இன்று பொதுக்காலம் 13 ஆம் ஞாயிறு.‏

திருவழிப்பாட்டு ஆண்டு B (28-06-2015)

இது எனது உடல்: இது எனது உடன்படிக்கையின் இரத்தம்./> இது எனது உடல்: இது எனது உடன்படிக்கையின் இரத்தம்/> இது எனது உடல்: இது எனது உடன்படிக்கையின் இரத்தம்/> கடவுள் அன்பாய் இருக்கிறார்/> தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்./> கடவுள் அன்பாய் இருக்கிறார்/> இது எனது உடல்: இது எனது உடன்படிக்கையின் இரத்தம்./> நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்/> நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்/>


திருப்பலி முன்னுரை

இறை மக்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். ஆண்டின் பொதுக்காலம் 13 ஆம் வார திருப்பலி வழிபாட்டில் பங்கேற்க அணியமாகி, கூடி வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும்; என் அன்பு வாழ்த்துகளைக் கூறி மகிழ்கிறேன்.

சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை: வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை. இயேசு செல்வராயிருந்தும் நமக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நாம் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார். கடவுளது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்: நம் அழுகையை ஆர்ப்பரிப்பாக அவர் மாற்றிவிடுகின்றார் என்னும் ஆறுதலின் செய்திகளை இன்றைய இறைவார்த்தைகள் நமக்குத் தந்து நிற்கின்றன. ஆகவே நாமும், மற்றவர்களின் சுமையைத் தணிப்பதற்காக நம்மையே அர்ப்பணிப்போம். நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம் ஆகிய அனைத்தையும் மிகுதியாய்க் கடவுள் நமக்குத் தந்துள்ளமையினால் அறப் பணியிலும், அன்புப் பணியிலும் நாம் முழுமையாய் ஈடுபட உறுதி கொண்டவர்களாய் இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

நம்பிக்கைக்குரியவர்களே,

இன்றைய முதல் வாசகம், மனிதர் அழியாமைக்கென்று கடவுளால் படைக்கப்பட்டவர் கள் என்ற கருத்தை முன் வைக்கிறது. கடவுள் தமது சாயலில், அதாவது நன்மைக்குரிய வாழ்வு வாழ மனிதரை உருவாக்கினார். அலகையின் சூழ்ச்சியால் உலகில் நுழைந்த பாவம் மனிதரை சாவுக்கு ஆளாக்கியது என்றும் எடுத்துரைக்கின்றது. நாம் நிலைவாழ்வின் மக்களாக வாழ வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 1: 13-15; 2: 23-24

சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை; வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை. இருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார். உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை; அழிவைத் தரும் நஞ்சு எதுவும் அவற்றில் இல்லை; கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை. நீதிக்கு இறப்பு என்பது இல்லை. கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்; தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார். ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், என்னைக் கைதூக்கிவிட்டீர்.
திருப்பாடல்30: 1,3. 4-5. 10,11,12

ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. 3 ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். பல்லவி

4 இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். 5 அவரது சினம் ஒரு நொடிப்பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. பல்லவி

10 ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். 11ய நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; 12b என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். பல்லவி

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

நம்பிக்கைக்குரியவர்களே,

இன்றைய இரண்டாம் வாசகம், இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழ வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கிறது. செல்வராய் இருந்த இயேசு நம் பொருட்டு ஏழையானது போல, நாமும் பிறரது நன்மைக்காக நம்மை தாழ்த்திக்கொள்ள வேண்டுமென்று புனித பவுல் அழைப்பு விடுக்கிறார். நம்மிடம் மிகுதியாய் இருப்பதைக் கொண்டு பிறரது குறைகளை நீக்கும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இப்பொழுது உங்களிடம் மிகுதியாய் இருக்கிறது; அவர்களுடைய குறையை நீக்குங்கள்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 8: 7,9,13-15

