யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C

(இன்றைய வாசகங்கள்: எசாயா 6: 1-8, 1 கொரி 15: 1-11, லூக்கா5: 1-11



உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/> உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/> உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/> உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/> உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/> உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/>


திருப்பலி முன்னுரை

அன்புமிக்க சகோதர, சகோதரிகளே! இறைபிரசன்னத்தில் ஒரே சமூகமாக ஒன்றிணைந்திருக்கும் அனைவரையும் அன்போடு இன்றைய ஆண்டின் பொதுக்காலம் 5 ஆம் வாரம் திருவழிபாட்டிற்கு வரவேற்கின்றேன்.

யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்? , இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்.

நம்மை அழைக்கும் இறைவன் தமது அருள் நலன்களால் நம்மை நிரப்புகின்றார். மடிந்து விட்டது என்று நாம் எண்ணும் போது முளைக்கச் செய்பவர் இறைவன். இல்லை என்பது இறைவனிடம் இல்லை. தமது வார்த்தையால் நமக்கு வளமூட்டுகின்றார், நம்மை வாழ வைக்கின்றார். இறைவனுடைய வார்த்தை ஆற்றல்மிக்கது, சக்தி வாய்ந்தது என்னும் உண்மைகள் நமக்கு இன்றைய செய்தியாகத் தரப்படுகின்றது.

எனவே நாம் நம்பிக்கையற்று வாழும் நிலையிலிருந்து விடுபட்டு இறைவனில் நம்பிக்கை கொள்ளுவோம். இறையரசின் வீரர்களாக நாம் மாறுவோம், கிறிஸ்துவுக்கே முன்னுரிமை கொடுப்போம். சுயநலம் மறந்து திருச்சபைக்கும், அயலவருக்கும் நிபந்தனையின்றிப் பணி செய்ய முன்வருவோம்: இறையன்பைப் பிரதிபலிக்கும் சாட்சிகளாக மாறுவோம். இந்தச் சிந்தனைகளை ஆழமாக உள்ளத்தில் இருத்தியவர்களாக இறைவனுக்கு நன்றி கூறி விசு வாசத்தோடு இறைவரம் கேட்டுச் செபிப்போம்.

முதல் வாசகம்

இதோ அடியேன் என்னை அனுப்பும்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 6: 1-8

உசியா அரசர் மறைந்த ஆண்டில், மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந்திருப்பதை நான் கண்டேன்; அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது. அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்து நின்றனர்; ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன; ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக்கொண்டனர்; இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்தனர்; மற்ற இரண்டால் பறந்தனர். அவர்களுள் ஒருவர் மற்றவரைப் பார்த்து: `படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்; மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது' என்று உரத்த குரலில் கூறிக்கொண்டிருந்தார். கூறியவரின் குரல் ஒலியால் வாயில் நிலைகளின் அடித்தளங்கள் அசைந்தன; கோவில் முழுவதும் புகையால் நிறைந்தது. அப்பொழுது நான்: ``ஐயோ, நான் அழிந்தேன். ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்; தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே'' என்றேன். அப்பொழுது சேராபீன்களுள் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப் பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து அதைத் தம் கையில் வைத்துக்கொண்டு என்னை நோக்கிப் பறந்து வந்தார். அதனால் என் வாயைத் தொட்டு, ``இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது'' என்றார். மேலும் ``யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?'' என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, ``இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்'' என்றேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
திருப்பாடல் 138: 1-8

ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். 2 உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். பல்லவி

2bஉ உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். 3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். பல்லவி

4 ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர். 5 ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்; ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது! பல்லவி

7உமது வலக் கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர். 8 நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். பல்ல

இரண்டாம் வாசகம்

திருத்தூதர்கள் போதித்ததையே நாங்கள் பறைசாற்றுகிறோம்; நீங்களும் நம்புகிறீர்கள்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 1-11

சகோதரர் சகோதரிகளே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக்கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள். நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே. நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்துவிட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார். நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப் பெறத் தகுதியற்றவன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். அவர் எனக்களித்த அருள் வீணாகிவிடவில்லை. திருத்தூதர்கள் எல்லாரையும்விட நான் மிகுதியாகப் பாடுபட்டு உழைத்தேன். உண்மையில் நானாக உழைக்கவில்லை; என்னோடு இருக்கும் கடவுளின் அருளே அவ்வாறு உழைக்கச் செய்தது. நானோ மற்றத் திருத்தூதர்களோ யாராய் இருந்தாலும் இதையே பறைசாற்றுகிறோம். நீங்களும் இதையே நம்பினீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! `என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்,'' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-11

ஒரு நாள் இயேசு கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகை விட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக்கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார். அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, ``ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்'' என்றார். சீமோன் மறுமொழியாக, ``ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்'' என்றார். அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையில் இருந்தன. இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, ``ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்'' என்றார். அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, ``அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்'' என்று சொன்னார். அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டுபோய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்: ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

என்றும் மாறாத மிகுந்த இரக்கமுள்ள இறைவனே!

