மூன்றாவது திருவழிபாடு ஆண்டு தவக்காலம் 5வது வாரம் சனிக்கிழமை 2016-03-19
புனித கன்னிமரியாளின் கணவர்
புனித யோசேப்பு
முதல் வாசகம்
உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நிலைநாட்டுவேன்.
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 4-5,12-14,16
அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: ``நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும் போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். எனது பெயருக்காகக் கோவில் கட்டவிருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலைநிறுத்துவேன். நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாய் இருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!''
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
அவனது வழிமரபு என்றென்றும் நிலைத்திருக்கும்.
திருப்பாடல்89: 1-2. 3-4. 26,28
1 ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். 2 உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது. பல்லவி
3 நீர் உரைத்தது: `நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது: 4 உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்'. பல்லவி
26 `நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை' என்று அவன் என்னை அழைப்பான். 28 அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். பல்லவி
இரண்டாம் வாசகம் எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார். திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13, 16-18, 22
சகோதரர் சகோதரிகளே, உலகமே அவருக்கு உரிமைச் சொத்தாகும் என்னும் வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவருடைய வழிமரபினர்களுக்கோ திருச்சட்டத்தைக் கடைப்பிடித்ததால் கிடைக்கவில்லை; நம்பிக்கை கொண்டு கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனதால்தான் அவ்வாக்குறுதி கிடைத்தது.
ஆகவே கடவுளின் அருள்செயலால் நம்பிக்கை வாக்குறுதியின் அடிப்படையாயிற்று. இவ்வாறு வாக்குறுதி ஆபிரகாமின் வழிவந்தவர்கள் எல்லாருக்கும் - திருச்சட்டத்திற்கு உட்பட்டோருக்கு மட்டுமல்ல, அவரைப் போலக் கடவுள்மீது நம்பிக்கை கொண்டோருக்கும் - உரியது என்பது உறுதியாயிற்று.
ஆபிரகாம் நம் அனைவருக்கும் தந்தை. ஏனெனில் ``எண்ணற்ற மக்களினங்களுக்கு உம்மை நான் தந்தையாக்குகிறேன்'' என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆம், இறந்தவர்களை வாழ்விப்பவரும் இல்லாததைத் தம் வார்த்தையால் இருக்கச் செய்பவருமாகிய கடவுள்மீது நம்பிக்கை கொண்டு அவர் முன்னிலையில் ஆபிரகாம் நம் தந்தையானார். ``உன் வழிமரபினர் எண்ணற்றவராய் இருப்பர்'' என்றும் அவருக்குச் சொல்லப்பட்டது. இக்கூற்று நிறைவேறும் என்னும் எதிர்நோக்குக்கு இடம் இல்லாதது போல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்; தயங்காமல் நம்பினார். ஆகவே அவர் பல மக்களினங்களுக்குத் தந்தையானார். ``அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.'' - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா!
ஆண்டவரே, உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள் அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 16, 18-21, 24
யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழுமுன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.
அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, ``யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்'' என்றார். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக் கொண்டார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''ஆண்டவரின் தூதர், 'யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம்.
ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார்.
அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர்...' என்றார்'' (மத்தேயு 1:20-21)
இயேசு என்னும் பெயர் எபிரேய மொழியில் ''யோசுவா'' என்பதாகும். அதற்கு ''யாவே மீட்கிறார்'' என்பது பொருள். இயேசுவின் வழியாகக் கடவுள் நம்மைப் பாவத்திலிருந்தும் எல்லாத் தீமைகளிலிருந்தும் விடுவிக்கிறார். நமக்கு விடுதலையும் மீட்பும் வழங்குகின்ற இயேசுவை உலகில் மனிதராகப் பெற்றளித்த அன்னை மரியாவை நாம் மனதாரப் போற்றிப் புகழ்வது பொருத்தமே. இயேசு உண்மையிலேயே கடவுளும் மனிதரும் ஆவார். இந்த உண்மையை முழுமையாகப் புரிந்துகொள்வது நம் குறுகிய அறிவுத் திறனுக்கு அப்பாற்பட்டது. ஆனால் கடவுள் நமக்கு இந்த உண்மையை இயேசு வழியாக வெளிப்படுத்தியிருக்கிறார். நாமும் கடவுளின் வார்த்தையை நம்பி அந்த உண்மையை ஏற்கிறோம். மனிதராகப் பிறந்த இயேசுவின் ''மூதாதையர் பட்டியல்'' மத்தேயு நற்செய்தியின் தொடக்கமாக அமைந்துள்ளது. நம் காதுகளில் விசித்திரமாக ஒலிக்கின்ற பெயர்களைக் கொண்ட இந்த நீண்ட பட்டியலை மத்தேயு பதிவு செய்ததற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அதாவது, இயேசு உண்மையிலேயே தாவீதின் வழித்தோன்றலாக வந்து பிறந்தார் என்பதை மத்தேயு நிலைநாட்டுகிறார். அக்கால வழக்கப்படி, ஆண்களின் குல வரிசை மட்டுமே தரப்பட்டுள்ளது. இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்பு தாவீதின் வழி வந்தவர். எனவே, சட்ட முறைப்படி யோசேப்பு இயேசுவின் தந்தையாகக் கருதப்பட்டார். ஆயினும் இயேசு உண்மையிலேயே தூய ஆவியின் வல்லமையால் மரியாவின் வயிற்றில் கருவாக உருவானார் என மத்தேயு குறிக்கின்றார். கடவுளின் தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, ''யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்'' என அறிவிக்கின்றார் (மத் 1:20).
மரியா இயேசுவின் தாய். அதே நேரத்தில் இறைவன் மரியாவைக் கன்னிமை குன்றாமல் காத்தார் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. எனவே, மரியாவுக்குச் சிறப்பு வணக்கம் செலுத்துவது கிறிஸ்தவ மரபு. இந்த வணக்கம் கடவுளுக்கு நாம் அளிக்கின்ற ஆராதனைக்கு நிகராகாது. ஏனென்றால் கடவுள் நம்மைப் படைத்துக் காத்து, நம்மைப் பாவத்திலிருந்து மீட்கின்றவர். அவரிடமிருந்தே நாம் புறப்படுகிறோம்; அவரை நோக்கியே நம் வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது; அவரே நம் இறுதி கதியாக இருப்பவர். இத்தகைய வல்லமை மிக்க கடவுள் மரியாவைத் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுத்தார்; அவரைத் தம் திருமகனின் தாயாக நியமித்தார். மரியாவும் இறைத்திட்டத்திற்கு ஏற்ப தம்மையே முழுமையாக இறைவனிடம் கையளித்தார். இவ்வாறு நமக்கு ஓர் முன் உதாரணமானார். இயேசுவின் தாய் நம் தாயாகவும் இருக்கிறார். அதாவது, இயேசுவை நம்பி ஏற்போரை உள்ளடக்கிய சமூகமாகிய திருச்சபைக்கு அன்னை அவர். மரியாவுக்குக் கடவுள் அளித்த மாட்சியையும் மகிமையையும் நமக்கும் வாக்களிக்கின்ற கடவுள் தம் திருமகன் இயேசு வழியாக நம்மோடு எந்நாளும் தங்கியிருக்கின்றார். இந்த உண்மையை மத்தேயு நற்செய்தியின் தொடக்கத்திலும் இறுதியிலும் நாம் காண்கின்றோம். அவரே ''இம்மானுவேல்'' (''கடவுள் நம்மோடு இருக்கிறார்'' என்பது அதன் பொருள் - மத் 1:23). ''இதோ, உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்'' என அவர் நமக்கு வாக்களித்துள்ளார் (காண்க: மத் 28:20).
மன்றாட்டு:
இறைவா, உம் திருமகன் வழியாக நீர் எங்களோடு எந்நாளும் தங்கியிருக்கும் அருள்செயலுக்கு நன்றி!
|