சகோதரர் சகோதரிகளே, நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம் ஆகிய அனைத்தையும் மிகுதியாய்க் கொண்டிருக்கிறீர்கள். எங்கள்மேல் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பெருகிக்கொண்டு வருகிறது. அதுபோல் இந்த அறப்பணியிலும் நீங்கள் முழுமையாய் ஈடுபடவேண்டும். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராய் இருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார். மற்றவர்களின் சுமையைத் தணிப்பதற்காக நீங்கள் துன்புற வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. மாறாக, எல்லாரும் சமநிலையில் இருக்கவேண்டும் என்றே சொல்கிறோம். இப்பொழுது உங்களிடம் மிகுதியாய் இருக்கிறது; அவர்களுடைய குறையை நீக்குங்கள். அவ்வாறே அவர்களிடம் மிகுதியாக இருக்கும்போது உங்கள் குறையை நீக்குவார்கள். இவ்வாறு உங்களிடையே சமநிலை ஏற்படும். ``மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை; குறைவாகச் சேகரித்தவருக்கும் எதுவும் குறைவுபடவில்லை'' என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 21-43

அக்காலத்தில் இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, ``என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்'' என்று அவரை வருந்தி வேண்டினார். இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர். அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வரவர மிகவும் கேடுற்றது. அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு, மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து, அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில், ``நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்'' என்று அப்பெண் எண்ணிக்கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப்போக்கு நின்றுபோயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார். உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, ``என் மேலுடையைத் தொட்டவர் யார்?'' என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், ``இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், `என்னைத் தொட்டவர் யார்?' என்கிறீரே!'' என்றார்கள். ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், ``மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு'' என்றார். அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், ``உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?'' என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், ``அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்'' என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை. அவர்கள் தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, ``ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்'' என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றிய பின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக்கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், ``தலித்தா கூம்'' என்றார். அதற்கு, `சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு' என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். ``இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது'' என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

கருணையை வாழ்நாள் முழுவதும் கொண்டுள்ள தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும்; மற்றவர்களின் சுமையைத் தணிப்பதற்காக தம்மையே அர்ப்பணிக்கவும். நீர்மிகுதியாய்க் கொடுத்துள்ள நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம் ஆகிய அனைத்தையும் கொண்டு அறப்பணியிலும், அன்புப் பணியிலும் அவர்கள் முழுமையாய் ஈடுபட நன்மனதை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எல்லாம் வல்லவரான தந்தையே இறைவா!

உம்முடைய மக்களாகிய நாங்களும் நீர்மிகுதியாய்க் எமக்குத் தந்துள்ள நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம் ஆகிய அனைத்தையும் கொண்டு அறப்பணியிலும், அன்புப் பணியிலும் நாங்கள் முழுமையாய் ஈடுபடும் நன் மனதை எமக்கு அளித்தருள வேண்டுமென்றும், பல்வேறு நோய்களினால் தாக்கப்பட்டு அல்லலுறும் அனைவரையும் உம்முடைய பரிவிரக்கத்தினால் தொட்டுக் குணப்படுத்தியருள வேண்டுமென்றும், அகதி வாழ்வு, சிறைவாழ்வு, வதை முகாம் இவற்றுள் நின்று போராடிக் கொண்டிருக்கும் அனைவரையும் காத்து, நிறை மகிழ்ச்சியை அவர்களுக்கு வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அழைத்தலின் நாயகனே இயேசுவே,

அக்கரைக்குச் செல்ல நீர் தந்த அழைப்புக்காக நன்றி. எல்லாப் பணிகளுக்கு மத்தியிலும் உமக்கும், எனக்கு நெருக்கமானவர்களுக்கும் நேரம் ஒதுக்கி, தனித்திருக்க, உறவை மேம்படுத்த அருள் தாரும். சிறிய கடுகு விதையாக ஊன்றப்பட்டு, உலகெங்கும் செழித்து வளர்ந்து கொண்டிருக்கும் திருச்சபையின் மக்கள் அனைவரும், இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி வாழவும், உலகில் அமைதியையும் ஒற்றுமையையும் உருவாக்கும் இறையாட்சியின் தூதுவர்களாக செயல்படவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

உறைவிடம் தருபவராம் இறைவா,

உம்மை அறியாத எம் நாட்டு மக்கள் அனைவரும் நீர் நட்டு வளர்த்த திருச்சபையில் உறைவிடம் தேடவும், உமது ஆட்சியை ஏற்றுக்கொண்டு உண்மைக்கு சான்றுபகர்பவர்களாக வாழவும் தூண்டுதல் அளிக்க வேண்டுமென்றும், இவ்வுலகில் வாழும் மாந்தர் அனைவரும், மூவொரு இறைவனாகிய நீரே உண்மை கடவுள் என்பதை அறிந்துகொள்ளவும், உமது பிள்ளைகளாக அன்பிலும் நீதியிலும் ஒற்று மையிலும் வாழவும் உதவ வேண்டுமென்றும், குடும்பப் பிரச்சனைகளால் அமைதியிழந்தும் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைவர் மேலும் மனமிரங்கி அவர்களின் வேதனைகள் அனைத்தையும் மகிழ்ச்சியாக மாற்றிட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆறுதல் அனைத்திற்கும் ஊற்றாகிய இறைவா!

