்றும், பெரிய வெள்ளியன்றும், புனித சனியன்றும் இயேசு உங்களுக்கு கொடுத்தது நினைத்து பாருங்கள். மேலும், உங்களையே கேட்டு கொள்ளுங்கள்: உங்களுள் மதிப்புள்ள பொருள் அதனை கொடுக்க மனமுவந்து தயாராய் இருக்கிறீகளா?

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் உம் உடனிருப்பை உணர்ந்திட அருள்தாரும்.