யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 3வது வாரம் திங்கட்கிழமை
2016-04-11

புனித ஸ்ரனிஸ்லாஸ்




முதல் வாசகம்

ஸ்தேவானின் ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 8-15

அந்நாள்களில் ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார். அப்பொழுது உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக் கூடத்தைச் சேர்ந்த சிலரும் சிரேன், அலக்சாந்திரியா நகரினரும் சிலிசியா, ஆசியா மாநிலத்தவரும் ஸ்தேவானோடு வாதாடத் தொடங்கினர். ஆனால் அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தை களையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை. பின்பு அவர்கள், ``இவன் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னதை நாங்கள் கேட்டிருக்கிறோம்'' என்று கூறச் சிலரைத் தூண்டிவிட்டனர். அவ்வாறே அவர்கள் மக்களையும் மூப்பர்களையும் மறைநூல் அறிஞர்களையும் அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்தார்கள். உடனே அவர்கள் எழுந்துவந்து அவரைப் பிடித்துத் தலைமைச் சங்கத்துக்கு இழுத்துச் சென்றார்கள்; மேலும் பொய்ச் சாட்சிகளைக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். அவர்கள், ``இந்த மனிதன் இத்தூய இடத்தையும் திருச்சட்டத்தையும் எதிர்த்து ஓயாமல் பேசிவருகிறான்'' என்று கூறினார்கள். மேலும் அவர்கள், ``நசரேயராகிய இயேசு இந்த இடத்தை அழித்துவிடுவார் என்றும், மோசே நமக்குக் கொடுத்திருக்கிற முறைமைகளை மாற்றிவிடுவார் என்றும் இவன் கூறக் கேட்டோம்'' என்றார்கள். தலைமைச் சங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரும் அவரை உற்றுப்பார்த்தபோது அவரது முகம் வானதூதரின் முகம்போல் இருக்கக் கண்டனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்
திருப்பாடல் 119: 23-24. 26-27. 29-30

23 தலைவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும், உம் ஊழியன் உம்முடைய விதிமுறைகளைக் குறித்தே சிந்திக்கின்றேன். 24 ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன; அவையே எனக்கு அறிவுரையாளர். பல்லவி

26 என் வழிமுறைகளை உமக்கு எடுத்துச் சொன்னேன்; நீர் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்; உம் விதிமுறைகளை எனக்குக் கற்றுத்தாரும். 27 உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்; உம் வியத்தகு செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன். பல்லவி

29 பொய் வழியை என்னைவிட்டு விலக்கியருளும்; உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும். 30 உண்மையின் பாதையை நான் தேர்ந்துகொண்டேன்; உம் நீதிநெறிகளை என் கண்முன் நிறுத்தியுள்ளேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 22-29

இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்த பின், சீடர்கள் புறப்பட்ட கரையிலேயே மறுநாளும் மக்கள் கூட்டமாய் நின்றுகொண்டிருந்தார்கள். முந்தின நாள் ஒரு படகைத் தவிர வேறு படகு எதுவும் அங்கு இல்லை என்பதையும் அதில் இயேசுவின் சீடர்கள் மட்டும் போனார்களே அன்றி இயேசு அவர்களோடு அப்படகில் ஏறவில்லை என்பதையும் அவர்கள் கண்கூடாகப் பார்த்திருந்தார்கள். அப்போது, ஆண்டவர் கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொடுத்த உணவை மக்கள் உண்ட இடத்திற்கு அருகில், திபேரியாவிலிருந்து படகுகள் வந்து சேர்ந்தன. இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, ``ரபி, எப்போது இங்கு வந்தீர்?'' என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, ``நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்'' என்றார். அவர்கள் அவரை நோக்கி, ``எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?'' என்று கேட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, ``கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கு ஏற்ற செயல்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன்'' (மத்தேயு 15:32)