ஆதரவற்றோர், கைவிடப்பட்டோர், நோயுற்றோர் மற்றும் வறுமையில் வாடுவோர் அனைவரும் உமது பாதுகாப்பையும், பராமரிப்பையும் பெற்று மகிழ்ந்திட வேண்டுமென்றும், உடலின் உயிர்ப்பினால் மாட்சிபெற்ற உம் திருமகனைப் போன்று, உள்ளத்தின் உயிர்ப்பினால் உமது மாட்சியில் பங்குபெறும் தகுதி அடையுமாறு எம் நாட்டினர் அனைவருடைய வாழ்வையும் புதுப்பிக்க வேண்டுமென்றும், உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

அருள் வாழ்வின் ஊற்றான தந்தையே!

நாங்கள் உமது வாக்கையும்; நியமங்களையும் நீதி நெறிகளையும் நேரிய முறையில் நாம் கடைப்பிடித்து, அன்பியசமூக வாழ்வு வாழ்வதற்கும், கிறிஸ்துவின் பெயரால் பல்வேறு சபைகளாக வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும், தூய ஆவியாரின் வல்லமையால் ஒன்றிணைந்து, ஒரே திருச்சபையாக கிறிஸ்துவுக்கு சான்று பகர உதவவும், எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், தூய ஆவியாரின் ஆலயங்களாக வாழ்ந்து, எங்கள் சொற்களாலும் செயல்களாலும் கிறிஸ்து இயேசுவுக்கு சான்று பகரும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம் 'தலித்தா கூம்' என்றார். அதற்கு, 'சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு' என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள்'' (மாற்கு 5:41-42)

நாம் பிறரைத் தொட்டு, அந்த ஒரு நல்ல தொடுகையின் வழியாக, பிறரை உற்சாகப்படுத்தி, ஊக்கமூட்டுபவர்களாக வாழ வேண்டும். தொடுதல் நல்ல நோக்கத்துடன்; அமைந்திடும்போது அது பிறரை வாழ்விக்கும். அதைத்தான் இறைமகன் செய்தார். அவரைத் தொட்ட பெண்ணும் குணமடைந்தாள். இயேசு தொட்ட சிறுமியும் குணம் பெற்றாள். இருவரும் தொடுதலின் வழியாக வாழ்வைப் பெற்றுக் கொண்டனர். தொடுகின்றபோது, நம்மிடம் உள்ள உற்சாகம், இறையுணர்வு அவர்களுக்குள்ளாகச் செல்லும்போது. அவர்களும் உற்சாகமும். ஊக்கமும் பெறுகின்றனர்.

பெற்றோர் தம் குழந்தைகளை தொட்டு, அரவணைக்கும் போதும், ஆசிரியர்கள் மாணவர்களை தட்டிக் கொடுத்து, கரம் பிடித்து எழுத வைக்கும்போதும் அந்தக் குழந்தையானது புதுத்தெம்பை, புது உற்சாகத்தை பெற்றுக்கொள்கிறது.� நாம் நோயுற்றவர்களைத் தொடும்போது, அவர்களும் உள்ளத்தில் மகிழ்வைப் பெறுகின்றனர். இறைமகன் தான் குணப்படுத்திய அத்தனை நோயுற்ற மக்களையுமே தன் தொடுதல் வழியாகவே குணப்படுத்துவதை நாம் விவிலியத்தில் காண்கின்றோம். தொடுதல், பரிசுத்தமாக, ஆத்மார்த்தமாக இருக்கவேண்டும். தவறான உணர்வுளுடன் தொடுதலைப் தவிர்த்து, பரிசுத்தமான தொடுதலின் வழியாக, பிறருக்கு ஊக்கமூட்;டுபவர்களாக, வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் வல்லமையில் நாங்கள் நம்பிக்கை கொள்ளவும் அதனால் வாழ்வு பெறவும் அருள்தாரும்.