திருவழிபாடு ஆண்டு - C
(இன்றைய வாசகங்கள்:
செக் 12:10-11,13:1,
கலாத்தியர 3:26-29:,
லூக்கா 9: 18-24
திருப்பலி முன்னுரை அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள்.
இன்று பொதுக்காலம் பன்னிரெண்டாம் ஞாயிறு. இத்தினத்தில் நாம் ஆண்டவரின் அன்பைப் பெறவும், அவருக்கு நன்றி செலுத்தவும் ஒன்று கூடியுள்ளோம்.
ஆண்டவரில் நம்பிக்கை கொண்டவரின் கூட்டம் வளரும், வாழ்வடையும், நிறைவடையும், நிம்மதிபெறும், மகிழ்ச்சியோடு வாழும். தம்மிலே நம்பிக்கை வைத்து வாழ்வோரை, ஆண்டவர் தம் பணியாளர்களை அனுப்பி அருள் நலன்களால் நிரப்புகின்றார். அமைதி என்னும் ஆற்றல் மிகு ஆசீரை நமக்களித்து நம்மை உறுதிப்படுத்துகின்றார்.
ஆகவே நாம் அனைவரும் என்றென்றும் நம்மோடு நிலைத்து நின்று வாழ்வு தரும் இறைவனது பேரன்பிற்காக நன்றி சொல்லுவோம், அனைவரையும் மன்னிப்போம், இறைவனின் சாட்சிகளாய் வாழ நம்மை அர்ப்பணிப்போம்.
முதல் வாசகம்
தாங்கள் ஊடுருவக் குத்தியவனையே உற்று நோக்குவர்.
இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 12: 10-11
ஆண்டவர் கூறியது: நான் தாவீது குடும்பத்தார் மேலும், எருசலேமில் குடியிருப்போர் மேலும் இரக்க உள்ளத்தையும் மன்றாடும் மனநிலையையும் பொழிந்தருள்வேன்.
அப்போது அவர்கள் தாங்கள் ஊடுருவக் குத்தியவனையே உற்று நோக்குவார்கள்; அவனை உற்றுநோக்கி ஒரே பிள்ளையைப் பறிகொடுத்து ஓலமிட்டு அழுபவரைப் போலும், இறந்து போன தம் தலைப்பிள்ளைக்காகக் கதறி அழுபவர் போலும் மனம் கசந்து அழுவார்கள். அந்நாளில் எருசலேமில் எழும்பும் ஓலம் மெகிதோவின் சமவெளியில் அதத்ரிம்மோனின் புலம்பலைப் போலப் பெரிதாயிருக்கும்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
கடவுளே! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.
திருப்பாடல் 63: 1. 2-3. 4-5. 7-8
கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. பல்லவி
2 உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். 3 ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. பல்லவி
4 என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். 5 அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். பல்லவி
7 ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். 8 நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. பல்லவி
இரண்டாம் வாசகம்
திருமுழுக்குப் பெற்ற நீங்கள் கிறிஸ்துவை அணிந்துள்ளீர்கள். திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 26-29
சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இயேசுவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள். அவ்வாறெனில், கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்கள்.
இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்.
நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்களும் ஆபிரகாமின் வழித்தோன்றல் களுமாய் இருக்கிறீர்கள். வாக்குறுதியின் அடிப்படையில் உரிமைப்பேறு உடையவர்களாயும் இருக்கிறீர்கள்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா ! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா !
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-24
அக்காலத்தில் இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம், ``நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?'' என்று அவர் கேட்டார்.
அவர்கள் மறுமொழியாக, ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்'' என்றார்கள்.
``ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர்களிடம் அவர் கேட்டார்.
பேதுரு மறுமொழியாக, ``நீர் கடவுளின் மெசியா'' என்று உரைத்தார். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.
மேலும் இயேசு, ``மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்'' என்று சொன்னார்.
