யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 2வது வாரம் திங்கட்கிழமை
2016-01-18




முதல் வாசகம்

கீழ்ப்படிதலே பலிகளை விடச் சிறந்தது.
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 15: 16-23

அந்நாள்களில் சாமுவேல் சவுலை நோக்கி, �நிறுத்தும், இன்றிரவு ஆண்டவர் எனக்குக் கூறியவற்றை உமக்குச் சொல்கிறேன்� என, சவுல், �சொல்லுங்கள்� என்றார். சாமுவேல் கூறியது: �நீர் உமது பார்வைக்கே சிறியவராய் இருந்த போதல்லவா இஸ்ரயேல் குலங்களுக்குத் தலைவர் ஆனீர்? ஆண்டவரும் உம்மை இஸ்ரயேலின் அரசராகத் திருப்பொழிவு செய்தார். ஆண்டவர் உமக்கு வழிகாட்டி, �நீ சென்று அந்தப் பாவிகளான அமலேக்கியரை அழித்துவிட்டு வா. இறுதிவரை போரிட்டு அவர்களை ஒழித்துவிடு� என்று சொன்னார். அப்படியிருக்க, நீர் ஏன் ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை? கொள்ளைப்பொருள்மீது பாய்ந்து ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்ததேன்?� அதற்குச் சவுல், சாமுவேலை நோக்கி, �ஆண்டவரின் குரலுக்கு நான் செவிகொடுத்தேன், அவர் காட்டிய வழியிலும் சென்றேன். அமலேக்கியரின் மன்னன் ஆகாகைக் கொண்டு வந்தேன். ஆனால் அமலேக்கியரை அழித்துவிட்டேன். ஆனால் வீரர்கள் உம் கடவுளாகிய ஆண்டவருக்குக் கில்காலில் பலி செலுத்த, தடை செய்யப்பட்ட கொள்ளைப் பொருளினின்று சிறந்த ஆடுகளையும், மாடுகளையும் கொண்டு வந்தனர்� என்றார். அப்போது சாமுவேல் கூறியது: �ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது எரிபலிகள், பிற பலிகள் செலுத்துவதா? அவரது குரலுக்குக் கீழ்ப்படிவதா? கீழ்ப்படிதல் பலியை விடச் சிறந்தது, கீழ்ப்படிதல் ஆட்டுக் கிடாய்களின் கொழுப்பை விட மேலானது! கலகம் சூனியத்திற்கு நிகரான பாவம்! முரட்டுத்தனம் சிலைவழிபாட்டுக்கு ஒப்பான குற்றம். நீர் ஆண்டவரின் வார்த்தையைப் புறக்கணித்தீர்! அவரும் உம்மை அரச பதவியினின்று நீக்கிவிட்டார்.�

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் எனது மீட்பைக் கண்டடைவர்.
திருப்பாடல் 50: 8-9. 16-17. 21,23

8 நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை; உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன. 9 உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக் கிடாய்களையோ, நான் ஏற்றுக்கொள்வதில்லை. பல்லவி

16bஉ என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை? 17 நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். பல்லவி

21 இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்; நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்; ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்; பல்லவி

உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்து உரைக்கின்றேன். 23 நன்றிப் பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 18-22

யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்து வந்தனர். சிலர் இயேசுவிடம், ``யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?'' என்று கேட்டனர். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ``மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்க முடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பு இருக்க முடியாது. ஆனால் மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள். எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்தப் புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் பெரிதாகும். அதுபோலப் பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி வைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; மதுவும் தோற்பைகளும் பாழாகும். புதிய மது புதுத் தோற் பைகளுக்கே ஏற்றது'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

-பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை-

எப்பொழுது நாம் பழையதையும் புதியதையும் கலக்கிறோமோ அப்பொழுது அங்கெல்லாம் குழப்பமும் இழப்பும் எற்படுவதை அறிவோம். ஏனென்றால் இரண்டும் இணைந்து செல்வது கடினம்.கிறிஸ்தவர்கள் நாம் 'புது நெறி'யைச்(தி.தூ 9 :2) சார்ந்தவர்கள். புதிய படைப்பு (1 கொரி 11 :25). புதிய மனித இனம்( எபே 2 :15). புதிய மனிதன் (எபே 4 :24). புதிய மனித இயல்பு (கொலோ 3 :10). புதிய வழி(எபி 10 :20) புதிய கட்டளை (யோவா 13 :34). புதிய உடன்படிக்கை ( கொரி; 11 :25).

தூய ஆவி அருளும் புதிய நெறியில்"(உரோமை7'6) இத்தனை புதியவைகளை உள்ளடக்கிய நாம், சட்டங்களுக்குள்ளும் சம்பிரதாயங்களுக்குள்ளும் அடைக்க முற்பட்டால், சட்டங்களும் சம்பிரதாயங்களும் சிதைந்தழியும்.கிறிஸ்தவம் என்றும் புதியது. அதற்கு முதுமை பழமை என்பது இல்லை. காலத்தின் சுழற்சிக்கு எற்ப என்றும் தன்னை புதுப்பித்துக்கொண்டு மக்களை புதிய வானகம், புதிய வையகம், புதிய எருசலேம் நோக்கி அழைத்துச் செல்வது கிறிஸ்தவம்.

ஆகவே தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, அவரால் வழி நடத்தப்படுவதற்குப் பதிலாக, 'அவர் நோன்பிருந்தார், அந்த காலத்தில் அப்படி இருந்தோம்,அந்த வழிபாட்டு முறைதான் வேண்டும் என்பதெல்லாம் பழைய பாத்திரத்தில் புதிய இரசத்தை அடைக்கும் முயற்சி. அது பாத்திரத்தை உடைக்கும் முயற்சி. இரசத்தை வீணாக்கும் செயல். புதிய மது புதுத் தோற்பைகளுக்கே ஏற்றது இதைச் செய்வோம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள்.

மன்றாட்டு:

திருச்சபையின் மணமகனாம இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். காலம் வரும்போது அவர்களும் நோன்பிருப்பார்கள் என்று உம் சீடர்களைப் பற்றி மொழிந்தீரே. உமக்கு நன்றி. இதோ, இந்த நாள்களில் நோன்பிருப்பதன் அவசியத்தை உணர்ந்து, நாங்கள் இந்த மூன்று வகையான நோன்புகளையும் கடைப்பிடிக்க அருள்தாரும்.