இரண்டாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 26வது வாரம் வெள்ளிக்கிழமை 2015-10-02
தூய காவல் தூதர்கள்
முதல் வாசகம்
உன்னைப் பாதுகாக்கவும், நான் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் உன்னைக் கொண்டு சேர்க்கவும், இதோ நான் உனக்கு முன் ஒரு தூதரை அனுப்புகிறேன்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 23: 20-23
ஆண்டவர் கூறுவது: வழியில் உன்னைப் பாதுகாக்கவும், நான் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் உன்னைக் கொண்டு சேர்க்கவும், இதோ நான் உனக்கு முன் ஒரு தூதரை அனுப்புகிறேன். அவர்முன் எச்சரிக்கையாயிரு; அவர் சொற்கேட்டு நட; அவரை எதிர்ப்பவனாய் இராதே. உன் குற்றங்களை அவர் பொறுத்துக் கொள்ளார். ஏனெனில், என் பெயர் அவரில் உள்ளது. நீ அவர் சொல் கேட்டு நடந்தால், நான் சொல்வது யாவற்றையும் கேட்டுச் செயல்பட்டால், நான் உன் எதிரிகளுக்கு எதிரியும், உன் பகைவர்க்குப் பகைவனும் ஆவேன். ஏனெனில், என் தூதர் உனக்கு முன் செல்வார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
`நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்
திருப்பாடல்கள்;91 : 1-2. 3-4. 5-6. 10-11
1 உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர். 2 ஆண்டவரை நோக்கி, `நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்' என்று உரைப்பார். பல்லவி
3 ஏனெனில், ஆண்டவர் உம்மை வேடரின் கண்ணியினின்றும் கொன்றழிக்கும் கொள்ளை நோயினின்றும் தப்புவிப்பார். 4 அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்; அவர்தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர்; அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும். பல்லவி
5 இரவின் திகிலுக்கும் பகலில் பாய்ந்துவரும் அம்புக்கும் நீர் அஞ்சமாட்டீர். 6 இருளில் உலவும் கொள்ளைநோய்க்கும் நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் அஞ்சமாட்டீர். பல்லவி
10 ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது; வாதை உம் கூடாரத்தை நெருங்காது. 11 நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருத வேண்டாம்; அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-5, 10
அக்காலத்தில் சீடர்கள் இயேசுவை அணுகி, ``விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?'' என்று கேட்டார்கள்.
அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்: ``நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.
இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருத வேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வான தூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''இயேசு ஒரு சிறு பிள்ளையை அழைத்துச் சீடர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்:
'நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள்
என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'...'' (மத்தேயு 18:3)
கடவுளின் பார்வையை நாம் பெற வேண்டும் என்பது இயேசுவின் போதனையின் முக்கிய அம்சம். எனவே கடவுளாட்சி பற்றிப் பேசும் போதெல்லாம் இயேசு சாதாரண மனித கண்ணோட்டத்தின்படி நாம் தீர்ப்பிடலாகாது என வலியுறுத்துகிறார். பதவி, அந்தஸ்து, சமூகப் படிநிலை போன்ற மதிப்பீடுகளுக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட அன்றைய சமூகத்தில் இயேசுவின் போதனை விசித்திரமாகத் தோன்றியிருக்கும். ஏன், இன்றும் கூட, எத்தனையோ மனிதர் பதவி, பணம், சமூக மதிப்பு, அந்தஸ்து போன்ற மதிப்பீடுகளையே தங்கள் வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதைக் காண்கின்றோம். இயேசுவின் பார்வையோ இந்த ''உலகப் பார்வை''யிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அவர் ஒரு சிறு குழந்தையை அழைக்கின்றார். வளர்ந்த, பலம் பொருந்திய மனிதராகச் சீடர்கள் அவரைச் சூழ்ந்து நிற்கின்றனர். அங்கே இயேசு புரிந்த இச்செயல் தனிப் பொருள் கொண்டது. சிறு குழந்தைகளுக்கு அன்றைய சமூகத்தில் மதிப்பில்லை. அவர்கள் பெற்றோரையும் பெரியோரையும் சார்ந்து வாழ வேண்டிய நிலை. பிறரிடமிருந்து உதவி பெற்றுத்தான் அவர்கள் தங்கள் தேவையை நிறைவு செய்ய இயலும்.
இச்செயலைத் தொடர்ந்து இயேசு கூறிய சொற்கள் அச்செயலின் பொருளை வெளிப்படுத்துகின்றன. அதாவது சீடர்கள் ''மனம் திரும்ப'' வேண்டும்; ''சிறு பிள்ளையாக'' மாற வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு விண்ணரசில், கடவுளின் ஆட்சியில் இடம் உண்டு. மனம் திரும்புதல் என்றால் வாழ்க்கை முறையை வேரோட்டமாக மாற்றியமைத்தல் எனப் பொருள்படும். பயணம் செல்லும் ஒருவர் தான் அதுவரை நடந்துசென்ற பாதை தவறானது என உணர்ந்ததும் உடனேயே திரும்பி, வந்த வழியே மீண்டும் நடந்து சரியான பாதையில் போகிறார் என்பது ''மனம் திரும்புதல்'' ஆகும். முதிர்ச்சியடைந்த மனிதர் எனத் தங்களைக் கருதுவோர் மீண்டும் ஒரு குழந்தைபோல சிறிய உருவினராய் மாறுவது இயலாது. ஆனால் கடவுளையே முற்றிலுமாக நம்பியிருக்கின்ற மனிதராக நாம் மாற முடியும், மாறவும் வேண்டும். இவ்வாறு கடவுளிடத்தில் நாம் முழு நம்பிக்கை கொண்டு வாழ்ந்தால் கடவுளின் ஆட்சியில் நமக்குப் பங்குண்டு என இயேசு வாக்களிக்கிறார்.
மன்றாட்டு:
இறைவா, குழந்தை உள்ளம் கொண்டு வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.
|