திருவழிபாடு ஆண்டு - C
(இன்றைய வாசகங்கள்:
தொடக்க நூல18:1-10,
கொலோசையர1: 24-28,
லூக்கா 10:38-42
திருப்பலி முன்னுரை இறைவார்த்தைக்குரியவர்களே,
பொதுக்காலத்தின் பதினாறாம் ஞாயிறு ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். இறைவனை நம் இல்லத்தில் வரவேற்று உபசரிக்கவும், அவரது வார்த்தையை பணிவுடன் கேட்கவும் நம்மை தயாரிக்குமாறு இன்றைய திருவழிபாடு அழைப்பு விடுக்கிறது. நற்கருணை வடிவில் நம்மைத் தேடி வரும் ஆண்டவரை நாம் எத்தகைய தயாரிப்போடு வரவேற்கிறோம் என்பதை சிந்திக்க அழைக்கப்படுகிறோம். நோயிலும், பசியிலும் வாடுவோரில் தம்மைக் கண்டு, உபசரிக்க இறைவன் நம்மை அழைக்கிறார். அதே நேரத்தில், இறைவனின் வார்த்தைக்கு முழுமையாக செவிகொடுத்து, அவர் காட்டும் வழியில் நடக்க நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் இயேசு விரும்பும் நல்ல பாதையைத் தேர்ந்தெடுத்து வாழ வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
என் தலைவரே, நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக!
தொடக்க நூலிலிருந்து வாசகம். 18:1-10
அந்நாள்களில், பின்பு ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்: மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி, என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்தாயின், நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக! இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம் மரத்தடியில் இளைப்பாறுங்கள். கொஞ்சம் உணவு கொண்டுவருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள். ஏனெனில் உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள் என்றார். நீ சொன்னபடியே செய் என்று அவர்கள் பதில் அளித்தார்கள். அதைக் கேட்டு ஆபிரகாம் தம் கூடாரத்திற்கு விரைந்து சென்று, சாராவை நோக்கி, விரைவாக மூன்று மரக்கால் நல்ல மாவைப் பிசைந்து, அப்பங்கள் சுடு என்றார். ஆபிரகாம் மாட்டு தந்தைக்கு ஓடிச்சென்று, ஒரு நல்ல இளங் கன்றைக் கொணர்ந்து வேலைக்காரனிடம் கொடுக்க, அவன் அதனை விரைவில் சமைத்தான். பிறகு அவர் வெண்ணெய், பால், சமைத்த இளங்கன்று ஆகியவற்றைக் கொண்டுவந்து அவர்கள் முன் வைத்தார். அவர்கள் உண்ணும் பொழுது அவர்களருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தார். பின்பு அவர்கள் அவரை நோக்கி, உன் மனைவி சாரா எங்கே? என்று கேட்க, அவர், அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்று பதில் கூறினார். அப்பொழுது ஆண்டவர்; நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன. அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான் என்றார். அவருக்குப் பின்புறத்தில் கூடார வாயிலில் சாரா இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?
