திருவழிபாடு ஆண்டு - C
(இன்றைய வாசகங்கள்:
யோசுவா 5:9,10-12,
2கொரிந் 5:17-21,
லூக்கா 15:01-03, 11-32
 />
 />
 />
 />
 />
 />
 />
 />
 />
 />
திருப்பலி முன்னுரை
இறைமகன் இயேசுவில் அன்பு நிறை அருட்தந்தை! (அருட்தந்தையர்களே) இறை இயேசுவில் அன்புமிக்க சகோதர சகோதரிகளே!
தமது அளவு கடந்த அன்பால் நம்மை மீட்கத் திருவுளம் கொண்ட ஆண்டவரின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை வரவேற்கிறோம்.
இன்று நாம் தவக்காலத்தின் நான்காம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம்.
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.
ஆண்டவர் இனியவர். சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும்,
ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்:
நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்று கின்றார். எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் நம்மை விடுவிக்கின்றார்.
அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்:
அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்:
மாலையில் அழுகை: காலையிலோ ஆர்ப்பரிப்பு.
அவர் நம் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்:
நம் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.
அவர் நம் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்:
அவர் நமக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார்.
ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்:
நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை:
நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை.
இவை தான் இறைவனின் இனிய இயல்புகள்.
இவ் இனிய இயல்புகளைக் கொண்டிருக்கும் இறையன்பு நம்மை வந்தடைய நமக்கு மனமாற்றமும்
மற்றவரை மன்னிக்கும் நல்ல மனப்பக்குவமும் தேவை.
எனவே அடுத்தவரை மன்னித்த ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் மலரச் செபிப்போம்.
முதல் வாசகம்
வாக்களிக்கப்பட்ட நாடு வந்து சேர்ந்த இறைமக்கள் பாஸ்கா கொண்டாடினர்.
யோசுவா நூலிலிருந்து வாசகம் 5: 9,10-12
அந்நாள்களில் ஆண்டவர் யோசுவாவிடம், ``இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன்'' என்றார்.
இஸ்ரயேலர் கில்காலில் தங்கினர். மாதத்தின் பதினான்காம் நாள் மாலை எரிகோ சமவெளியில் பாஸ்கா கொண்டாடினர். பாஸ்காவின் மறுநாள் நிலத்தின் விளைச்சலையும் புளிப்பற்ற அப்பத்தையும் வறுத்த தானியத்தையும் உண்டனர். நிலத்தின் விளைச்சலை உண்ட மறுநாளிலிருந்து மன்னா நின்றது. இஸ்ரயேலருக்கு மன்னா மீண்டும் கிடைக்கவில்லை. கானான் நிலத்தின் விளைச்சலை அந்த ஆண்டு உண்டனர்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.
திருப்பாடல் 34: 1-2. 3-4. 5-6
ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி
3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். 4 துணை வேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். பல்லவி
5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. 6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவி சாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். பல்லவி
இரண்டாம் வாசகம்
கிறிஸ்துவின் வாயிலாக, கடவுள் நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 17-21
சகோதரர் சகோதரிகளே, ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ! இவை யாவும் கடவுளின் செயலே.
அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்; ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார். உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார்.
எனவே நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம்.
நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வசனம்
நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், `அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்' என்று அவரிடம் சொல்வேன்.
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-3, 11-32
அக்காலத்தில் வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர்.
பரிசேயரும், மறைநூல் அறிஞரும், ``இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே'' என்று முணுமுணுத்தனர்.
அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: ``ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.
அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, `அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார்.
சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலைநாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார்; ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.
அவர் அறிவு தெளிந்தவராய், `என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்' என்று சொல்லிக் கொண்டார்.
உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார்.
தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், `அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்' என்றார்.
தந்தை தம் பணியாளரை நோக்கி, `முதல் தரமான ஆடையைக் கொண்டு வந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.
அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார்.
அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, `இதெல்லாம் என்ன?' என்று வினவினார்.
அதற்கு ஊழியர் அவரிடம், `உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்' என்றார்.
அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார்.
உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார்.
அதற்கு அவர் தந்தையிடம், `பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துக்களை எல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!' என்றார்.
அதற்குத் தந்தை, `மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார்.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், உம்மை நாடுவோ ர்க்கு நன்மை ஏதும் குறையாது வழங்கும் ஆண்டவரே.
உம்மையே நம்பி வாழும் உமது பணியாளர்களான திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், பொது நிலைப் பணியாளர்கள் அனைவருக்கும்
ஆன்மீக உணவை நிறைவாக வழங்கி:
இறைவார்த்தைப் பணியிலும், சாட்சிய வாழ்விலும் இவர்கள் சிறந்து விளங்கச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
மன்னிப்பையும், இரக்கத்தையும் தாராளமாகப் பொழியும் அன்புத் தந்தையே இறைவா,
உம்மைப் போற்றுகிறோம். நீர் எங்கள்மீது காட்டும் பேரன்பை பிறர்மீதும் பொழியும்போது, நாங்கள் அகமகிழவும்,
உம்மைப் பெருமைப்படுத்தவும் நல்ல மனதை எங்களுக்குத் தந்தருளும். கொடை வள்ளலான தந்தையே, உம்மைப் போற்றுகிறோம்.
