மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
(இன்றைய வாசகங்கள்:
2010.03..07
விடு.பயண 3:1-8,13-15,
1கொரிந் 10:1-6,10-12,
லூக்கா 13:1-9
 />
 />
 />
 />
 />
 />
 />
 />
 />
 />
 />
திருப்பலி முன்னுரை
இறைமகன் இயேசுவில் அன்பு நிறை அருட்தந்தை! (அருட்தந்தையர்களே) இறை இயேசுவில் அன்புமிக்க சகோதர சகோதரிகளே!
துன்பங்களைத் துடைத்து, அடிமைத்தன வாழ்வை அகற்றி மகிழ்ச்சியில் நம்மை நிலைப்படுத்தும் இறைவனின் நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.
தவக்கால மூன்றாம் வாரத்தில் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்க அணியமாயிருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன்.
இங்கே அணுகி வராதே: உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு: ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்"
மக்கள்படும் துன்பத்தையும், அவர்கள் எழுப்பும் அவலக் குரலையும், அவர்களின் துயரங்களையும் இறைவன் ஒருபோதும் சகித்துக்கொள்வதில்லை.
மிகுந்த மனதுருக்கம் உடையவரான நம் தந்தையாம் இறைவன் நம் ஒவ்வொருவர் மீதும் கண்ணும் கருத்துமாக இருந்து முழுமையானதும்,
உலகம் தரமுடியாததுமான விடுதலையையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் தருகின்றார்.
அவரே நம் வாழ்வின் அரணும், பாதுகாப்பும், கேடயமுமாக இருக்கின்றார் என்னும் உன்னத உண்மைகள் இன்றைய இறைவார்த்தைகளின் இதய நாதமாக இருக்கின்றன.
எனவே, இறைவனினடம் முழுமையாக நம்மை ஒப்படைத்து அவர் காட்டும் ஒளியிலும் , வழியிலும் நடப்போம். ஆவரைச் சிக்கெனப் பிடித்துக்கொள்வோம்.
அவர் வழியாகவே முதலும், முழுமை யானதுமான அமைதியையும், விடுதலையையும் பெற்றுக் கொள்ள முயலுவோம். நம்மையே முழுவதும் ஒப்புக்கொடுத்துச் செபிப்போம். இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.
முதல் வாசகம்
இருக்கின்றவராக இருக்கின்றவர்' என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 3: 1-8,13-15
அந்நாள்களில் மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலைநிலத்தின் மேற்றிசையாக ஓட்டிக்கொண்டு கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார்.
அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்துகொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை.
``ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை? இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன்'' என்று மோசே கூறிக்கொண்டார்.
அவ்வாறே பார்ப்பதற்காக அவர் அணுகி வருவதை ஆண்டவர் கண்டார்.
`மோசே, மோசே' என்று சொல்லிக் கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க, அவர் ``இதோ நான்'' என்றார்.
அவர், ``இங்கே அணுகி வராதே; உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு; ஏனெனில் நீ நின்றுகொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்'' என்றார்.
மேலும் அவர், ``உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே'' என்றுரைத்தார். மோசே கடவுளை உற்று நோக்க அஞ்சியதால் தம் முகத்தை மூடிக்கொண்டார். அப்போது ஆண்டவர் கூறியது: எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன். எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கி வந்துள்ளேன்.
மோசே கடவுளிடம், ``இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, `அவர் பெயர் என்ன?' என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?'' என்று கேட்டார்.
கடவுள் மோசேயை நோக்கி, `இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே' என்றார்.
மேலும் அவர், ``நீ இஸ்ரயேல் மக்களிடம், `இருக்கின்றவர் நானே' என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்'' என்றார்.
கடவுள் மீண்டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: ``நீ இஸ்ரயேல் மக்களிடம், `உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் - ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் - என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்' என்று சொல். இதுவே என்றென்றும் என் பெயர்; தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே!''