திருப்பாடல்: 15: 2-5
மாசற்றவராய் நடப்போரே! -இன்னோர் நேரியவற்றைச் செய்வர்: உளமார உண்மை பேசுபவர்:... பல்லவி
தம் நாவினால் குறங்கூறார்: தம் தோழருக்குத் தீங்கிழையார்: தம் அடுத்தவரைப் பழித்துரையார். நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்: ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்: தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார்:.... பல்லவி
தம் பணத்தை வட்டிக்குக் கொடார்: மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்: -இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர்..... பல்லவி
இரண்டாம் வாசகம்
மறைந்திருந்த இறைத்திட்டம் இறைமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 24-28
சகோதரர் சகோதரிகளே, இப்பொழுது, உங்கள் பொருட்டுத் துன்புறுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார். அவர் மேலும் படவேண்டிய வேதனையை என் உடலில் ஏற்று நிறைவு செய்கிறேன். என் மூலம் இறைவார்த்தையை முழுமையாக உங்களுக்கு வழங்கும் பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்தார். எனவே நான் திருத்தொண்டன் ஆனேன். நான் வழங்கும் இறைவார்த்தை ஊழி ஊழியாக, தலைமுறை தலைமுறையாக மறைந்திருந்த இறைத்திட்டத்தைப் பற்றியது. அத்திட்டம் இப்பொழுது இறைமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களினங்களிடையே அது அளவற்ற மாட்சியுடன் செயல்படுகிறது என்பதைத் தம் மக்களுக்குத் தெரிவிக்க கடவுள் திருவுளம் கொண்டார். உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவைப் பற்றியதே அத்திட்டம். மாட்சி பெறுவோம் என்னும் எதிர்நோக்கை அவரே அளிக்கிறார். கிறிஸ்துவைப்பற்றியே நாங்கள் அறிவித்து வருகிறோம். கிறிஸ்துவோடு இணைந்து ஒவ்வொரு வரும் முதிர்ச்சிநிலை பெறுமாறு ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறி முழு ஞானத்தோடு கற்பித்து வருகிறோம். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா ! சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்கள் பேறுபெற்றோர். அல்லேலூயா !
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10:38-42
அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, ;ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரிய அவளிடம் சொல்லும் ; என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. வாக்குறுதி தருபவராம் இறைவா, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது வாக்குறுதிக்கு தகுதி உள்ளவர்களாக வாழவும், மக்கள் உம்மிடம் கொண்டு சேர்க்கவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. திட்டமிட்டு செயல்படுத்துபவராம் இறைவா, உலகில் வாழும் நாட்களில் உம்மைப் பற்றிய உண்மையைத் தேடவும், உம் திருமக னில் நீர் நிறைவேற்றிய மீட்புத் திட்டத்தைப் புரிந்துகொள்ளவும் மக்கள் அனைவருக்கும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. நல்வழி காட்டுபவராம் இறைவா, உமது இறைவார்த்தையை அறிவிக்கவும், கேட்கவும் தடையை ஏற்படுத்தும் அமைப்புகள் உலகிலிருந்து மறையவும், நற்செய்தி பணிக்கு இடறலாக செயல்படும் மனிதர்கள் மனந்திரும்பவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. வாழ்வளிககும் வார்த்தைகளைக் கொண்டுள்ள தந்தையே! இறைவார்த்தைக்கு பிழையான விளக்கங்களைக் கொடுத்து பிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும்,போட்டி மனநிலையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவர்மீதும் மனமிரங்கி அவர்கள் இறைவார்த்தையை சரியாக விளங்கிக்கொண்டு தாங்கள் பெற்றுக் கொண்ட அழைப்பிற்கேற்ப பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. அன்புத் தந்தையே இறைவா! எமது பிள்ளைகளை உமக்குக் காணிக்கையாக்குகின்றோம். அவர்கள் உமது வார்த்தையை ஆர்வமுடன் கேட்டு உமது சாட்சிகளாய் வாழ அவர்களுக்கு அருள் தந்து அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