வேதனைகளும், துன்பங்களும், இழப்புக்களும், வன்முறைகளும், அழிவுகளும் பெருகிவிட்ட இன்றைய உலகிலே உமது அருட்பணியைத் தொடர்ந்தாற்றும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரையும் நீர் தூய ஆவியின் கொடைகாளால் நிரப்பி, அவர்களை வலுப்படுத்தி, அவர்கள் அனைவரும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் மாபெரும் சக்திகளாக விளங்கச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஒருவர் ஒருவரின் சுமைகளைத் தாங்கிக் கொள்ள சமூக உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!

உம்மைப் போற்றுகிறோம். எங்களுடைய சொந்த விருப்பத்தினாலோ, பாடுபட்டு உழைப்பதாலோ நாங்கள் எதையும் சாதித்துவிடப் போவதில்லை. உமது இரக்கத்தால் மட்டுமே எங்கள் உழைப்புக்குக் கனிகள் கிடைக்கும் என்று அறிகிறோம். ஆண்டவரே, எங்கள் உழைப்பை ஆசிர்வதியும். உமது இரக்கத்தால் எங்கள் பணிகளில் எங்களுக்கு வெற்றி அருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

என்னைக் கை பிடித்து நடக்கப் பழக்கின தந்தையே! எம் இறைவா!

நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இவர்கள் உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும்: எமது பிள்ளைகள் இறையுறவிலும், ஒழுக்கத்திலும், ஞானத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கி உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் உமக்குப் பணிபுரிவதற்கு வேண்டிய நல்லுள்ளம் அவர்களிடம் உருவாகிடவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நாங்கள் வேண்டுவதற்கும், விரும்புவதற்கும் மேலாகவே எங்களை ஆசிர்வதிக்கும் அன்பு தெய்வமே,

உம்மைப் போற்றுகிறோம். எங்களது சோர்வு வேளைகளில் நாங்கள் தளர்ந்து விடாமல், உமது சொற்களை நம்பி, தொடர் முயற்சிகளில் ஈடுபட எங்களுக்கு ஆற்றறல் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்களை உமது உரிமைச் சொத்தாகத் தேர்ந்து கொண்ட எம் இறைவா!

எங்கள் குடும்பங்களில் இறைமகனின் வருகையை உணர்ந்திடவும், தெளிவற்று திகைத்து நிற்பவர் தெளிவு பெறவும், கொள்கைப் பிடிப்பின்றி வாழ்பவர் கொள்கைப் பிடிப்புடன் வாழவும், பிறரன்பில் தழைத்திடவும் உமது அருள்வரங்களை நிறைவாய் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மனிதனாக அவதரித்த மாபரனின் தந்தையே!

எங்கள் சமூகத்தில் இடம் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும் ஏழைகள், அநாதைகள், கைவிடப்பட்டோர், மாற்று திறனாளிகள் அனைவரையும் ஆசீர்வதித்து அவர்கள் மறுவாழ்வு பெறவும், எங்கள் ஒவ்வொருடைய உள்ளத்திலும் அவதரித்து அன்பு, அமைதி, சமாதானம் போன்ற புண்ணியங்களை எங்களுக்கு பொழிந்தருள வேண்டுமாய், பிறந்திருக்கின்ற இயேசுபாலன் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சிய+ட்டும் நற்செய்தியை வழங்கும் தந்தையே!

இன்று இத்திருப்பலியில் பங்குகொள்ளமுடியாமல் நோயுற்றிருப்போர், சிறைகளிலும், வதைமுகாம்களிலும் இருப்போர், அகதிகள் முகாம்களில் இருப்போர், பல்வேறு வேலைத்தளங்களில் பணியாற்றுவோர், பயணம் செய்வோர் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்களும் இன்றைய நாளின் மகிழ்வையும், ஆசீரையும் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்றும், நிலையற்ற இந்த உலகின் செல்வங்களைத் தேடி மன நிம்மதியை இழந்து நிற்கும் மக்கள் அனைவரும், நிலையான செல்வமாகிய உம்மில் நிம்மதி காண அருள்புரியவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