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
திருப்பாடல்103: 1-2. 3-4. 6-7. 8,11
1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! 2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி
3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி
6 ஆண்டவரின் செயல்கள் நீதியானவை; ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமைகளை வழங்குகின்றார். 7 அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்; அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார். பல்லவி
8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். 11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. பல்லவி
இரண்டாம் வாசகம்
மோசேயோடு மக்கள் பாலைநிலத்தில் நடத்திய வாழ்க்கை நமக்கு அறிவுபுகட்டும் படிப்பினையாக எழுதப்பட்டுள்ளது.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 1-6,10-12
சகோதரர் சகோதரிகளே, நீங்கள் ஒன்றை அறிந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். நம் முன்னோர் அனைவரும் மேகத்தின்கீழ் வழிநடந்தனர். அவர்கள் அனைவரும் கடலைக் கடந்து சென்றனர். அவர்கள் அனைவரும் மோசேயோடு இணைந்திருக்கும்படி மேகத்தாலும் கடலாலும் திருமுழுக்குப் பெற்றார்கள். அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிக உணவை உண்ட னர். அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிகப் பானத்தைப் பருகினர். தங்களைப் பின்தொடர்ந்து வந்த ஆன்மிகப் பாறையிலிருந்து அவர்கள் பருகினார்கள்.
கிறிஸ்துவே அப்பாறை. அப்படியிருந்தும், அவர்களில் பெரும்பான்மையோர் கடவுளுக்கு உகந்தவராய் இருக்கவில்லை. பாலை நிலத்திலேயே அவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்கள் தீயனவற்றில் ஆசை கொண்டு இருந்தது போல நாமும் இராதவாறு இவை நமக்கு ஒரு முன்னடையாளமாக நிகழ்ந்தன. அவர்களுள் சிலர் முணு முணுத்தனர். இதனால் அவர்கள் அழிவு விளைவிக்கும் தூதரால் அழிக்கப்பட்டனர். அவர்களைப்போல் நாமும் முணுமுணுக்கக் கூடாது. அவர்களுக்கு நிகழ்ந்த இவையனைத்தும் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமைகின்றன.
இறுதிக் காலத்தில் வாழும் நமக்கு இவை அறிவுரையாக எழுதப்பட்டுள்ளன. எனவே தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர் விழுந்துவிடாதபடி பார்த்துக்கொள்ளட்டும்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வசனம்
மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது,' என்கிறார் ஆண்டவர்.
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9
அக்காலத்தில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர்.
அவர் அவர்களிடம் மறுமொழியாக, ``இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும்விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.
சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்'' என்றார்.
மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: ``ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், `பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்திமரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?' என்றார்.
தொழிலாளர் மறுமொழியாக, `ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டு வையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எரு போடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்' என்று அவரிடம் கூறினார்.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
மாட்சி மிகுந்தவரான இறைவா,
நீர் இவ்வுலகில் எமக்கு இறைவாக்குரைத்துப் பணிசெய்யத் தந்த, திருத்தந்தைக்காக உமக்கு நன்றி கூறுகிறோம்.
அவர் தொடர்ந்தும் பிரார்த்தனையிலும், தியானத்திலும் தனது வாழ்நாளைச் செலவிடவும்,
நம் அனைவரோடும் அவர் செபத்தால் ஒன்றித்திருக்கவும், திருஅவைக்குத் தனது செபத்தால் உதவவும், நாமும் செபத்தால் அவரோடு ஒன்றித்திருக்கவும்,
ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் தம்மை வந்தடையும் எல்லாவித சோதனைகளையும் வென்று,
இறைமக்களை மனமாற்றத்திற்கு இட்டுச் செல்லும் பணியை இக்காலத்தில் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லுவதற்கு வேண்டிய வலிமையும், சக்தியும், மனப்பக்குவமும் பெற்று செயற்படுவதற்கு,
ஞான ஒளியை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
கொடைகளின் தந்தையே இறைவா,
உம்மைப் போற்றுகிறோம். நீர் எங்களுக்குத் தந்திருக்கிற கொடைகள், ஆற்றல்கள், திறமைகள் அனைத்திற்காகவும் நன்றி கூறுகிறோம்.
இந்தத் திறமைகளைக் கொண்டு நாங்கள் உமக்கும், பிறருக்கும் கனிகளை வழங்கும் அருளை எங்களுக்குத் தாரும்.
