இன்று பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு
திருவழிப்பாட்டு ஆண்டு B (03-05-2015)
 />
 />
 />
 />
 />
 />
 />
 />
 />
 />
திருப்பலி முன்னுரை - 1
அன்புக்குரியவர்களே,
இறைமகன் இயேசுக் கிறிஸ்துவில் மிகவும் இனிமையானவர்களே!
உயிர்ப்பின் காலம் 5 ஆம் ஞாயிற்றுக் கிழமையில் திருப்பலி வழிபாட்டில் பங்கேற்கும் உங்கள் அனைவருக்கும்
அன்பு வாழ்த்துக்களைக் கூறி வரவேற்கிறேன்.
கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்: கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்.
மனிதரை ஆட்கொண்டிருந்த இறப்பு எனும் இருளின் ஆட்சியிலிருந்து மானுடத்தை மீட்க தன்னை முழுமையாக ஈகம் செய்து ஒளியேற்றிய
இயேசுவோடு நம்மை இணைத்துக்கொண்டு இந்த உலகுக்கு மிகுதியான நலன்களை நாம் வழங்க வேண்டும்.
அவ்வாறு இணைந்திருக்கையிலேதான் அடிப்படையான பல இறை நன்மைகளை நாமும் பெற முடியும்.
எனவே பயனற்ற பல நடைமுறைகளை நம்மிடமிருந்து அறவே அகற்றி
ஆண்டவர் இயேசுவில் முழுமையாக இணைந்தவர்களாக வாழ நம்மை ஈகம் செய்யும் நோக்கமாக
நாம் இன்று மேன்மை மிகு இத்திருப்பலியில் முழுமையாக இணைந்து கொள்வோம். ஆண்டவரின் அருள்பெறுவோம்.
திருப்பலி முன்னுரை - 2
அன்புக்குரியவர்களே,
இறைமகன் இயேசுக் கிறிஸ்துவில் மிகவும் இனிமையானவர்களே!
உயிர்ப்பின் காலம் 5 ஆம் ஞாயிற்றுக் கிழமையில் திருப்பலி வழிபாட்டில் பங்கேற்கும் உங்கள் அனைவருக்கும்
அன்பு வாழ்த்துக்களைக் கூறி வரவேற்கிறேன். கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்: கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்.
நாம் இயேசுவோடு இணைந்து அவருடைய வார்த்தைகளை நம் இதயத்தில் இருக்க வைத்து செயற்பட் டால்,
நாம் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.
நாம் மிகுந்த கனி தந்து இயேசுவின் சீடராய் இருப்பதே தந்தையாம் இறைவனுக்கு மாட்சி அளிக்கிறது.
இறைவனை விட்டுப் பிரிந்து நம்மால் எதுவும் செய்ய இயலாது.
நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால்
அவரிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக் கொள்வோம்: என்னும் செய்திகள் உண்மையின் தரிசனங்களாக நமக்குக் கிடைக்கின்றன.
இறைவனின் இந்த மாபெரும் அருள் ஆசீர்வாதத்திற்காக முழு உள்ளத்தோடு நன்றி கூறிக்கொண்டு,
நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்.
கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து, மற்றவரை அன்புசெய்து வாழ்வதன் வழியாக இறைவனோடு இணைந்து வாழும்
உறுதி பூண்டவர்களாய் இத்திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
முதல் வாசக முன்னுரை
இனியோரே,
இன்றைய முதல் வாசகம், கிறிஸ்தவர்களை துன்புறுத்தி வந்த சவுல்,
இயேசுவோடு இணைந்தது பற்றிய செய்தியை நமக்கு தருகிறது.
எருசலேம் கிறிஸ்தவர்கள் சவுலை ஏற்க மறுத்தபோது, பர்னபா அவருக்கு துணை நிற்கிறார்.
இயேசுவில் இணைந்து பலன் தந்த பவுலைப் போல,
நாமும் நற்செய்தியின் தூதுவர்களாக வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.
பவுல் ஆண்டவரை வழியில் கண்டது பற்றி பர்னபா திருத்தூதர்களுக்கு விளக்கிக் கூறினார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 9: 26-31
அந்நாள்களில் சவுல் எருசலேம் நகரத்துக்கு வந்தபோது சீடர்களுடன் சேர்ந்துகொள்ள முயன்றார். ஆனால் அவரும் ஒரு சீடர் என்பதை நம்பாமல் அனைவரும் அவரைக் கண்டு அஞ்சினர். பர்னபா அவருக்குத் துணை நின்று அவரைத் திருத்தூதர்களிடம் அழைத்துச் சென்றார்.
பவுல் ஆண்டவரை வழியில் கண்டது பற்றியும் ஆண்டவர் அவரோடு பேசியது பற்றியும் அவர் தமஸ்குவில் இயேசுவின் பெயரால் துணிவுடன் உரையாடியது பற்றியும் பர்னபா அவர்களுக்கு விளக்கிக் கூறினார்.
அதன்பின் சவுல் அவர்களோடு சேர்ந்து எருசலேமில் அங்கும் இங்குமாகச் சென்று ஆண்டவரின் பெயரால் துணிவுடன் பேசி வந்தார்.