தாயும் தந்தையுமான இறைவா,

உடல், உள நோயினால் வேதனையுறும் அனைவரையும் நீர் இரக்கத்துடன் கண்நோக்கி: அவர்களின் வேதனையைத் தணித்து, நிறைவான உடல், உள நலத்தை அளித்துக் காத்திட வேண்டுமென்றும், இன்று எமது சமூகத்திலே வீணான விவாதங்களாலும், குழப்பங்களாலும், தவறான போதனைகளாலும், பிடிவாதத்தாலும், உறவை முறித்து, விசுவாசத்தை மறந்து பாதை மாறிச் செல்லும் அனைவர்மீதும் மனமிரங்கி உமது வழியில் செல்ல அவர்களை வழிப்படுத்தியருள வேண்டுமென்றும், எமது இளைஞர்களை நிறைவாக ஆசீர்வதியும். அவர்களது இளமைப் பருவத்தின் பாவங்களையும், குற்றங்களையும் நினையாது உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் அவர்கள் மேல் பொழிந்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு...'ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்' என்றார்'' (லூக்கா 5:4)

கெனசரேத்து ஏரியைக் ''கலிலேயாக் கடல்'' என அன்றைய மக்கள் அழைத்தனர். அவ்வளவு பரந்து விரிந்த நீர்த்தேக்கம் அது. அந்த ஏரியில் சில சமயம் நல்ல அளவில் மீன்படும்; வேறு தருணங்களில் மீன் ஒன்றுமே கிடைக்காமல் மீனவர் திரும்புவர். அப்படி ஏமாற்றமான ஒருநாள் இயேசு ஏரிக்கரைக்கு வருகிறார். மீன் படவில்லையே என வருத்தத்தோடு இருந்த மீனவரை நோக்கி இயேசு ''ஆழத்தில் வலையை வீசுங்கள்'' என்கிறார். எங்கெல்லாமோ வலைவீசியும் ஒரு மீனும் கிடைக்காத நிலையிலும் சீமோன் இயேசுவுக்கு மறுமொழியாக, ''உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்'' என்கிறார். சீமோன் இயேசுவிடத்தில் இன்னும் முழுமையான நம்பிக்கை கொள்ளவில்லை. இயேசு சொன்னபடி நடக்குமா நடக்காதா என்ற கேள்வி அவருடைய உள்ளத்தில் எழுந்தாலும், அதை அமுக்கிவிட்டு, சீமோன் இயேசு சொன்னபடி செய்கிறார். வலைகள் நிறைந்து கிழிந்துபோகும் அளவுக்கு மீன் கிடைக்கிறது. எல்லாரும் மகிழ்ச்சியடைகின்றனர்.

ஆனால் இயேசு இங்கே ஓர் ஆழமான உண்மையை உணர்த்துகிறார். அவருடைய வார்த்தையை எவ்விதத் தயக்கமும் இன்றி முழுமனதோடு ஏற்பவர் அவருடைய அன்புக்கு உரியவர்கள். அது மட்டுமல்ல, எந்தவொரு காரியத்தை நாம் செய்தாலும், அதில் ''ஆழமான'' உண்மை ஒன்று உண்டு என்பதை நாம் மறத்தலாகாது. பல தடவைகளிலும் நம் சொல்லும் செயலும் வெறுமனே மேலெழுந்த வாரியாக நின்றுவிடுவதுண்டு. ஆனால் இயேசு நாம் ''ஆழத்திற்குச் செல்ல வேண்டும்'' என அறிவுறுத்துகிறார். இந்த ஆழத்தில் நாம் காண்பது என்ன? கடவுளின் அமைதியான பிரசன்னம் அங்கே ஒரு சிறு விளக்கென எரிந்துகொண்டிருப்பதை நாம் காணலாம். கடவுளின் குரல் அங்கே இதமான ஒரு மவுன மொழியாக ஒலிப்பதை நாம் கேட்கலாம். அன்பு என்னும் ஊற்றிலிருந்து கசிந்து எழுகின்ற இறை இனிமையை நாம் சுவைக்கலாம். இதையெல்லாம் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றால் நாம் ''ஆழத்திற்குச் செல்ல வேண்டும்''. நம் இதயத்தின் ஆழத்தில் நாம் இறைவனைக் காணும்போது அவரோடு மனித குலம் முழுவதையும் நாம் கண்டுகொள்வோம். அப்போது உண்மையாகவே நாம் மீன்பிடிப்போராக இல்லாமல் மனிதர்களைக் கடவுளுக்காகப் ''பிடித்து''' வரும் உண்மையான சீடராகத் திகழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் இதயத்தின் ஆழத்தில் உம்மை கண்டுகொள்ள எங்கள் கண்களைத் திறந்தருளும்.