இரண்டாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 27வது வாரம் செவ்வாய்க்கிழமை 2015-10-06
முதல் வாசகம்
நினிவே மக்கள் தீய வழிகளினின்று விலகியதைக் கண்டு, ஆண்டவர் தம் மனத்தை மாற்றிக் கொண்டார்.
இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 3: 1-10
இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர் ``நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி'' என்றார்.
அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார். நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக் கடக்க மூன்று நாள் ஆகும்.
யோனா நகருக்குள் சென்று, ஒரு நாள் முழுதும் நடந்தபின், உரத்த குரலில், ``இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்'' என்று அறிவித்தார்.
நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர். இந்தச் செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக் கொண்டு, சாம்பல் மீது உட்கார்ந்தான்.
மேலும் அவன் ஓர் ஆணை பிறப்பித்து அதை நினிவே முழுதும் பறைசாற்றச் செய்தான். ``இதனால் அரசரும் அரசவையினரும் மக்கள் அனைவருக்கும் அறிவிப்பதாவது: எந்த மனிதரும் உணவைச் சுவைத்துக்கூடப் பார்க்கக் கூடாது. ஆடு, மாடு முதலிய விலங்குகளும் தீனி தின்னவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது. மனிதரும் விலங்குகளும் சாக்கு உடை உடுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்; தம் தீயவழிகளையும், தாம் செய்துவரும் கொடும் செயல்களையும் விட்டொழிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், கடவுள் ஒருவேளை தம் மனத்தை மாற்றிக் கொள்வார்; அவரது கடுஞ்சினமும் தணியும்; நமக்கு அழிவு வராது.''
கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்; தாம் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; 2
திருப்பாடல்கள் 130: 1-2. 3-4. 7-
1 ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; 2 ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். பல்லவி
3 ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்? 4 நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். பல்லவி
7 இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு; பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. 8 எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ``மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுடன் ஓர் ஊருக்குச் சென்றார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார்.
மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, ``ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்'' என்றார்.
ஆண்டவர் அவரைப் பார்த்து, ``மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது'' என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவே நின்று,
'உங்களுக்கு அமைதி உரித்தாகுக!' என்னு அவர்களை வாழ்த்தினார்.
அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள்'' (லூக்கா 24:36-37)
சாவிலிருந்து உயிர்த்தெழுந்த இயேசு தம் சீடர்களுக்குத் தோன்றியபோது சீடர்கள் அவரை எளிதில் கண்டுகொள்ளவில்லை என்பதை நற்செய்தி நூல்கள் அடிக்கடி குறிப்பிடுகின்றன. அவர்கள் ''ஓர் ஆவியைக் காண்பதாக நினைத்தார்கள்'' (லூக் 24:37), அவர்களை அச்சம் மேற்கொண்டிருந்தது என்றும் லூக்கா குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. உயிர்த்தெழுந்த இயேசு சாதாரண மனித உருவில் சீடர்களுக்குத் தோன்றவில்லை என்பதையே இது காட்டுகிறது. சீடர்கள் இயேசுவை அடையாளம் காண்பதற்கு நேரம் பிடித்தது. இயேசு அவர்களுக்குத் தம் கைகளையும் கால்களையும் தொட்டுப்பார்க்கச் சொல்கிறார். மேலும் இயேசு சீடர்களை வாழ்த்திய முறையும் நம் கவனத்தை ஈர்க்கிறது. சீடர்களை சந்திக்கும்போதெல்லாம் இயேசு, ''உங்களுக்கு அமைதி!'' என வாழ்த்துகிறார். அமைதி என்னும் சொல் விவிலியத்தில் ஆழ்ந்த பொருள்கொண்டது. கடவுளின் அருள், ஆசி, அன்பு, இரக்கம் அனைத்தையும் உள்ளடக்கிய கொடை தான் அமைதி. இதை எபிரேய மொழியில் ''ஷலோம்'' என்பர். இச்சொல்லே இஸ்லாமியரிடையே ''சலாம்'' என வழங்குகிறது. ஆக, இயேசு தம் சீடர்களுக்கு வழங்குகின்ற அமைதி வெறும் வாழ்த்துரை மட்டுமல்ல; கடவுள் தம் அன்பையும் அருளையும் தம் மக்களோடு இயேசுவின் வழியாகப் பகிர்ந்துகொள்கிறார்.
இயேசுவைக் கண்ட பிறகும் சீடர்கள் அவரை அடையாளம் காண நேரம் பிடித்தது. நம் வாழ்விலும் சில வேளைகளில் நாம் இயேசுவின் பிரசன்னத்தைக் கண்டுகொள்ளத் தவறிவிடுகிறோம். ஏதோ ஓர் ஆவிபோலத் தான் அவர் நம்மிடையே உலவுவதாகக் கூட நாம் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவன்று. இயேசு தம் சீடர்களோடு உலகம் முடியும் வரை இருப்பதாக வாக்களித்திருக்கிறார். ''இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்'' (மத் 28:20) என இயேசு கூறிய வாக்குறுதி நமக்கு மன உறுதி தரவேண்டும். நம்மோடு வாழ்கின்ற இயேசு நமக்குக் கடவுளின் அமைதியை அளிக்கின்றார். அப்பம் பிட்கின்ற வேளையிலும் அதைப் பகிர்ந்துகொள்கின்ற தருணத்திலும் அவருடைய உடனிருப்பு சிறப்பான விதத்தில் துலங்குகிறது. நாமும் ஒருவருக்கொருவர் அமைதி வழங்குவோராக, ஒருவரோடொருவர் அப்பம் பகிர்வோராக வாழ்ந்திட அழைக்கப்படுகிறோம்.
மன்றாட்டு:
இறைவா, உம் அமைதியை எங்களுக்கும் உலகுக்கும் அளித்தருளும்.
|