கிரேக்க மொழி பேசும் யூதரிடம் சென்று அவர்களோடு வாதாடினார். அவர்கள் அவரைக் கொன்றுவிட முயன்றார்கள்.
ஆனால் அவரோடு இருந்த சகோதரர்கள் இதை அறிந்து அவரைச் செசரியாவுக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்து தர்சு நகருக்கு அனுப்பி வைத்தார்கள்.
யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய பகுதிகளிலெல்லாம் திருச்சபை வளர்ச்சியுற்று, ஆண்டவருக்கு அஞ்சி நடந்து, அமைதியில் திளைத்து, தூய ஆவியாரின் துணையால் பெருகிவந்தது.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: ஆண்டவரே, நான் செலுத்தும் புகழ் உம்மிடமிருந்து எழுவதாக!
திருப்பாடல் 22: 25-26. 27,29. 30-31
உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன். 26 எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்; ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக! அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக! பல்லவி
27 பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர்; பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர் முன்னிலையில் விழுந்து பணிவர். 29 மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்; புழுதிக்குள் இறங்குவோர் யாவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் அவரை வணங்குவர். பல்லவி
30 வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்; இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப் பற்றி அறிவிக்கப்படும். 31 அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்; இனி பிறக்கப்போகும் மக்களுக்கு `இதை அவரே செய்தார்' என்பர். பல்லவி
இரண்டாம் வாசகம்
இரண்டாம் வாசக முன்னுரை
இன்றைய இரண்டாம் வாசகம்,
நமது அன்பை செயலில் வெளிப்படுத்த அழைப்பு விடுக்கிறது.
குற்றமற்றவர்களாய் வாழும்போது, நாம் கடவுளின் திருமுன் உறுதியான நம்பிக்கையுடன் நிற்க முடியும் என்று திருத்தூதர் யோவான் எடுத்துரைக்கிறார்.
இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்களாய்,
மற்றவர்களை அன்புசெய்து வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.
நம்பிக்கை கொண்டு, அன்பு செலுத்த வேண்டும். இதுவே கிறிஸ்துவின் கட்டளை. திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 18-24பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம். இதனால் நாம் உண்மையைச் சார்ந்தவர்கள் என அறிந்துகொள்வோம்; நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தாலும், கடவுள் திருமுன் நம் உள்ளத்தை அமைதிப்படுத்த முடியும்.
ஏனெனில் கடவுள் நம் மனச்சான்றைவிட மேலானவர்; அனைத்தையும் அறிபவர்.
அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும். அவரிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக்கொள்வோம்; ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப் பிடிக்கிறோம்; அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம்.
கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரது கட்டளை.
கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந் திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்து கொள்கிறோம்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா!நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடன் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர்அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-8
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``உண்மையான திராட்சைக் கொடிநானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர்.
என்னிடமுள்ள கனி கொடாத கிளைகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் அனைத்துக் கிளைகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்துவிடுவார்.
நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள். நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள்.
கிளைகள் திராட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது.
நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்.
என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இணைந்து இராதவர் கிளையைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கிளைகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.
நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.
நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நாம் ஆண்டவரின் பாஸ்காவைக் கொண்டாடுவோமாக.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
இறைவாக்கினர்களை வலுப்படுத்துகின்ற தந்தையே இறைவா!
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் உமது கட்டளைகளை நேரிய உள்ளத்தோடு கடைப்பிடித்து,
செயல் வழியாக உண்மையான அன்பை விளங்கச் செய்து, உம்மோடிணைந்து,
மிகுந்த கனி தந்து உம் சீடராய் இருந்து உம்மை மாட்சிப்படுத்தும் பற்றுறுதியை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இரக்கத்தின் ஊற்றே இறைவா,
உலகத்தின் கவலைகளுக்கும், துன்பங்களுக்கும் தீர்வு தேடி அலையும் மக்கள் அனைவரும்,
உம் வழியாக அமைதி காணவும், நீரே உண்மையான கடவுள் என்பதை உணரவும்,
உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும் நற்கருணையில் உம் திருமகனின்
உடனிருப்பை உணரவும், பிற சமயத்தினர் முன்னிலையில் உமக்கு சான்று பகரவும்
உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
அன்புத் தந்தையே இறைவா!
உம்முடைய மக்களாகிய நாங்களும்: செயல் வழியாக உண்மையான அன்பை விளங்கச் செய்து,
உம்மோடிணைந்து, மிகுந்த கனி தந்து உம் சீடராய் இருந்து உம்மை மாட்சிப்படுத்தும் பற்றுறுதியை எம்மில்
வளர்ப்பதன் வழியாக உம்மைக் கண்டுணர்ந்து வாழ அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எங்கள் வேண்டுதலுக்குச் செவி சாய்க்கும் தந்தையே இறைவா!