பின்பு அவர் அனைவரையும் நோக்கி, ``என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்'' என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. அன்புத் தந்தையே இறைவா! உமது திருமகனார் மன்னிப்பு என்னும் அருட்சாதனத்தை ஏற்படுத்தி அதை முழுமையாக நிறைவேற்ற நீர் நியமித்தீருக்கும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம் தூய ஆவியின் நிறை வல்லமையால் அவர்களை நிரப்பி, தீமைகளை முறியடிக்க வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே! பிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும், பழிவாங்கும் மனநிலையோடும், வேதனைகளோடும், விரக்தியோடும், கண்ணீரோடும் வாழும் கணவன் மனைவி அனைவர்மீதும் மனமிரங்கி அவர்களின் அன்பு தூய்மையானதாகவும், நிலையான தாகவும் இருக்கவும், அவர்கள் தாங்கள் பெற்றுக் கொண்ட அழைப்பிற்கேற்ப பரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. நானே ஆண்டவர்! கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள்மேல் வராது என்ற உன்னத வாக்குறுதியை எமக்களித்த தந்தையே! இன்று அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காகவும் கவலை, நோய், துன்பம் போன்றவற்றிலிருந்தும் விடுதலை பெறத்தவித்துக் கொண்டிருக்கும் அனைத்து மக்களும் நீர் கொடுக்கின்ற ஆறுதலைப் பெற்றுக் கொள்ளவும், இயற்கை, செயற்கை அழிவுகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. “விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய்,
ஏனெனில் அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதி செய்யும் ” என்ற இறைவா, படிக்கின்ற மாணவ, மாணவியரை உம்மிடம் ஒப்புக் கொடுக்கின்றோம். அவர்களுக்கு நீர் சாலமோனுக்கு தந்த அந்த ஞானத்தையும், அறிவையும் கொடுத்தருளும். படிக்கின்ற பருவத்தில், தங்கள் கடமை, பொறுப்பை உணாந்து படிக்கவும், எந்த தவறான மாயக் கவர்ச்சியிலும் அவர்கள் வீழ்ந்திடாமல், தடம் புரண்டிடாமல், இருளின் ஆட்சிக்குரிய செயல்களில்;
தங்கள் வாழ்வை தொலைத்துவிடாமல், தங்கள் பெற்றோருக்கு எந்த இழுக்கையும் ஏற்படுத்தாது,
நல்ல ஒழுக்க நெறியில், பண்பாட்டில், பழக்கவழக்கங்களில், மனிதநேய பண்புகளில் சிறந்தோங்கிடவும்,
விவேகத்துடன் எல்லாவகை தீய நடத்தையிலிருந்தும், தங்கள் இதயத்தை விழிப்பாயிருந்து, காத்துக் கொள்ளவும்,
ஒளியின் பாதையில் நடந்திட, நீர்தாமே அவர்களை கண்ணின்மணிபோல பாதுகாத்து வழிநடத்திட வேண்டுமென்று,
இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
5. எம் கடவுளாகிய தந்தையே இறைவா! உமது அன்பையும், இரக்கத்தையும் பெற்று மகிழும் நாங்கள் அனைவரும் அவைகளை மற்றவர்களோடு பகிர்ந்து உமது சாட்சிகளாய் வாழ எமக்கு அருள்தந்து எம்மை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
|
இன்றைய சிந்தனை
நான் யார் ?
‘நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?’ என்னும் இயேசுவின் கேள்வி இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கிறித்தவர்கள், இயேசுவின் சீடர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களே, அவரைப் பல்வேறு பார்வைகளில் பார்க்கிறார்கள் என்பது கொஞ்சம் வியப்பூட்டும் செய்திதான். சிலர் இயேசுவை அற்புதங்களும், அருங்குறிகளும் செய்பவராகப் பார்க்கிறார்கள். பெந்தகோஸ்தே சபைகளுக்குச் செல்பவர்கள், அருங்கொடை ஆர்வலர்கள் போன்றோர் இதில் அடங்குவர். இன்னும் சிலர் அவரை சடங்குகளிலும், வழிபாடுகளிலும் சிறைபட்டவராகப் பார்க்கின்றனர். பெரும்பாலான மரபுக் கிறித்தவர்கள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஒருசிலர் இயேசுவைத் தீவிர சமூகப் போராளியாகப் பார்க்கின்றனர். மக்கள் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றவர்கள் இப்பிரிவில் உள்ளனர்.
இத்தகைய பார்வைகள் அனைத்துமே உண்மையைக் கொண்டுள்ளவை, ஆனால் குறைவானவை, முழுமையற்றவை என்பதை நாம் உணரவேண்டும். விவிலியம் காட்டும் இயேசு பன்முகத் தன்மை கொண்டவர். அவர் கடவுளின் மகனாகிய மெசியா, ஆனால் மனித இயல்பில் பாவம் தவிர மற்ற அனைத்திலும் நம்மைப் போன்றவர். நோயாளர்கள்மீது பரிவு கொண்டு, குணமாக்கியவர். ஆனால், தீமைகளைக் கண்டு சினந்து, சாட்டை எடுத்தவர். இத்தகைய முழுமையான, பன்முகத் தன்மை கொண்ட இயேசுவை நம் ஆண்டவராகவும், வழிகாட்டியாகவும், மீட்பராகவும் அறிக்கை இட்டு போற்றுவோம்.
மன்றாட்டு:
இயேசுவே, நீரே எங்கள் ஆண்டவர், நீரே இறைமகன், நீரே எங்கள் மீட்பர், நீரே வாழும் கடவுளின் மகன். உம்மைப் Nபுhற்றுகிறோம். உம்மைப் போல நாங்களும் பன்முகத் தன்மை கொண்டவர்களாகவும், சூழ்நிலைக்கேற்றவாறு செயல்படுபவர்களாகவும் வாழ எங்களுக்கு அருள்தாரும்.
|