யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 28வது வாரம் புதன்கிழமை
2015-10-14




முதல் வாசகம்

எல்லா மனிதருக்குமே வேதனையும் நெருக்கடியும் உண்டாகும்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-11

பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிப்போரே, நீங்கள் யாராயினும், சாக்குப் போக்குச் சொல்வதற்கு உங்களுக்கு வழியில்லை. ஏனெனில் பிறருக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும்போது நீங்கள் உங்களுக்கே தண்டனைத் தீர்ப்பை அளிக்கிறீர்கள். தீர்ப்பளிக்கும் நீங்கள் அந்தத் தீர்ப்பைப் பெறுவதற்கான செயல்களைச் செய்கிறீர்களே! இத்தகையவற்றைச் செய்வோருக்குக் கடவுள் அளிக்கும் தீர்ப்பு நீதி வழுவாதது என்பது நமக்குத் தெரியும். இவற்றைச் செய்வோர்மேல் தீர்ப்பளிக்கும் நீங்களும் இவற்றையே செய்துவருகிறீர்கள்! நீங்கள் மட்டும் கடவுளின் தீர்ப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கிறீர்களா? அல்லது, அவரது அளவற்ற பரிவையும் சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் ஏளனம் செய்கிறீர்களா? உங்களை மனம்மாறச் செய்வதற்கே கடவுள் பரிவு காட்டுகிறார் என்பது உங்களுக்குத் தெரியாதா? உங்கள் கடின உள்ளம் உங்களை மனம்மாற விடவில்லை; ஆகையால் கடவுளின் சினமும் நீதித் தீர்ப்பும் வெளிப்படவேண்டிய நாளில் உங்களுக்கு வரப்போகும் தண்டனையைச் சேமித்து வைக்கிறீர்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கடவுள் கைம்மாறு செய்வார். மன உறுதியோடு நற்செயல் புரிந்து மாட்சி, மாண்பு, அழியாமை ஆகியவற்றை நாடுவோருக்கு அவர் நிலைவாழ்வை வழங்குவார். ஆனால் தன்னலம் நாடுபவர்களாய் உண்மைக்குப் பணியாமல், அநீதிக்குப் பணிபவர்களின் தலைமேல் அவருடைய சினமும் சீற்றமும் வந்து விழும். முதலில் யூதருக்கும் பிறகு கிரேக்கருக்கும் அதாவது, தீமை செய்யும் எல்லா மனிதருக்குமே வேதனையும் நெருக்கடியும் உண்டாகும். அவ்வாறே, முதலில் யூதருக்கும் அடுத்துக் கிரேக்கருக்கும் அதாவது, நன்மை செய்யும் அனைவருக்குமே பெருமையும் மாண்பும் அமைதியும் கிடைக்கும். ஏனெனில் கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய்க் காத்திரு;
திருப்பாடல்கள் 62: 1-2. 5-6. 8

1 கடவுளின் செயலுக்காக நான் மௌனமாய்க் காத்திருக்கின்றேன்; எனக்கு மீட்பு கிடைப்பது அவரிடமிருந்தே; 2 உண்மையாகவே என் கற்பாறையும் மீட்பும் அவரே; என் கோட்டையும் அவரே; எனவே நான் சிறிதும் அசைவுறேன். -பல்லவி

5 நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய்க் காத்திரு; ஏனெனில், நான் எதிர்பார்க்கும் நலன் வருவது அவரிடமிருந்தே; 6 உண்மையாகவே, என் கற்பாறையும் மீட்பும் அவரே. எனவே, நான் சிறிதும் அசைவுறேன். -பல்லவி

8 மக்களே! எக்காலத்திலும் அவரையே நம்புங்கள்; அவர் முன்னிலையில் உங்கள் உள்ளத்தில் உள்ளதைத் திறந்து கொட்டுங்கள்; கடவுளே நமக்கு அடைக்கலம். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "ஐயோ! பரிசேயரே, உங்களுக்குக் கேடு! தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்களே. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித லூக்காஸ் எழுதிய நற்செய்தியில் இருந்து வாசகம் 11;42-46

