யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C

(இன்றைய வாசகங்கள்: இணைச்சட்டம். 30:10-14, 1கொலோசையர 1: 15-20, லூக்கா 10:25-37



 போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?  போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?


திருப்பலி முன்னுரை

அடுத்திருப்பவர்களே,

பொதுக்காலத்தின் பதினைந்தாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். இறையன்பு மற்றும் பிறரன்பு கட்டளைகளை நம் வாழ்வில் செயல் படுத்த இன்றைய திருவழிபாடு நம்மை அழைக்கிறது. நம்மை நாமே நேர்மையாளர்களாக எண்ணிக் கொள்ளாமல், கடவுளின் முன்னிலையில் நாம் நேர்மையாளர்களாக இருக்க வேண்டும் என்பதே ஆண்டவரின் விருப்பம். இயேசுவின் வழியில், கடவுளுக்கும் மற்ற மனிதர்களுக்கும் அடுத்திருப்பவர்களாய் வாழ அழைக்கப்படுகிறோம். எரிகோ செல்லும் பாதையில் அடிபட்டுக் கிடந்தவரை கண்டுகொள்ளாமல் சென்ற யூத குருவையும், லேவியரையும் போன்று மனிதநேயம் இல்லாதவர்களாய் நடந்துகொண்ட தருணங்களுக்காக மன்னிப்பு வேண்டுவோம். நல்ல சமாரியரைப் போன்று, தேவையில் இருப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுபவர்களாய் வாழ வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது:
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம். 30:10-14

மோசே மக்களை நோக்கிக் கூறியது, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடு. சட்ட நூலில் எழுதப்பட்டுள்ள அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடி. உன் முழ இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பு. ஏனெனில், இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இந்தக் கட்டளை உனக்குப் புரியாதது இல்லை: உன்னிடமிருந்து வெகு தொலையிலும் இல்லை. நாம் அதைக்கேட்டு, நிறைவேற்றுமாறு, நமக்காக யார் விண்ணகத்துக்குப் போய், அதைக் கொண்டு வருவார் என்று நீ சொல்லாதவாறு, அது விண்ணில் இல்லை. நாம் அதைக்கேட்டு நிறைவேற்றுமாறு, நமக்காக யார் கடல்கடந்து சென்று, அதை நம்மிடம் கொண்டு வருவார் என்று நீ சொல்லாதவாறு, அது கடல்களுக்கு அப்பால் இல்லை. ஆனால், நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது: உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை: இதயத்தை மகிழ்விக்கின்றன.
திருப்பாடல்: 66: 1-7. 16-20

ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது: அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது: எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது........பல்லவி

ஆண்டவரின் நியமங்கள் சரியானவை: அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளி மயமானவை: அவை கண்களை ஒளிர்விக்கின்றன..........பல்லவி

ஆண்டரைப் பற்றிய அச்சம் தூயது: அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை: அவை முற்றிலும் நீதியானவை........பல்லவி

அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை: தேனினும் தேனடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை...........பல்லவி

இரண்டாம் வாசகம்

அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 15-20

இயேசு கட்புலனாகாத கடவுளது சாயல்: படைப்பனைத்திலும் தலைப்பேறு. ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. அனைத்துக்கும் முந்தியவர் அவரே: அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன. திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார். தம் முழுநிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா ! ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலை வாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன! அல்லேலூயா !

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10:25-37

அக்காலத்தில், திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், ' போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? ' என்று கேட்டார். அதற்கு இயேசு, ' திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்? ' என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, ' உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக ' என்று எழுதியுள்ளது ' என்றார். இயேசு, ' சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர் ' என்றார். அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, ' எனக்கு அடுத்திருப்பவர் யார்? ' என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: ' ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கம் விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். மறுநாள் இருதெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, 'இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்' என்றார். ' கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது? ' என்று இயேசு கேட்டார். அதற்கு திருச்சட்ட அறிஞர், ' அவருக்கு இரக்கம் காட்டியவரே ' என்றார். இயேசு, ' நீரும் போய் அப்படியே செய்யும் ' என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. ஒப்புரவாக்க அழைப்பவராம் இறைவா,

கிறிஸ்துவின் நற்கருணைப் பலியை நிறைவேற்றும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் அனைவரும், உலக மக்களை உம்மோடு ஒப்புரவாக்கும் பணியை சிறப்பாக ஆற்றும் வரத்தினை வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்புசெய்ய அழைப்பவராம் இறைவா,

உலகெங்கும் சிற்றின்ப ஆசைகளில் மூழ்கி, எந்திரங்களோடு பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் மக்கள், குடும்ப உறுப்பினர்களையும் அருகில் வசிப்பவர்களையும் அன்பு செய்து வாழும் மனநிலையை வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்க வார்தைகளால் எம்மை வாழ்விக்கும் தந்தையே!

