இரண்டாவது திருவழிபாடு ஆண்டு பாஸ்கா காலம் 3வது வாரம் திங்கள்கிழமை 2015-04-20
ஆன்சலம்
முதல் வாசகம்
``இவன் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னதை நாங்கள் கேட்டிருக்கிறோம்''
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 8-15
அந்நாள்களில் ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார். அப்பொழுது உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக் கூடத்தைச் சேர்ந்த சிலரும் சிரேன், அலக்சாந்திரியா நகரினரும் சிலிசியா, ஆசியா மாநிலத்தவரும் ஸ்தேவானோடு வாதாடத் தொடங்கினர். ஆனால் அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தை களையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை. பின்பு அவர்கள், ``இவன் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னதை நாங்கள் கேட்டிருக்கிறோம்'' என்று கூறச் சிலரைத் தூண்டிவிட்டனர். அவ்வாறே அவர்கள் மக்களையும் மூப்பர்களையும் மறைநூல் அறிஞர்களையும் அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்தார்கள். உடனே அவர்கள் எழுந்துவந்து அவரைப் பிடித்துத் தலைமைச் சங்கத்துக்கு இழுத்துச் சென்றார்கள்; மேலும் பொய்ச் சாட்சிகளைக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். அவர்கள், ``இந்த மனிதன் இத்தூய இடத்தையும் திருச்சட்டத்தையும் எதிர்த்து ஓயாமல் பேசிவருகிறான்'' என்று கூறினார்கள். மேலும் அவர்கள், ``நசரேயராகிய இயேசு இந்த இடத்தை அழித்துவிடுவார் என்றும், மோசே நமக்குக் கொடுத்திருக்கிற முறைமைகளை மாற்றிவிடுவார் என்றும் இவன் கூறக் கேட்டோம்'' என்றார்கள். தலைமைச் சங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரும் அவரை உற்றுப்பார்த்தபோது அவரது முகம் வானதூதரின் முகம்போல் இருக்கக் கண்டனர்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
திருப்பாடல்கள் 119: 23-24. 26-27. 29-30
23 தலைவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும், உம் ஊழியன் உம்முடைய விதிமுறைகளைக் குறித்தே சிந்திக்கின்றேன்.
24 ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன; அவையே எனக்கு அறிவுரையாளர். -பல்லவி
26 என் வழிமுறைகளை உமக்கு எடுத்துச் சொன்னேன்; நீர் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்; உம் விதிமுறைகளை எனக்குக் கற்றுத்தாரும்.
27 உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்; உம் வியத்தகு செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன். -பல்லவி
29 பொய் வழியை என்னைவிட்டு விலக்கியருளும்; உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும்.
30 உண்மையின் பாதையை நான் தேர்ந்துகொண்டேன்; உம் நீதிநெறிகளை என் கண்முன் நிறுத்தியுள்ளேன். -பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா. அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6:22-29
22 சீடர்கள் புறப்பட்ட கரையிலேயே மறு நாளும் மக்கள் கூட்டமாய் நின்று கொண்டிருந்தார்கள். முந்தின நாள் ஒரு படகைத்தவிர வேறு படகு எதுவும் அங்கு இல்லை என்பதையும் அதில் இயேசுவின் சீடர்கள் மட்டும் போனார்களே அன்றி இயேசு அவர்களோடு அப்படகில் ஏறவில்லை என்பதையும் அவர்கள் கண்கூடாகப் பார்த்திருந்தார்கள்.
23 அப்போது, ஆண்டவர் கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொடுத்த உணவை மக்கள் உண்ட இடத்திற்கு அருகில் திபேரியாவிலிருந்து படகுகள் வந்து சேர்ந்தன.
24 இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர்.
25 அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, "ரபி, எப்போது இங்கு வந்தீர்?" என்ற கேட்டார்கள்.
26 இயேசு மறுமொழியாக, "நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
27 அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்" என்றார்.
28 அவர்கள் அவரை நோக்கி, "எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள்.
