இன்று பாஸ்காக் காலம் இரண்டாம்
திருவழிப்பாட்டு ஆண்டு B (12-04-2015)
 />
 />
 />
 />
 />
 />
 />
 />
 />
 />
 />
திருப்பலி முன்னுரை - 1
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி!
அவர் தம் பேரிரக்கத்தின்படி, இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார்.
இறைத்திருமகன் இயேசுக் கிறிஸ்துவில் அன்பு கொண்டுள்ள இறைமக்களே!
உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்தைக் கூறிக்கொள்வதில் பெரிதும் மகிழ்கிறேன்.
இன்று பாஸ்காக் காலம் இரண்டாம் ஞாயிறு. உயிர்த்த இயேசுவின் பிரசன்னத்தில் விசுவாசத்தோடும்,
வேண்டுதல்களோடும் நாம் ஒன்று கூடியுள்ளோம்.
இயேசுவின் உயிர்ப்பினில் மனிதர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும் மன அமைதியும் பிறக்கின்றது.
பாவத்தின் விளைவாக மனித குலம் சந்திக்கும் எந்தத் தடைகளும் இயேசுவின் உயிர்ப்பினால் தகர்க்கப்படுகின்றது.
உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று தம் சீடரை வாழ்த்தி, பலப்படுத்திய இயேசு நமக்கும் அதே அற்புதமான ஆசீர்வாதத்தைத் தருகின்றார்.
அத்தோடு நாம் உடலிலும், ஆன்மாவிலும் நலம் பெற தூய ஆவியைப் பொழிந்து பாவமன்னிப்பு என்னும் அருட்சாதனத்திற்கான பணியையும்,
அனுமதியையும் அவருடைய பணியைத் தொடர்ந்தாற்றுகின்றவர்களுக்கு வழங்குகின்றார்.
இதன் வழியாக நாம் நம்பிக்கை கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்வதோடு
நம் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பையும் பெறுகிறோம்;
இந்தப் பேருண்மைகளை மனத்தில் ஆழப் பதித்தவர்களாகத் தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.
திருப்பலி முன்னுரை -2
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி!
அவர் தம் பேரிரக்கத்தின்படி, இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார்.
இறை இயேசுவில் இனிமையானவர்களே உங்கள் அனைவருக்கும் உயிர்த்த இயேசுவின் பெயரால் என்
அன்பையும் வாழ்த்தையும் கூறிக்கொள்வதில் பெரிதும் மகிழ்கிறேன்.
உயிர்ப்பின் காலத்தின் இரண்டாம் வாரத்தில் திருச்சபை இறைத்திருமொழிகளை எடுத்தாழ்வதில்
குறிப்பிடத்தகுந்த அக்கறை செலுத்தி நமக்குப் படிப்பிக்கின்றது.
இயேசுவைப் பின்சென்ற சீடர் இயேசு இறை வல்லமையில் மிகுந்திருந்தும்
அவரது பாடுகள் இறப்பு ஆகியவற்றில் ஏற்பட்ட பயத்துடன் அவர் பலமுறை கூறியிருந்தும்
முழுமையாக அதைப் புரிந்துகொள்ளாத எளிய மனம் கொண்டவராய் இருந்ததால் இயேசு தன்னை அவர்கள் எதிர்பாராத வேளையில்,
எதிர்பாராத நிலையில் இழந்த அதிர்ச்சியிலிருந்து மீட்டு அதுவரை அவர்கள் எண்ணியிராத அவருடைய உயிர்ப்பு நிகழ்வில்
ஏற்பட்ட மகிழ்வும் ஆச்சரியமும் கலந்த உணர்வுகளை சமநிலைப்படுத்தி அவர்களின் பட்டுணர்வாக்கி உறுதியூட்டினார்.
அப்பட்டுணர்வே அவர்களின் சான்று வாழ்வுக்கு அடித்தளமாயிருந்தது. அச்சான்று வாழ்வு வழி இயேசுவைப் பெற்றுக்கொண்ட
நாமும் உறுதியூட்டப்பட்டவர்களாக இயேசு வழி வந்த நம் மீட்பை உணர, வாழ, முன்செல்ல படிப்பிக்கப் பெறுகிறோம்.
மாண்புமிக்க இத்திருப்பலியில் இன்று பங்கேற்கும் நாம் திருத்தூதர்களின் சான்று வாழ்வுபோல் இறைத்திருமொழிகளை
நம் பட்டறிவாக்கி பயன்பெற தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
முதல் வாசக முன்னுரை
நம்பிக்கை கொண்டோரே,
தொடக்க கிறிஸ்தவர்களின் எடுத்துக்காட்டான வாழ்க்கை முறையை விவரிக்கிறது.
அவர்கள் திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்
என்று வாசிக்க கேட் கிறோம். ஆண்டவரில் நம்பிக்கை கொண்டோர் அனைவரும்,
பிறரது தேவைகளை அறிந்து ஒருவருக்கொருவர் உதவி செய்பவர்களாய் வாழ்ந்தனர்.
எல்லா உடைமைகளை யும் பொதுவாய் வைத்திருந்ததுடன்,
கூடி செபிப்பதிலும் ஒரே மனதுடன் செயல்பட்டதைக் காண்கிறோம்.
நமது அன்பியம் மற்றும் பங்கு அளவில் ஒருவருக்கொருவர் உதவி வாழும் மனநிலை உருவாக வரம் வேண்டி,
இந்த வாசகத்தை கவனமுடன் செவியேற்போம்.
ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4:32-35
ஆந்நாள்களில் நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை: எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது. திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர். தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலன்களை அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக் கொண்டு வந்து திருத்தூதருடைய காலடியில் வைப்பர்: அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
திருப்பாடல்118: 2-4. 16
`என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! பல்லவி
ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன். கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை. பல்லவி
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். பல்லவி
இரண்டாம் வாசகம்
இரண்டாம் வாசக முன்னுரை
நம்பிக்கை கொண்டோரே,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யோவான்,
கிறிஸ்து இயேசுவின் உயிர்த் தெழுதல் வழியாக நாம் அடைந்துள்ள புதுப்பிறப்பைப் பற்றி எடுத்துரைக்கிறார்.
ஆண்டவர் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்பை பெற்றுள்ள நாம்,
விண்ணுலகில் அழியாத உரிமைப்பேறு பெறுவோம் என்ற உறுதியை அளிக்கிறார்.
நாம் துன்பங்களால் புடமிடப்படும் வேளையில், கடவுள் மீதான நம்பிக்கையில் இருந்து தளர்ந்துவிடாமல் இருக்க நினைவூட்டுகிறார்.
உறுதியான நம்பிக்கையுடன் ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகரும் வரம் வேண்டி இந்த வாசகத்தை கவனமுடன் செவியேற்போம்.
கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்தில் இருந்து வாசகம் 5:1-6அன்பார்ந்தவர்களே, இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர்.நாம் கடவுள்மீது அன்புகொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும். ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை. ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும்' உலகை வெல்லும்: உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே. இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவரென தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை. - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா!`தோமா, நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறு பெற்றோர்,'' என்கிறார் ஆண்டவர்.அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20:19-31
அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்பகிறேன் ' என்றார்.இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, 'தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.மற்றச் சீடர்கள் அவரிடம், 'ஆண்டவரைக் கண்டோம் ' என்றார்கள். தோமா அவர்களிடம், 'அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன் ' என்றார். எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், 'இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் ' என்றார்.தோமா அவரைப் பார்த்து, 'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! ' என்றார்.இயேசு அவரிடம், 'நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் ' என்றார். வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை.இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நாம் ஆண்டவரின் பாஸ்காவைக் கொண்டாடுவோமாக.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
பாவத்தின்மீதும், சாவின்மீதும் கிறிஸ்து இயேசுவை வெற்றி கொள்ளச் செய்த தந்தையே இறைவா!
தூய ஆவியின் நிறை வல்லமையால் இன்றைய திருச்சபையில் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள்,
துறவிகள், அனைவரும் மீட்பின் பாதையில் மக்களை வெற்றியுடன் வழிநடாத்திச் செல்ல வேண்டிய சக்தியையும்,
ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
தந்தையே இறைவா!
உடல் நலம் இன்றித் தவிப்பவர்கள்,
மனநலம் குன்றித் துன்புறுவோர் இவர்களுக்கு உயிர்த்த இயேசுவின் ஆற்றலாலும்,
மகிமையாலும் அனைத்து உதவிகளும் நல்மனம் கொண்டவர்கள் வழியாகக் கிடைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நீதியின் தேவனே இறைவா!
அநீதி, அடிமைத்தனம் இவற்றை அழித்திட அனைத்து நாடுகளின் தலைவர்களும் பாடுபடவும், உண்மையின்
வழிதான் என்றும் நிலைபெறும் என்பதை உணர்ந்து நல்லாட்சி செய்திடவும், இயேசு தம் சீடருக்கு வழங்கிய அதே சமாதானத்தை நாங்கள் ஒவ்வொருவரும்,
மற்றும் உலக மக்கள் ஒவ்வொருவரும் பெற்று மகிழ்ந்திடவும் அனைத்துக்
குடும்பங்களிலும் சமாதானம் ஒற்றமை வளர்ந்தோங்கிடவும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இரக்கத்தின் நிறைவே இறைவா,
உயிர்ப்பை கொண்டாடி மகிழுகின்ற நாங்கள் உயிர்ப்பு தரும் நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பினை உணர்ந்திடவும்,
பாவம், நோய், ஏழ்மை, வன்முறை, மதவெறி, தீவிரவாதம் போன்றவற்றால் வீழ்ந்து கிடக்கும் அனைவரும்,
மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த உம் திருமகனைப் போல,புது வாழ்வுக்கு உயிர்த்தெழ உதவிபுரிய வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
ஆறுதல் அனைத்திற்கும் ஊற்றாகிய இறைவா!
ஆதரவற்றோர், கைவிடப்பட்டோர், நோயுற்றோர் மற்றும் வறுமையில் வாடுவோர் அனைவரும் உமது பாதுகாப்பையும்,
பராமரிப்பையும் பெற்று மகிழ்ந்திட வேண்டுமென்றும், உடலின் உயிர்ப்பினால் மாட்சிபெற்ற உம் திருமகனைப் போன்று,
உள்ளத்தின் உயிர்ப்பினால் உமது மாட்சியில் பங்குபெறும் தகுதி அடையுமாறு
எம் நாட்டினர் அனைவருடைய வாழ்வையும் புதுப்பிக்க வேண்டுமென்றும்,
உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர்,
நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
|