இத்தவக்காலத்தில் எங்கள் வாழ்வில் மாற்றங்களை அருளும். நற்கனி கொடுப்பவர்களாக எங்களை மாற்றிருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
என்னைக் கை பிடித்து நடக்கப் பழக்கின தந்தையே! எம் இறைவா!
நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.
இவர்கள் உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும்:
எமது பிள்ளைகள் இறையுறவிலும், ஒழுக்கத்திலும், ஞானத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கி உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும்,
செயற்படவும் உமக்குப் பணிபுரிவதற்கு வேண்டிய நல்லுள்ளம் அவர்களிடம் உருவாகிடவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஞானத்தின் ஊற்றே இறைவா!
இந்நாட்களிலே எமக்கு நீர் பல்வேறு விதமாக வெளிப்படுத்தும் உமது செய்தியையும், விருப்பத்தையும்,
சித்தத்தையும் நாம் சரியான விதத்திலே புரிந்துகொண்டு உம்மோடும், எம் உறவுகளோடும் ஒப்புரவாகி,
மனமாற்றமடைந்து உமது விருப்பப்படி நடக்க வேண்டிய ஞானத்தை எமக்குத் தந்தருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
புத்துயிர் கொடுப்பவராம் இறைவா,
அன்புத் தந்தையே இறைவா! நீர் எமக்குக் கொடுத்துள்ள் ஆற்றல்கள், திறமைகள், செல்வங்கள் அனைத்திற்காகவும் உமக்கு நன்றி கூறுகின்றோம்.
இவைகளை நாம் சரியான விதத்திலே பகிர்ந்து வாழவும்,
தன்னலமற்ற விதத்திலே அவற்றை திருச்சபையின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தவும் வேண்டிய
நல்லுள்ளத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆறுதலின் ஊற்றே இறைவா!
நோயுற்றும், வேலையின்றியும் இடம்பெயர்ந்தும் அகதிகளாயும், பல்வேறு குடும்பச் சுமைகளாலும், கடன் தொல்லையினாலும் வேதனைப்படும் அனைவர் மீதும் இரக்கமாயிரும்.
இவர்களின் துன்ப துயரங் களைப் போக்கி நிலையான வேலையையும் நிம்மதியான இருப்பிடத்தையும் வழங்கிக் காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எங்களை உமது உரிமைச் சொத்தாகத் தேர்ந்து கொண்ட இறைவா!
எங்கள் குடும்பங்கள் தன்னலம் மறந்து உம்மைப் போல் அடுத்தவர்களின் வாழ்வு மலர உளமாற உழைக்கவும், உமது நற்செயல்களை எங்கள் வாழ்க்கையில் கடைபிடித்து வாழவும்,
மற்றவர்களையும் உமது இறையரசில் அழைத்து வர நற்சாட்சிகளாக மாறவும் வேண்டிய வரங்களை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்கொடைகளை வாரிவழங்கிடும் எம் இறைவா!
உம்மைப் போற்றுகிறேன். பிறரது துன்பத்தைக் கண்டு அவர்களைத் தீர்ப்பிடாத அருளைத் தாரும்.
அதே வேளையில் என்னுடைய வாழ்வில் மனமாற்றத்தைப் பெற்று புது வாழ்வு வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
தாயும் தந்தையுமான இறைவா,
உடல், உள நோயினால் வேதனையுறும் அனைவரையும் நீர் இரக்கத்துடன் கண்நோக்கி:
அவர்களின் வேதனையைத் தணித்து, நிறைவான உடல், உள நலத்தை அளித்துக் காத்திட வேண்டுமென்றும்,
இன்று எமது சமூகத்திலே வீணான விவாதங்களாலும், குழப்பங்களாலும், தவறான
போதனைகளாலும், பிடிவாதத்தாலும், உறவை முறித்து, விசுவாசத்தை மறந்து பாதை
மாறிச் செல்லும் அனைவர்மீதும் மனமிரங்கி உமது வழியில் செல்ல அவர்களை
வழிப்படுத்தியருள வேண்டுமென்றும், எமது இளைஞர்களை நிறைவாக ஆசீர்வதியும். அவர்களது இளமைப் பருவத்தின்
பாவங்களையும், குற்றங்களையும் நினையாது உமது இரக்கத்தையும், உமது
பேரன்பையும் அவர்கள் மேல் பொழிந்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
|