உமது ஞானத்திலும், பேரன்பிலும் நீர் எங்களை மன்னித்து, அரவணைப்பதில் வள்ளலாக, தாராள உள்ளம் கொண்டவராக இருப்பதற்காக நன்றி கூறுகிறோம்.
உமது இரக்கத்தை நினைத்து வியக்கிறோம். எத்தனை முறை பாவம் செய்தாலும், மன்னித்து இரங்கும் உம் தாராள இதயம் கண்டு மகிழ்கிறோம்.
இதோ, மீண்டும் உம்மிடம் திரும்பி வருகிறோம். எம்மை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நல் ஆயனே! எம் இறைவா!
இன்றைய உலகில் நிலவும் இளையோர்க்கு எதிராக எழுப்பப்படும் கலாசார சீர்கேடுகள்,
மாயகவர்ச்சிகள், பாலியல் வன்முறைகள் இவை அனைத்திலிருந்து எம் இளைனோரை பாதுகாத்து
உம் பாடுகள், மரணம், உயிர்ப்பு இவற்றின் மறைபொருளை அறிந்து நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரம் அருள வேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
இரக்கமும் அருளும் கொண்டவரும்: நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவருமா ன ஆண்டவரே!
பகைவர்களாகவும், பகைமை உணர்வோடும், பழிவாங்கும் மன நிலையோடும் வாழந்து கொண்டிருக்கும் அனைவரும்
தங்கள் இத்தீய வாழ்க்கை முறையிலிருந்து விடுபட்டு அன்போடும், உறவோடும் மன்னித்து ஒப்புரவாகி வாழ்கின்ற
வாழ்கைக்கு திரும்புவதற்கு வேண்டிய நல்லுள்ளத்தை உருவாக்கிக் கொடுத்தருள வேண்டுமென்றும்,
உமது வார்த்தையை தாம் விரும்பியவாறு விளக்கியுரைத்துக்கொண்டு விசுவாசிகளிடையே பிளவை ஏற்படுத்துவோர்
அதிகமாகிவிட்ட இன்றைய நாட்களிலே நீரே உண்மையை வெளிப்படுத்தி உண்மை விசுவாசத்தை நோக்கி மக்களை வழிநடாத்தவும்,
பிளவுபட்டுக்கிடக்கும் அத்தனை விசுவாசிகளையும் ஒன்று சேர்த்து உமது தலைமைத்துவத்தின் கீழ் அவர்களை
வைத்துக் காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
கருணையின் தெய்வமே! எம் இறைவா!
சமூகத்தில் தனக்கு யாருமே இல்லை என்று தனித்து விடப்பட்ட விதவைகள் அனாதைகள்,
கைவிடப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர் அனைவரும் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட உம் பாடுகளின் வழியாக அவர்கள் தங்களை
புதுப்பித்த உம் இறை அருள் அவர்களுக்கு உதவிக்கரமாக அமைய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..
ஆறுதலின் ஊற்றே இறைவா!
நோயுற்றும், வேலையின்றியும் இடம்பெயர்ந்தும் அகதிகளாயும், பல்வேறு குடும்பச் சுமைகளாலும், கடன் தொல்லையினாலும் வேதனைப்படும் அனைவர் மீதும் இரக்கமாயிரும்.
இவர்களின் துன்ப துயரங் களைப் போக்கி நிலையான வேலையையும் நிம்மதியான இருப்பிடத்தையும் வழங்கிக் காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எங்களை உமது உரிமைச் சொத்தாகத் தேர்ந்து கொண்ட இறைவா!
எங்கள் குடும்பங்கள் தன்னலம் மறந்து உம்மைப் போல் அடுத்தவர்களின் வாழ்வு மலர உளமாற உழைக்கவும், உமது நற்செயல்களை எங்கள் வாழ்க்கையில் கடைபிடித்து வாழவும்,
மற்றவர்களையும் உமது இறையரசில் அழைத்து வர நற்சாட்சிகளாக மாறவும் வேண்டிய வரங்களை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அன்புத் தந்தையே இறைவா,
நோயினாலும், கவலையினாலும், அநியாயமாக சமூகத்தால் பறக்கணிக்கப் பட்டமையினாலும்,
மன்னிப்புக் கிடைக்காமையினாலும், இழப்புக்களினாலும் வேதனையுற்றுத் தவிப்போர்மீது மனமிரங்கி அவர்கள் தேடுகின்ற
அமைதியை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
தாயும் தந்தையுமான இறைவா,
உடல், உள நோயினால் வேதனையுறும் அனைவரையும் நீர் இரக்கத்துடன் கண்நோக்கி:
அவர்களின் வேதனையைத் தணித்து, நிறைவான உடல், உள நலத்தை அளித்துக் காத்திட வேண்டுமென்றும்,
இன்று எமது சமூகத்திலே வீணான விவாதங்களாலும், குழப்பங்களாலும், தவறான
போதனைகளாலும், பிடிவாதத்தாலும், உறவை முறித்து, விசுவாசத்தை மறந்து பாதை
மாறிச் செல்லும் அனைவர்மீதும் மனமிரங்கி உமது வழியில் செல்ல அவர்களை
வழிப்படுத்தியருள வேண்டுமென்றும், எமது இளைஞர்களை நிறைவாக ஆசீர்வதியும். அவர்களது இளமைப் பருவத்தின்
பாவங்களையும், குற்றங்களையும் நினையாது உமது இரக்கத்தையும், உமது
பேரன்பையும் அவர்கள் மேல் பொழிந்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
|