வேலையின்றியும், வதிவிட அனுமதிக்காக வேதனையோடு காத்துக்கொண்டும்,
குடும்பப் பிரச்சனைகளால் அமைதியிழந்தும் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைவர் மேலும் மனமிரங்கி
அவர்களின் வேதனைகள் அனைத்தையும் மகிழ்ச்சியாக மாற்றிட வேண்டுமென்றும், எம் சிறுவர்களையும், இளைஞர்களையும், உமது ஆவியின் வல்லமையால்
நிரப்பி அவர்கள் இறையுறவிலும், ஞானத்திலும், ஒழுக்கத்திலும், சமூகநல ஈடுபாட்டிலும் வளர்ந்து
உமக்கு மகிமையைக் கொண்டுவரும் மக்களினமாகத் திகழும் ஆற்றலை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆறுதல் அனைத்திற்கும் ஊற்றாகிய இறைவா!
ஆதரவற்றோர், கைவிடப்பட்டோர், நோயுற்றோர் மற்றும் வறுமையில் வாடுவோர் அனைவரும் உமது பாதுகாப்பையும்,
பராமரிப்பையும் பெற்று மகிழ்ந்திட வேண்டுமென்றும், உடலின் உயிர்ப்பினால் மாட்சிபெற்ற உம் திருமகனைப் போன்று,
உள்ளத்தின் உயிர்ப்பினால் உமது மாட்சியில் பங்குபெறும் தகுதி அடையுமாறு
எம் நாட்டினர் அனைவருடைய வாழ்வையும் புதுப்பிக்க வேண்டுமென்றும்,
உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர்,
நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
|
இன்றைய சிந்தனை
''இயேசு, 'நானே திராட்சைச் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால்
அவர் மிகுந்த கனிதருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது' என்றார்'' (யோவான் 15:5)
இயேசு தம்மைத் திராட்சைக் கொடிக்கும் சீடர்களை அதன் கொடிகளுக்கும் ஒப்பிட்டுப் பேசுவது யோவான் நற்செய்தியில் வருகின்ற ஒரு சிறப்புக் குறிப்பு ஆகும். இயேசுவில் நம்பிக்கை கொள்கின்ற நாம் அவரோடு இணைந்து அவருடைய உயிரோடு கலந்துள்ளோம் என்பது நமக்கு அளிக்கப்படுகின்ற பேறு. அதே நேரத்தில் நாம் இயேசுவிடமிருந்து பெறுகின்ற உயிரின் ஆற்றலைக் கொண்டு ''மிகுந்த கனி தர வேண்டும்'' என்பது நமக்கு அளிக்கப்பட்டிருக்கின்ற பெரிய பொறுப்பு. இங்கே ''கனி'' எனக் குறிக்கப்படுவது யாது? நம் வாழ்விலிருந்து பிறக்கவேண்டிய நற்செயல்களே இவ்வாறு குறிக்கப்படுகின்றன. இதை விளக்கும் விதத்தில் இயேசு, ''நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருக்கவேண்டும்'' எனக் கூறுகிறார் (காண்க: யோவா 15:7). இயேசுவின் வார்த்தை அவருடைய போதனையை, குறிப்பாக அவர் அளித்த அன்புக் கட்டளையைக் குறிக்கிறது (காண்க: யோவா 15:10). எங்கே அன்புள்ளதோ அங்கே கடவுள் இருக்கிறார். எனவே, இயேசுவோடு இணைந்திருப்போர் அவரிடமிருந்து சக்தி பெற்று, அவர் அளித்த அன்புக் கட்டளையைத் தம் வாழ்வில் கடைப்பிடிப்பார்கள். அன்பிலிருந்து நற்கனிகள் பிறக்கும். பிறர் வாழ்வு மலர்வதற்கான வழி தோன்றும். மனித சமுதாயம் தழைத்து வளர்வதற்கான தருணங்கள் உதயமாகும்.
இயேசுவோடு இணைந்து நாம் செயல்படாவிட்டால் நம் செயல்கள் நற்பயன் தருவனவாக அமையாது. மாறாக, கடவுளின் விருப்பத்திற்கு எதிராக நிகழ்கின்ற செயல்கள் இவ்வுலகில் தீய விளைவுகளையே கொணரும். ஆக, நாம் எப்போதும் இயேசுவோடு இணைந்திருக்க வேண்டும் என்றால் அவருடைய உயிர் நம்மில் நிலைத்திருக்க வேண்டும். இது நாம் இயேசுவிடமும் இயேசுவை நமக்குத் தந்த தந்தையிடமும் நம்பிக்கை கொள்வதால் மட்டுமே நிகழும். அவரே நமக்கு ஒளியாகவும் வாழ்வாகவும் இருக்கின்றார். அவர் காட்டுகின்ற ஒளியிலும் வழியிலும் நடந்துசெல்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். அந்நிலைவாழ்வு இவ்வுலகிலேயே தொடங்கிவிட்டது என்பதை நாம் அன்பின் கனிகளிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
மன்றாட்டு:
இறைவா, உம்மிடமிருந்து ஒருநாளும் பிரியாத வரத்தை எங்களுக்குத் தந்தருளும்.
|