பொதுக்காலம் இருபத்தாறாம் ஞாயிறு
திருவழிபாடு ஆண்டு - B
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
1. எண் 11: 25-29
2. யாக்கோபு 5:1-6
3. மாற். 9:38-48
திருப்பலி முன்னுரை -1
அன்புக்குரியவர்களே,
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது: அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது: எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது.
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! அனைவருமே இறைவாக்கினராகும்படி, தம் ஆவியை நமக்கு அளிக்கும் விண்ணகத் தந்தையின் திருப்பெயரால் நல்வாழ்த்துக்கள் கூறி
இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று பொதுக்காலம் இருபத்தாறாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.
ஆண்டவரின் நியமங்கள் சரியானவை என்னும் உண்மையை இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு அழுத்தம் திருத்தமாக எடுத்துக் கூறுகின்றன.
இறைவன் ஒவ்வெருக்கும் தமது விருப்பத்திற்கேற்ப கொடைகளையும், பணிகளையும் வழங்குகின்றார்.
ஆகவே ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை: அவை முற்றிலும் நீதியானவை.
நாம் இதனை விசுவசித்து ஏற்றுக்கொண்டு வாழவேண்டும் என்பதே இன்று நமக்கு வழங்கப்படும் அழைப்பாக அமைகின்றது.
இவ்வேளையில் நாமும் இறைவனுடைய திட்டங்களைச் சரியாகப் புரிந்து கொண்டு வாழவும்,
ஆண்டவரே உமது வார்த்தையே உண்மை உண்மையினால் எங்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும் என்னும் செபத்தை முழுமனதோடு எப்பொழும் நமக்குள்ளே செபித்து,
இறைவனுக்குகந்த அர்ப்பண வாழ்வு வாழ இத்திருப்பலியில் வரங்கேட்டுச் செபிப்போம்.
திருப்பலி முன்னுரை -2
கடவுளுக்குரியவர்களே,
பொதுக்காலத்தின் இருபத்தாறாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நமது பாவ இயல்புகளைக் களைந்துவிட்டு கடவுளுக்கு உரியவர்களாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது.
உண்மை கடவுளை அறிந்துகொள்ளாத மற்றவர்கள் முன்னிலையில், கடவுளுக்கு சான்று பகர்பவர்களாக வாழவும்,
கிறிஸ்துவின் பெயரால் நற்செயல் புரிவோரை ஏற்றுக்கொள்ளவும் நாம் அழைக்கப்படுகிறோம்.
நமது உடல் உறுப்புகளைக் கொண்டு பாவம் செய்வதை விட, அவற்றை வெட்டி எரிந்துவிடுவதே நல்லது என்ற கடுமையான வார்த்தைகள்
இயேசுவின் வாயில் இருந்து புறப்படுவதை இன்றைய நற்செய்தியில் காண்கிறோம்.
ஆண்டவரின் ஆவியைப் பெற்றவர்களாய், புனிதமான வாழ்வு வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
முதல் வாசக முன்னுரை
கடவுளுக்குரியவர்களே,
இன்றைய முதல் வாசகம் மோசேயைத் தவிர, கடவுளின் ஆவியைப் பெற்ற மேலும் எழுபது பேர் இறைவாக்கு உரைத்ததைப் பற்றி எடுத்துரைக்கிறது.
அவர்களில் இருவர் பாளையத்தில் இறைவாக்கு உரைத்ததைக் கண்டு, அவர்களைத் தடுத்து நிறுத்துமாறு யோசுவா மோசேயிடம் கேட்பதைக் காண்கிறோம்.
மோசேயோ கடவுளின் திட்டத்தில் நாம் குறுக்கிடக்கூடாது என்பதை உணர்த்தும் பதிலை அளிக்கிறார். கடவுளின் திட்டத்தை சரியாக உணர்ந்து வாழும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.
அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு!
எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 11: 25-29
அந்நாள்களில் ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து மோசேயோடு பேசினார்; அவரில் இருந்த ஆவியில் கொஞ்சம் எடுத்து எழுபது மூப்பருக்கு அளித்தார்; ஆவி அவர்கள் மேல் இறங்கவே அவர்கள் இறைவாக்கு உரைத்தனர்; அதன் பின்னர் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. இரண்டு மனிதர் பாளையத்திலேயே தங்கி விட்டனர்; ஒருவன் பெயர் எல்தாது, மற்றவன் பெயர் மேதாது. அவர்கள்மீதும் ஆவி இறங்கியது; பதிவு செய்யப்பட்டவர்களில் இவர்களும் உண்டு; ஆனால் அவர்கள் கூடாரத்துக்குச் சென்றிருக்கவில்லை. ஆகவே அவர்கள் பாளையத்திலேயே இறைவாக்கு உரைத்தனர்.