29 இயேசு அவர்களைப் பார்த்து, "கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல்;"" என்றார்
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''இயேசு அவர்களிடம், 'வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது;
என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது' என்றார்'' (யோவான் 6:35)
யோவான் நற்செய்தி இயேசுவை ''ஒளி'', ''உணவு'', ''வழி'', ''வாழ்வு'', ''உண்மை'' போன்ற பல உருவகங்களைப் பயன்படுத்தி நமக்கு அறிவிக்கிறது. தந்தையாம் கடவுளை இயேசு நமக்கு வெளிப்படுத்துகிறார். தந்தையிடம் அவர் நம்மை இட்டுச் செல்கிறார். எனவே இயேசு மக்களை நோக்கி, ''என்னிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்'' என்று கூறுகிறார். ''இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளுதல்'' என்னும் சொற்றொடர் யோவான் நற்செய்தியில் 34 தடவை வருகிறது. ''நம்பிக்கை'' என்னும் சொல் பழைய கத்தோலிக்க வழக்கில் ''விசுவாசம்'' என அழைக்கப்பட்டது. இன்றைய சொல் வழக்கில் ''நம்பிக்கை'' என்பது சில வேளைகளில் பகுத்தறிவால் நிரூயஅp;பிக்க இயலாத, ஆனால் மக்களால் பொதுவாக ஏற்கப்பட்ட ஒரு கருத்தைக் குறிக்கலாம். எடுத்துக்காட்டாக, இராகு காலத்தில் திருமணம் நிகழ்வது முறையல்ல என்னும் ''நம்பிக்கை''யைக் காட்டலாம். கடவுளின் பார்வையில் எந்தக் காலமும் நல்ல காலம் தான். எனவே இராகு காலம் என்று கூறி ஒரு குறிப்பிட்ட நேரத்தைக் கெட்ட நேரமாகக் கருதுவது ''மூட நம்பிக்கை'' என்போம். சிலர் சமய நம்பிக்கை என்றாலே மூட நம்பிக்கை என நினைக்கிறார்கள். ஆனால் மனித அறிவுக்கு எட்டாத பரம்பொருள் உண்டு எனவும் கடவுள் என நாம் அழைக்கும் அவர் நம்மை அன்போடும் பாசத்தோடும் அரவணைக்கின்ற தந்தையாக, தாயாக விளங்குகிறார் எனவும், அவர் நம்மீது கொண்ட எல்லையற்ற அன்பினால் தம் ஒரே மகனை நம் மீட்பராக நம்மிடையே அனுப்பினார் எனவும் கிறிஸ்தவ சமயம் போதிக்கிறது. இதை நாம் ''கிறிஸ்தவ நம்பிக்கை'' என்கிறோம். இயேசு கிறிஸ்து நமக்குக் கடவுளைப் பற்றிக் கற்றுத் தந்துள்ளார். எனவே அந்த இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்.
இயேசு ஐயாயிரம் மக்களுக்கு அதிசயமான விதத்தில் உணவளித்ததைக் கண்ட மக்கள் அவரைத் தேடி வருகிறார்கள். மேலும் தங்களுக்கு உணவு கிடைக்கும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. ஆனால் இயேசு அவர்களுடைய சிந்தனையை ஆழப்படுத்துகிறார். அவர்கள் தம் அகக்கண்களைத் திறந்து கடவுளின் செயலைக் கண்டுகொள்ள அவர்களை அழைக்கிறார். உடல் சார்ந்த பசியைப் போக்குகின்ற அப்பமல்ல, ஆனால் மனித வாழ்வின் ஏக்கங்களையெல்லாம் நிறைவுசெய்கின்ற ''அப்பத்தை'' இயேசு வாக்களிக்கிறார். அந்த அப்பம் இயேசுவே. மக்கள் இயேசுவை நம்ப வேண்டும். அதாவது, அவரை முழு இதயத்தோடும் உள்ளத்தோடும் ''பற்றிக்கொள்ள'' வேண்டும். அப்போது அவர்கள் வேறு இடங்களில் அப்பம் தேடிப் போக மாட்டார்கள். மாறாக, இயேசு வழங்குகின்ற போதனையும் அவரோடு இணைந்திருக்கின்ற அன்புப் பிணைப்பும் அவர்களுக்கு ''அன்றாட அப்பமாக'' அமையும். பற்றற்ற இறைவனின் பற்றைப் பற்ற வேண்டும் என்றார் வள்ளுவர் (குறள் 350). கிறிஸ்தவப் பார்வையில் இறைவன் மனிதர் மட்டில் மிகவும் பற்றுடையவர். மனிதரை வேறுபடுத்தி, ஒருதலைச் சார்பாகச் செயல்படாமல் அனைவரையும் தம் அன்புப் பிணைப்பால் தழுவுகின்றவர். எனவே இறைவனிடம் நம்பிக்கை கொள்வது நாம் அவரே நமது கதி எனக் கொண்டு அவருடைய வழிநடத்தலுக்கு நம்மை முழுமையாகக் கையளித்தலில் அடங்கும். இத்தகைய நம்பிக்கையைத் தான் இயேசு மக்களிடமிருந்து எதிர்பார்க்கிறார். அப்போது அவரே நம் ஆன்ம பசியைப் போக்கி, நம் வாழ்வின் ஏக்கங்களைத் தணித்திடுவார். நமக்கு நிலைவாழ்வில் பங்களிப்பார்.
மன்றாட்டு:
இறைவா, உம் திருமகன் இயேசுவை நாங்கள் எந்நாளும் நாடிச் சென்று அவர்தரும் உணவால் திடம் பெற்று வாழ்ந்திட அருள்தாரும்.
|