இயேசு நாலாயிரம் மக்களுக்கு அதிசயமான விதத்தில் உணவு அளித்த நிகழ்ச்சியை மத்தேயுவும் மாற்கும் விவரிக்கின்றனர். இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த இன்னொரு நிகழ்ச்சியை மாற்கு, மத்தேயு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தியாளருமே குறிப்பிடுகின்றனர். இந்த இரு நிகழ்ச்சிகளும் ஒரே நிகழ்ச்சியின் இரு வடிவங்களா அல்லது இரு வேறுபட்ட நிகழ்ச்சிகளா என்பது பற்றித் தெளிவு இல்லை. ஆனால் இயேசு பசியால் வாடிய மக்களுக்கு அதிசயமான விதத்தில் உணவு கொடுத்தார் என்னும் செய்தியை எல்லா நற்செய்தியாளரும் குறிப்பிடுவது கருதத் தக்கது. இந்த அதிசய நிகழ்ச்சியை விளக்குகின்ற முறைகள் வேறுபடலாம். ஆனால் கடவுள் இயேசுவின் வழியாகத் தம் மக்களுக்கு இரக்கம் காட்டினார் என்னும் உண்மையை இந்நிகழ்ச்சி தௌ;ளத் தெளிவாகக் காட்டுகிறது. இயேசு மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொண்டார் (காண்க: மத் 15:32; 14:14; மாற் 8:2; 6:34; லூக் 9:13; யோவா 6:5). பசியால் வாடிய மக்களுக்கு உணவளிக்க முன்வந்த இயேசு கடவுளின் இரக்கத்தை நமக்கு வெளிப்படுத்துகிறார்.

பழைய ஏற்பாட்டில் கடவுள் தம் மக்களுக்கு மன்னா உணவை வானிலிருந்து பொழியச் செய்தார். மோசே வழியாகக் கடவுள் தம் மக்களுக்கு உணவளித்ததுபோல இப்போது இயேசு என்னும் இணையற்ற இறைவாக்கினர் வழியாகத் தம் பரிவிரக்கத்தை வெளிப்படுத்துகிறார். பசித்தோருக்கு உணவுகொடுத்தல் மிகச் சிறந்த பிறரன்புப் பணி என யாவரும் ஏற்பர். ''உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'' என்பது தமிழ்ப் பண்பாடு. இன்றைய உலகில் பசியால் வாடுவோர் பலருண்டு. அவர்களுக்கு யார் உணவு கொடுப்பார்கள்? இயேசுவின் சீடர்களுக்கு இதில் ஒரு தனிப்பட்ட பொறுப்பு உண்டு. ''நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்'' (காண்க: மத் 25:35) என மானிட மகன் கூறப்போகும் சொற்கள் மனிதரின் தேவைகள் கடவுளின் தேவைகளே எனக் காட்டுகின்றன. உண்மையான இறையன்பு பிறரன்பாகப் பிறப்பெடுக்கும் என்பதே எதார்த்தம். பிறருக்கு வாழ்வளிக்கும் பொறுப்பை மறந்துவிட்டு மனித உயிர்களை அழித்து மாய்க்கின்ற பயங்கர வாதம் இன்று தலைதூக்குகிறது. ஒரு சில நாள்களுக்கு முன் (நவம்பர் 26, 2008) மும்பை நகரில் தாஜ; மற்றும் ஓபராய் சொகுசு விடுதிகள், இரயில் நிலையம், மருத்துவ மனை போன்ற பொது இடங்களில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பலியான நூற்றுக் கணக்கான மக்களை இவண் நினைத்துப் பார்க்கின்றோம். வன்முறையால் அப்பாவி மக்களின் உள்ளத்தில் பயத்தைக் கிளப்பிவிட்டுத் தங்கள் குறுகிய அரசியல் குறிக்கோள்களை அடைந்துவிடத் துடிக்கின்ற தீவிர வாதக் குழுக்கள் அன்பு என்னும் நற்பண்பை எள்ளளவும் மதித்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில் நாம் அனைவரும் செவிமடுக்கவேண்டிய இயேசுவின் கூற்று: ''நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன்'' என்பதே (காண்க: மத் 15:32).

மன்றாட்டு:

இறைவா, பல விதத் தேவைகள் நடுவே வருந்துகின்ற மக்கள்மீது நாங்கள் பரிவு கொண்டு உதவிட எங்களுக்கு அருள்தாரும்.