யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்கா காலம் 4வது வாரம் செவ்வாய்க்கிழமை
2015-04-28

லூயி மரிய டிமான்போட்


முதல் வாசகம்

. பெருந்தொகையான மக்கள் நம்பிக்கை கொண்டு ஆண்டவரிடம் திரும்பினர்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 19-26

அந்நாள்களில் ஸ்தேவானை முன்னிட்டு உண்டான துன்புறுத்தலால் மக்கள் பெனிசியா, சைப்பிரசு, அந்தியோக்கியா வரை சிதறிப்போயினர். அவர்கள் யூதருக்கு மட்டுமே இறைவார்த்தையை அறிவித்தார்கள்; வேறு எவருக்கும் அறிவிக்கவில்லை. அவர்களுள் சைப்பிரசு, சிரேன் ஆகிய இடங்களைச் சேர்ந்த சிலர் இருந்தனர். அவர்கள் அந்தியோக்கியாவுக்கு வந்து அங்குள்ள கிரேக்கரை அணுகி ஆண்டவராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார்கள். ஆண்டவரின் கைவன்மையை அவர்கள் பெற்றிருந்தார்கள். பெருந்தொகையான மக்கள் நம்பிக்கை கொண்டு ஆண்டவரிடம் திரும்பினர். இந்தச் செய்தி எருசலேம் திருச்சபையினரின் காதில் விழவே அவர்கள் பர்னபாவை அந்தியோக்கியா வரை சென்றுவர அனுப்பி வைத்தார்கள். அவர் அங்குச் சென்றபோது, கடவுளின் அருள்செயலைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்; மேலும் உறுதியான உள்ளத்தோடு ஆண்டவரைச் சார்ந்திருக்குமாறு அனைவரையும் ஊக்கப்படுத்தினார். அவர் நல்லவர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய்ப் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார். பின்பு சவுலைத் தேடி அவர் தர்சு நகர் சென்றார்; அவரைக் கண்டு, அந்தியோக்கியாவுக்கு அழைத்துவந்தார். அவர்கள் ஓராண்டு முழுவதும் அந்தச் சபையாரோடு கூடவே இருந்து பெருந்திரளான மக்களுக்குக் கற்பித்து வந்தார்கள். அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள்

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

: பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! அல்லது: அல்லேலூயா.
திருப்பாடல்கள் 87:1-7

1 நகரின் அடித்தளம் திருமலைகளின்மீது அமைந்துள்ளது. 2 யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும் விட ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை விரும்புகின்றார். 3 கடவுளின் நகரே! உன்னைப்பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன. பல்லவி
4 எகிப்தையும் பாபிலோனையும் என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்; பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா நாட்டினரைக் குறித்து, `இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள்' என்று கூறப்படும். 5 `இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்; உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார்!' என்று சீயோனைப் பற்றிச் சொல்லப்படும். பல்லவி
6 மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது, `இவர் இங்கேதான் பிறந்தார்' என ஆண்டவர் எழுதுவார். 7ய ஆடல் வல்லாருடன் பாடுவோரும் சேர்ந்து `எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது' என்பர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, ``இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10:22-30

அக்காலத்தில் எருசலேமில் கோவில் அர்ப்பண விழா நடந்துகொண்டிருந்தது. அப்போது குளிர்காலம். கோவிலின் சாலமோன் மண்டபத்தில் இயேசு நடந்துகொண்டிருந்தார். யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, ``இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்'' என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, ``நான் உங்களிடம் சொன்னேன்; நீங்கள்தான் நம்பவில்லை. என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன. ஆனால் நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் என் மந்தையைச் சேர்ந்தவர்கள் அல்ல. என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ளமாட்டார். அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ள இயலாது. நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''தந்தை மகன் மேல் அன்பு கூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார்'' (யோவான் 3:35)