|
இன்றைய சிந்தனை
''மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து,
'ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே,
உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்' என்றார்'' (லூக்கா 10:40)
மார்த்தாவும் மரியாவும் இரண்டு துருவங்கள் என்றும், ஒருவர் மற்றவருக்கு எதிரான நிலைக்கு உருவகமாகக் காட்டப்படுகிறார் என்றும் விளக்கம் தருவது வழக்கம். மார்த்தா செயல்முறை வாழ்வுக்கும் மரியா தியான வாழ்வுக்கும் உருவகம் என்பார்கள். மார்த்தா இவ்வுலக நிலைக்கும் மரியா மறுவுலக நிலைக்கும் உருவகம் என்பார்கள். மார்த்தா யூத மரபுக்கும் மரியா கிறிஸ்தவ மரபுக்கும் உருவகம் என்பார்கள். மார்த்தா செயல்வழி மீட்பு என்பதற்கும் மரியா நம்பிக்கைவழி மீட்பு என்பதற்கும் உருவகம் என்பார்கள். இவ்வாறு மார்த்தாவையும் மரியாவையும் எதிர் துருவங்களாகக் காண்பது சரியல்ல. விவிலிய அறிஞர் கருத்துப்படி, மார்த்தாவும் மரியாவும் இயேசுவை நாம் எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளார்கள். மார்த்தா என்னும் சொல்லுக்குத் ''தலைவி'' என்பது பொருள். மார்த்தா இயேசுவைத் தம் வீட்டில் வரவேற்கிறார். அவர் பல பணிகளைச் செய்கிறார். ஏதோ உணவு தயாரித்துப் பரிமாறுவது மட்டுமல்ல இப்பணி. மார்த்தா உண்மையிலேயே வீட்டுத் தலைவியாக இருந்ததால் எல்லாப் பொறுப்புகளும் அவரிடம் இருந்தன. அந்நாட்களில் கிறிஸ்தவர்கள் வீடுகளில் கூடி இறைவார்த்தையைக் கேட்டு, நற்கருணைக் கொண்டாட்டம் நிகழ்த்தினார்கள். இத்தகைய ஒரு ''இல்லத் திருச்சபை''யில் நிகழும் பணிகளுக்கு மார்த்தா உருவகமாகிறார். மரியா இயேசுவின் காலடி அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார். லூக்கா நற்செய்தியில் இயேசு பல முறை ''கடவுளின் வார்த்தையைக் கேட்டு, அதைச் செயல்படுத்தவேண்டும்'' எனக் கூறுகிறார் (காண்க: லூக் 8:21). அவ்வாறு செயல்படுவோர் இயேசுவின் குடும்பத்தினர் ஆவர் (லூக் 8:21).
எனவே, மரியா இயேசுவின் வார்த்தையைக் ''கேட்டுக்கொண்டிருந்தார்'' என்றால் மரியா அந்த வார்த்தையைச் ''செயல்படுத்திக் கொண்டிருந்தார்'' எனலாம். மார்த்தா இயேசுவிடம் சென்று முறையிட்டார் என்பதை விட ஒரு கோரிக்கையை அவர்முன் வைத்தார் என்பதே பொருத்தம். அந்த வேண்டுதலுக்கு இயேசு அளித்த பதில்மொழி நமக்குச் சிறந்த பாடமாக உள்ளது. அதாவது, மார்த்தாவும் மரியாவும் சகோதர உறவால் இணைந்தவர்கள். அவர்களிடையே நிலவியது இரத்த உறவு மட்டுமல்ல, மாறாக, இயேசுவிடம் நம்பிக்கை கொண்ட குழுவைச் சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் ஒரு புதிய குடும்பத்தில் உறுப்பினராக உள்ளனர். அந்த உறவின் அடிப்படையில் அவர்களிடையே மிக நெருக்கமான ஒத்துழைப்பும் ஒற்றுமையும் நிலவ வேண்டும். இயேசுவின் சீடர்களாக அழைக்கப்பட்டவர்கள் கடவுளின் வார்த்தையைக் கேட்பதோடு நின்றுவிடாமல் அதைச் செயல்படுத்தவும் வேண்டும். செயல்பாட்டில் தங்கள் கவனத்தை முழுவதும் செலுத்தாமல் தொடர்ந்து கடவுளின் வார்த்தையைக் கேட்க வேண்டும். வார்த்தைக்குச் செவிமடுத்தலும் அதைச் செயல்படுத்தலும் இணைந்து செல்லும்போது அங்கே நிறைவான சீடத்துவம் துலங்கும். அதாவது, இயேசுவின் சீடராக விரும்புவோர் இறைவார்த்தையைக் ''கேட்க வேண்டும்''; அதைச் ''செயல்படுத்த வேண்டும்''. அப்போது மார்த்தாவும் மரியாவும் ஒன்றிணைந்து நமக்கு முன்மாதிரியாக மாறுவார்கள்.
மன்றாட்டு:
இறைவா, உம் வார்த்தையை எப்போதும் கேட்டு அதை வாழ்வில் செயல்படுத்த எங்களுக்கு அருள்தாரும்
|