42 "ஐயோ! பரிசேயரே உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா,கறியிலை, மற்றும் கீரைச் செடிவகைகள் எல்லாவற்றிலும் பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப் படைக்கிறீர்கள். ஆனால் நீதியையும் கடவுளின் அன்பையும் பொருட்படுத்துவதில்லை. இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்க வேண்டும்; ஆனால் அவற்றையும் விட்டு விடலாகாது. 43 "ஐயோ! பரிசேயரே, உங்களுக்குக் கேடு! தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்களே. 44 ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் அடையாளம் தெரியாத கல்லறைகள்போல் இருக்கிறீர்கள். மக்களும் கல்லறைகள் எனத் தெரியாமல் அவற்றின் மீது நடந்து போகிறார்கள். " 45 திருச்சட்ட அறிஞருள் ஒருவர் அவரைப் பார்த்து, "போதகரே, இவற்றைச் சொல்லி எங்களை இழிவுபடுத்துகிறீர்" என்றார். 46 அதற்கு அவர், "ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு! ஏனென்றால் நீங்கள் தாங்க முடியாத சுமைகளை மக்கள் மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ அந்தச் சுமைகளை ஒரு விரலால் கூடத் தொடமாட்டீர்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு,'ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு! ஏனென்றால் நீங்கள் தாங்கமுடியாத சுமைகளை மக்கள்மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ அந்தச் சுமைகளை ஒரு விரலால்கூடத் தொடமாட்டீர்கள்' என்றார்'' (லூக்கா 11:46)

யூத மக்களின் சமய வாழ்வையும் சமூக வாழ்வையும் வழிப்படுத்தியது ''திருச்சட்டம்''. அது வெறும் சட்டத் தொகுப்பு அல்ல, மாறாக ஒரு வாழ்க்கை நெறி. மக்கள் அதை மகிழ்ச்சியோடும் நிறைவான உள்ளத்தோடும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். ஆனால் திருச்சட்டத்தை விளக்கிய ''அறிஞர்கள்'' பல துல்லியமான நுணுக்கங்களை அதில் புகுத்தினார்கள். எடுத்துக்காட்டாக, ''ஓய்வுநாளைப் புனிதமாகக் கடைப்பிடி'' (காண்க: இச 5:12) என்னும் கட்டளைக்கு விளக்கம் அளித்த அறிஞர்கள் அந்த நாளில் மக்கள் 39 வகையான வேலைகளைச் செய்யலாகாது என்று கற்பித்தார்கள். இது ''மனித சட்டம்'' எல்லைமீறிப் போனதையே காட்டுகிறது. எனவே, இயேசு இத்தகைய விளக்கங்களை ''மக்கள்மீது சுமத்தப்பட்ட சுமையாக''க் காண்கிறார் (லூக் 11:46). இத்தகைய சட்டங்களும் சடங்குமுறை சார்ந்த துல்லியமான விளக்கங்களும் ''சுமக்க இயலாத நுகமாக'' மாறிவிட்டிருந்தன (காண்க: திப 15:10).

இவ்வாறு மக்களுடைய வாழ்க்கையைக் கடினமாக மாற்றிய திருச்சட்ட அறிஞர்கள் அந்த மக்களுக்கு உதவி புரிவதற்கு மாறாக அவர்களுக்குக் கொடுமைதான் இழைத்தார்கள். ஒருவேளை அந்த திருச்சட்ட அறிஞர்கள் சட்டத்தைத் துல்லியமாகக் கடைப்பிடித்திருக்கலாம் என்றாலும் அவர்கள் சட்டத்திற்கு அளித்த விளக்கம் மக்களுக்குத் துன்பத்தையே கொணர்ந்தது. கடவுள் காட்டுகின்ற வழியில் நடந்துசெல்வது மனிதருக்கு ஒரு சுகமான அனுபவமாக மாற வேண்டும். அந்த வழியில் நடப்பது எப்போதும் எளிதாக இல்லாமல் இருக்கலாம்; ஏன், சில வேளைகயில் நாம் தியாகம் செய்வதும் தேவையாகலாம். ஆனால் கடவுள் நமக்கு அளித்துள்ள நெறியைக் கடைப்பிடிப்பது நம் உள்ளத்திற்கு நிறைவையும் நம் வாழ்வுக்கு மகிழ்ச்சியையும் தருவதாக இருக்க வேண்டும். கவலை தோய்ந்த முகத்தோடு கடவுளின் நெறியில் நடப்பதற்கு மாறாக, மகிழ்ச்சி கலந்த உணர்வுகளோடு அவரை அன்புசெய்து அவர் காட்டுகின்ற வழியில் பயணம் செய்வதே நமக்கு அழகு.

மன்றாட்டு:

இறைவா, உம் திருச்சட்டத்தை நாங்கள் விருப்போடு செயல்படுத்த அருள்தாரும்.