இயேசு கடவுளைத் தம் தந்தை என அழைத்தார். இவ்வுலக உறவுகளில் தந்தை (தாய்) - பிள்ளை உறவு தனித்தன்மை வாய்ந்தது. பெற்றோர் தம் பிள்ளைக்குக் கடவுளின் துணையோடு உயிர்கொடுக்கின்றனர். பிள்ளை தன் பெற்றோரைச் சார்ந்து வாழ்கிறது; பெற்றோரின் அன்பில் திளைக்கிறது; பெற்றோரின் துணையோடு வாழ்வில் வளம் பெறுகிறது. இயேசு கடவுளைத் தம் தந்தை என அழைத்தபோது இவ்வுலகில் நாம் தந்தை-பிள்ளை உறவு பற்றி அறிகின்ற, பெறுகின்ற அனுபத்தை வெளிப்படுத்துகிறார் என்பதில் ஐயமில்லை. எனினும், இயேசுவுக்கும் கடவுளுக்கும் இடையே நிலவுகின்ற உறவு மனித உறவுகளை விஞ்சியது. மனித அறிவால் அந்த உறவை முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாது. ஏனென்றால் கடவுளின் உள்தன்மையை நேரடியாக அனுபவித்து அறிகின்ற ஆற்றல் மனிதப்பிறவிகளுக்கு இல்லை. இருப்பினும் கடவுளைப் பற்றி நாம் ஒன்றுமே அறியமுடியாது என்பதும் சரியல்ல. ஏனென்றால் கடவுள் தம்மை நமக்குப் பலவிதங்களில் வெளிப்டுத்தியுள்ளார். படைப்பைக் காண்போர் படைத்தவனை ஒருவிதத்தில், சிறிதளவாவது காணமுடியும் என்பதே உண்மை. உலகம் அனைத்தும் கடவுளின் படைப்பு என்றால் கடவுள் ஆற்றல் மிக்கவர் எனவும், நம்மை ஆழ்ந்த விதத்தில் அன்புசெய்பவர் எனவும் நாம் உணரமுடியும். ஆனால் கடவுள் தம்மை வரலாற்று நிகழ்ச்சிகள் வழியாகவும், குறிப்பாக மீட்பு வரலாற்றின் வழியாகவும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த வரலாற்றின் பதிவை நாம் விவிலியத்தில் காண்கின்றோம். இறுதியாக, கடவுள் தம்மைத் தம் ஒரே மகன் இயேசு வழியாக வெளிப்படுத்தினார். இந்த இயேசுவே கடவுளின் முழுமையான, நிறைவான வெளிப்பாடு என நாம் நம்புகிறோம்.

இயேசு கடவுளைத் தம் தந்தை என அழைப்பதால் கடவுளோடு, கடவுள் தன்மையில் நிலைத்திருப்பவர் என நாம் அறியலாம். ஆனால் இயேசு ஒரு கடவுள் என்றும், அவர் தந்தை என அழைப்பவர் இன்னொரு கடவுள் என்றும் நாம் கருதினால் அது தவறு. ஏனென்றால் கடவுளைத் தம் தந்தை என அழைக்கின்ற இயேசு ''நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்'' என்றார் (காண்க: யோவா 10:30). மேலும், ''உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்'' கடவுளிடமிருந்தும் இயேசுவிடமிருந்தும் புறப்பட்டு வந்து நமக்குத் துணையாக இருப்பார் எனவும் இயேசு போதித்தார் (காண்க: யோவா 14:16-17). இவ்வாறு தந்தை, மகன், தூய ஆவி என ஒரே கடவுள் மூன்று ஆள்களாகச் செயல்படுவதை நாம் இயேசுவின் போதனைவழி அறிந்து, ஏற்று, நம்புகிறோம். கடவுளை நமக்கு வெளிப்படுத்தும் இயேசுவை நம்பிக்கையோடு ஏற்று, அவர் வழியில் செல்வோர் வாழ்வு பெறுவர்.

மன்றாட்டு:

இறைவா, உம்மை நம்பி வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.