உமது வாழ்வு தரும் வார்த்தைகளையும், எம் இதயத்தை மகிழ்விக்கும் உமது நியமங்களையும் ஏற்று அதன்படி வாழவும், பிறருக்குப் பணி யாற்றுவதன் வழியாக உமது பணியை நிறைவாக்கவும், எமக்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. உதவிபுரிய அழைப்பவராம் இறைவா,

உலகின் பல பகுதிகளில் உடல் மற்றும் மனக் காயங்களால் அமைதி இழந்து வேதனையுறும் மக்களை குணப்படுத்த உழைக்கும் நல்லுள்ளம் கொண்டவர்கள் பெருக உதவிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. தாழ்ச்சியின் மாதிரிகையே தந்தையே இறைவா!

தம்மை நேர்மையாளர் எனக் காட்டிக்கொண்டு, மக்களை தவறான பாதையில் அழைத்துச் செல்லும் அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனை வரும் தங்கள் தீய போக்கிலிருந்து மாறி உண்மையின் வழிக்குத் திரும்பிடச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''எனக்கு அடுத்திருப்பவர் யார்?'' (லூக்கா 10:29)

திருச்சட்ட அறிஞர் இயேசுவிடம் கேட்ட இக்கேள்விக்குப் பதிலளிக்கும் விதத்தில் இயேசு கூறிய கதை ''நல்ல சமாரியர்'' என்னும் சிறப்பான உவமை ஆகும். லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படுகின்ற இந்த உவமை தரும் செய்தி என்ன? ''எனக்கு அடுத்திருப்பவர் யார்?'' என்னும் கேள்விக்குப் பதில் கேள்வியாக, ''உமக்கு அடுத்திருப்பவராக இல்லாத ஒருவரைக் காட்ட முடியுமா?'' என்றுகூட இயேசு சவால் விட்டிருக்கலாம். ஆனால் இயேசு ஓர் உவமை வழியாக அந்த உண்மையைக் கற்பித்தார். சமாரிய இனத்தவர் தாழ்த்தப்பட்டோர்; அவர்களுக்கு யூதர்கள் நடுவே மதிப்பு இருக்கவில்லை. ஆனால் கள்வர் கையில் அகப்பட்டு, அடிபட்டுக் குற்றுயிராக விடப்பட்ட மனிதருக்கு உதவிசெய்தது அந்த சாதாரண சமாரியர்தானே தவிர யூத குருவோ, லேவியரோ அல்ல. யார்யாருக்கு உதவி தேவைப்படுகிறதோ அவர்கள் எல்லாருமே நமக்கு அடுத்திருப்பவர்கள்தாம். இந்த உண்மையை வாழ்க்கையில் காட்டியவர் நல்ல சமாரியர்.

இன்று இலட்சக்கணக்கான மக்கள் வறுமையில் வாடுகின்றார்கள்; மனித மாண்பு மறுக்கப்பட்டு, உரிமைகள் மீறப்பட்டு, இழிவாக நடத்தப்படுகிறார்கள். இவர்கள் எல்லாருமே நமக்கு அடுத்திருப்பவர்கள்தாம். அப்படியென்றால், இயேசு அறிவித்த அன்புக் கட்டளையின் பொருள் என்ன? ''உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீது அன்புகூர்வாயாக'' (லூக் 10:27; இச 6:5) என்னும் கட்டளையைக் கடைப்பிடிக்க அனைவருக்கும் கடமை உண்டு. யாருக்கு அன்புகாட்டுவது என்றொரு கேள்வி எழுப்புவதே முறையல்ல, ஏனென்றால் அன்பின் அரவணைப்பிலிருந்து விலகிநிற்போர் அல்லது விலக்கப்பட்டோர் ஒருவர்கூட இவ்வுலகில் இருக்கமுடியாது, இருக்கவும் கூடாது. எங்கு மனிதர் உள்ளனரோ அங்கு அன்புக் கட்டளை செயல்படுத்தப்பட வேண்டும். அக்கட்டளைக்கு விதிவிலக்கு கிடையாது. எனினும், சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டோர் நமது தனி அன்புக்கு உரித்தானவர் என்பது இயேசு நமக்கு அளிக்கின்ற போதனை. தன்னலம் கோலோச்சுகின்ற நம் சமுதாயத்தில் இது ஒரு பெரிய சவாலாகவே உள்ளது.

மன்றாட்டு:

இறைவா, நீர் எங்களுக்குக் காட்டிய அன்பை நாங்கள் எல்லா மனிதரோடும் பகிர்ந்திட அருள்தாரும்.