ஓர் இளைஞன் ஓடி வந்து மோசேயிடம், ``எல்தாதும் மேதாதும் பாளையத்தில் இறைவாக்கு உரைக்கின்றனர்\'\' என்று சொன்னான்.
உடனே தேர்ந்தெடுக்கப்பட்டோரில் ஒருவரும் மோசேயின் ஊழியரும் நூனின் மைந்தருமான யோசுவா, ``மோசே! என் தலைவரே! அவர்களைத் தடுத்து நிறுத்தும்\'\' என்றார்.
ஆனால் மோசே அவரிடம், ``என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகிறாயா? ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு என்றார்.
பின் மோசேயும் இஸ்ரயேலின் மூப்பரும் பாளையத்துக்குத் திரும்பினர்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விக்கின்றன.
திருப்பாடல் 19: 7,9. 11-12. 13
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. 9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. பல்லவி
11 அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன். அவற்றைக் கடைப்பிடிப்போருக்கு மிகுந்த பரிசுண்டு. 12 தம் தவறுகளை உணர்ந்து கொள்பவர் யார்தாம்? என் அறியாப் பிழைக்காக என்னை மன்னியும். பல்லவி
13 ஆணவமிக்கோரிடமிருந்து உம் அடியானைக் காத்தருளும். அவர்கள் என்னை ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்; அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்; பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன். பல்லவி
இரண்டாம் வாசகம்
இரண்டாம் வாசக முன்னுரை
கடவுளுக்குரியவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு, தீய வழியில் செல்வம் சேர்ப் போரின் இழிநிலையைப் பற்றி எடுத்துரைக்கிறார்.
பிறருடைய உழைப்புக்குரிய ஊதியத்தினை வழங்காமல், அதில் சேர்த்த செல்வத்தைக் கொண்டு வாழ்வோருக்கு கேடு விளையும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
இவ்வுலக செல்வமும், ஆடம்பர வாழ்வும் நிலையற்றவை என்பதை உணர நமக்கு அழைப்பு விடுக்கிறார்.
உலகப் பொருட்களாலும், இன்பங்களாலும் மயங்கிவிடாமல், கடவுளுக்கு உரியவர்களாக வாழும் வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.
உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று. திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6செல்வர்களே, சற்றுக் கேளுங்கள். உங்களுக்கு வரப்போகும் இழிநிலையை நினைத்து அலறி அழுங்கள். உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று. உங்கள் ஆடைகள் பூச்சிகளினால் அரிக்கப்பட்டுவிட்டன. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிர்ச் சான்றாக இருக்கும்; அது நெருப்புப் போல உங்கள் சதையை அழித்துவிடும். இந்த இறுதி நாள்களில் செல்வத்தைக் குவித்து வைத்திருக்கின்றீர்களே! உங்கள் வயலில் அறுவடை செய்த வேலையாள்களுக்குரிய கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள்; அது கூக்குரலிடுகிறது. அறுவடை செய்தவர்களின் கூக்குரல் படைகளின் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளது. இவ்வுலகில் ஆடம்பரமாகவும் இன்பமாகவும் வாழ்ந்தீர்கள். கொல்லப்படும் நாளுக்காக உங்கள் உள்ளங்களைக் கொழுக்க வைத்தீர்கள். நேர்மையானவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துக் கொலை செய்தீர்கள். ஆனால் அவர் உங்களை எதிர்த்து நிற்கவில்லை.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் எங்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 38-48
அக்காலத்தில் யோவான் இயேசுவிடம், ``போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்\'\' என்றார்.
அதற்கு இயேசு கூறியது: ``தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.
நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.
உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குத் தள்ளப்படுவதை விட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.
உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.
உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள், நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது. நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.\'\'
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள்.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
புனிதத்தின் ஊற்றாம் இறைவா,
உமது திருச்சபையின் வழிகாட்டிகளாக நீர் தேர்ந்தெடுத்துள்ள எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும்,
இவ்வுலகின் தீய வழிகளில் இருந்து விலகி, புனிதம் நிறைந்த வாழ்வு வாழத் தேவையான அருளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
இறைவாக்கினரை உருவாக்குபவராம் இறைவா,
உமது திருச்சபையின் மக்கள் அனைவரும், உம்மைப் பற்றிய உண்மைகளுக்கு சான்று பகரும் இறைவாக்கினர்களாய் திகழ்ந்து,
உலக மக்களை மனந்திருப்பத் தேவையான ஆர்வத்தையும் உற்சாகத்தையும் அளிக்க வேண்டுமென்றும், உண்மை கடவுளாகிய உம்மைப் புறக்கணித்து வாழும் எம் நாட்டு மக்கள் அனைவரும்,
உமது மேலான வல்ல செயல்களாலும், அகத் தூண்டுதலாலும் உம்மை அறிந்து ஏற்றுக் கொள்ளத் தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
விடுதலை அளிப்பவராம் இறைவா,
உலக மக்களிடையே நிலவும் தீய நாட்டங்கள், பயங்கரவாதப் போக்குகள், வன்முறை ஆர்வங்கள், பழிவாங்கும் எண்ணங்கள் ஆகியவற்றைக் களைந்து,
நீதியும் அன்பும் அமைதியும் நிலவும் சூழல் உருவாக உதவ வேண்டுமென்றும், எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும்,
உமது ஆவியைப் பெற்றவர்களாய் தூய வாழ்வு வாழ்ந்து, பிறர் முன்னிலையில் உமக்கு சான்று பகரும் இறைவாக்கினர்களாய் திகழும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
இரக்கத்தின் தந்தையே இறைவா!
நாங்கள் உமது திட்டங்களைச் சரியாகப் புரிந்து கொண்டு வாழவுழ், ஆண்டவரே உமது வார்த்தையே உண்மை உண்மையினால்
எங்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும் என்னும் செபத்தை முழுமனதோடு எப்பொழும் எமக்குள்ளே செபித்து உமக்குகந்த அர்ப்பண வாழ்வு வாழ வரமருள வேண்டு மென்றும்,
உலகப் பொருட்கள் மீதும், செல்வத்தின் மீதும் நாட்டம் கொள்ளும் எமது தீய நாட்டங்களிலிருந்து நாம் விடுதலை பெற்று,
இறையரசையும், உமக்கு ஏற்புடையதையும் நாம் நாடித் தேட அருள் கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நலமானதை அருளும் தந்தையே!
எங்கள் நாட்டு மக்கள் அனைவரும் தன்னலத்தினைக் களைந்து,
சமூக நலத்திலும், எளியவர்களின் முன்னேற்றத்திலும் அக்கறை கொண்டவர்களாய் வாழ்ந்து,
இறையாட்சிக்குரிய சமத்துவ, சகோதரத்துவ சமுதாயத்தைக் கட்டியெழுப்ப உதவ வேண்டுமென்றும்,
நோய்கள் நீங்கிப் பஞ்சம் ஒழியவும், சிறைப்பட்டோர் விடுதலை பெறவும், வழிப்போக்கர் பாதுகாப்புப் பெறவும், பயணம் செய்வோர் நலமாக நாடு திரும்பவும்,
நோயுற்றோர் நலம் பெறவும், இறக்கின்றவர் மீட்பின் நிறைவு பெறவும்;,வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நலந்தரும் ஊற்றாம் இறைவா,
உம்மை நம்பிக்கையோடு தேடி வரும் மக்களின் உடல் நோய்களையும், மன நோய்களையும் முழுமையாக குணப்படுத்தி,
மற்றவர்களின் முன்னிலையில் உமது மாட்சிமிகு செயல்களின் சாட்சிகளாக அவர்களை மாற்ற வேண்டுமென்றும்,
உம் திருமகன் இயேசுவின் அன்பை வெளிப்படுத்தும் ஏற்றத்தாழ்வற்ற கிறிஸ்தவ சமூகத்தை உருவாக்குபவர்களாய் வாழும் அருளை எம் பங்குத்தந்தை,
அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவர் மேலும் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
நீதியின் நாயகராம் இறைவா,
உலகெங்கும் நீதிக்காகவும், அமைதிக்காகவும் ஏங்கும் உமது மக்களின் துன்பங்களை நீக்கி, அவர்கள் விரும்பும் நீதியும் அமைதியும் நிறைந்த உலகை உருவாக்கிட வேண்டு மென்றும்,
உம் திருவுளத்தை உணர்ந்தவர்களாய், நீதியின் வழியில் நன்மை செய்பவர்களாக வாழத் தேவையான அருள் வரங்களை எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள்,
பங்கு மக்கள் அனைவர் மீதும் பொழிந்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
இளையோருக்காக :
வளங்களை வாரி வழங்கி உள்ளங்களை நெறிப்படுத்தும் இறைவா!
இச்சமுதாய முன்னேற்றத்தில் உறுதுணையாக இருக்கும் இளையோரை நிறைவாக ஆசீர்வதித்து
அவர்கள் இத்திருச்சபையின் வருங்காலத்தூண்களாக மாறவும்,
அருள் வாழ்விலும், உலகவாழ்விலும் செயலாற்றும் நம்பிக்கைக் கொண்டவராய் வாழ தேவையான அருளை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
|