யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்கா காலம் 5வது வாரம் செவ்வாய்க்கிழமை
2015-05-05


முதல் வாசகம்

"நாம் பலவேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்14:19-28

19 அப்போது அந்தியோக்கியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுல் மேல் கல் எறிந்தார்கள்; அவர் இறந்து விட்டார் என்று எண்ணி நகருக்கு வெளியே அவரை இழுத்துப்போட்டார்கள். 20 சீடர்கள் அவரைச் சூழ்ந்து நின்றபோது அவர் எழுந்து நகரினுள் சென்றார். மறுநாள் அவர் பர்னபாவுடன் தெருபைக்குப் புறப்பட்டுச் சென்றார். 21 அந்த நகரில் அவர்கள் நற்செய்தி அறிவித்துப் பலரைச் சீடராக்கிய பின் லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா ஆகிய நகரங்களுக்குத் திரும்பி வந்தார்கள். 22 அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, "நாம் பலவேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்" என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள். 23 அவர்கள் ஒவ்வொரு திருச்சபையிலும் மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து நோன்பிருந்து இறைவனிடம் வேண்டித் தாங்கள் நம்பிக்கை கொண்டிருந்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தார்கள்; 24 பின்பு பிசிதியா வழியாகப் பம்பிலியா வந்தார்கள். 25 பெருகை நகரில் இறைவார்த்தையை அறிவித்தபின் அத்தாலியா வந்தார்கள்; 26 அங்கிருந்து கப்பலேறி அந்தியோக்கியா வந்தார்கள்; அங்குதான் அவர்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணிக்கப்பட்டார்கள். இப்போது அப்பணியைச் செய்து முடித்துவிட்டார்கள். 27 அவர்கள் அங்கு வந்ததும் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், அவர் பிற இனத்தவர்க்கு நம்பிக்கை கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததையும் அறிவித்தார்கள். 28 அங்கே அவர்கள் சீடர்களுடன் பல நாள்கள் தங்கினார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்;
திருப்பாடல்கள்145;8-13,21

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள் பல்லவி

11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். பல்லவி

13 உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி

21 என்வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக! உடல்கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவதாக!


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வது பற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14:27-31

27 அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். 28 "நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்" என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வது பற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர். 29 இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லி விட்டேன். 30 இனி நான் உங்களோடு மிகுதியாக பேசப் போவதில்லை; ஏனெனில் இவ்வுலகின் தலைவன் வந்து கொண்டிருக்கின்றான். அவனுக்கு என் மேல் அதிகாரம் இல்லை. 31 ஆனால் நான் தந்தையின் மீது அன்பு கொண்டுள்ளேன் என்பதையும் அவர் எனக்குக் கட்டளையிட்டபடி செயல்படுகிறேன் என்பதையும் உலகு தெரிந்து கொள்ள வேண்டும். எழுந்திருங்கள், இங்கிருந்து போவோம்

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

நான் உங்களுக்குத் தரும் அமைதி

எங்கே நிம்மதி, அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்பது மனிதனின் அமைதி தேடும் படலத்தில் பின்னணிப் பாடல். பொன் இருந்தும், பொருள் இருந்தும், பெண் இருந்தும ;, பெயர் இருந்தும், மனதிலும் குடும்பத்திலும் அமைதி இல்லாது இந்த பின்னணிப் பாடலை முனகிக் கொண்டிருக்கிறான் மனிதன். அமைதியைத் தேடி மதுவிலும் மாதுவிலும் புகையிலும் போதையிலும் முங்கி மூழ்கிக்கொண்டிருக்கிறான் மனிதன். இவற்றில் அமைதி தேடும் மனிதன்இவையெல்லாம் நமக்கு அமைதி தருவதாகப் படம் காட்டி, படுகுழிக்கு பாதை அமைக்கும் கானல்நீர் என்பதை மனிதன் அறிவதில்லை.

அமைதிதேடி அலைமோதி நிலைகுலையும் மனித சமுதாயத்திற்கு இயேசு பதிலாக தீர்வாக இருக்கிறார். "என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல"(யோவான் 14:27) இவ்வாறு தன் தெய்வீக அமைதியில் நமக்குப் பங்கு தருகிறார்.எதைப்பற்றியும் கலங்கவோ மருளவோ அவசியம் இல்லா அமைதி இந்த இறை அமைதி.

இறைவன் தரும் இந்த அமைதி சற்று வித்தியாசமானது; முற்றிலும் புதுமையானது. ஆனால் அதில் கிடைக்கும் அமைதியோ அலாதியானது. இது வேதனையில் கிடைக்கும் அமைதி. இழப்பில் குவியும் அமைதி.பாரங்கள் சுமப்பதில் புதைந்திருக்கும் அமைதி. குழப்பங்களின் ஆழத்தில் அமிழ்ந்திருக்கும் அமைதி. வெறுமையில் வெற்றிடத்தில் பரவியிருக்கும் அமைதி.கொடுப்பதில் சேரும் அமைதி. உள்ளுக்குள் இருந்து உயிரூயட்டி, உரமூட்டி, உற்சாகப்படுத்தி வாழவைக்கும் அமைதி. இந்த அமைதியைத் தேடுவோம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள்.

மன்றாட்டு:

இறைவா, உம் தூய ஆவி எந்நாளும் எங்களோடு இருந்து எங்களை வழிநடத்துவதை உணர்ந்து நாங்கள் ஆறுதல் அடைந்திட அருள்தாரும்.