திருவழிபாடு ஆண்டு - C
(இன்றைய வாசகங்கள்:
எசா 66: 18-21,
எபி 12: 5-7,11-13,
லூக்கா. 13: 22-30
திருப்பலி முன்னுரை அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள்.
இன்று பொதுக்காலம் இருபத்தோராம் ஞாயிறு. மிகப் பெரியதும் மாறாத பேரன்பை நமக்குக் காட்டுகின்ற வருமான ஆண்டவரின் திருச்சந்நிதியில் நன்றிப் பலி செலுத்த நாமெல்லாம் ஒன்றுகூடியுள்ளோம். உன்னதமான வாழ்வை நமக்குத் தரும் இறைவன், நம்மில் பெரும் அக்கறையுடையவராக இருக்கின்றார். வழியும் உண்மையும் வாழ்வுமான இயேசுவை நம்மத்தியில் அனுப்பி, நாம் அவரிடம் செல்லும் வழியைக் காட்டுகின்றார். நம்மைக் கண்டித்துத் திருத்தி ஆறுதல், நிறைவு, அனைத்தையும் பெருக்கெடுத்த நீரோடை போல நிறைவாக அவரே அருளுகின்றார். தந்தைக்குரிய பாசத்தையும், பரிவையும் எப்பொழுதும் காட்டி வருகின்றார்.
ஆகவே நாம் அனைவரும் ஆண்டவர் காட்டும் நெறிமுறைகளைத் தவறாது பின்பற்றி, நாமே அனைவருக்கும் நற்செய்தியாக மாறி இறைவனைப் புகழ்ந்தேற்றும் வரம் கேட்டுச் செபிப்போம்.
முதல் வாசகம்
உங்கள் உறவின் முறையாரை அனைத்து மக்களினத்தாரிடையே இருந்து என் திருமலைக்கு அழைத்து வருவார்கள்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 66: 18-21
ஆண்டவர் கூறியது: மானிடர் அனைவரின் செயல்களையும் எண்ணங்களையும் நான் அறிவேன்; பிறஇனத்தார், பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன்; அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள்.
அவர்களிடையே ஓர் அடையாளத்தை நான் ஏற்படுத்துவேன்; அவர்களுள் எஞ்சியிருப்போரை மக்களினத்தாரிடையே அனுப்பி வைப்பேன்; அவர்கள் தர்சீசு, பூல், வில் வீரர் வாழும் லூது, தூபால், யாவான், தொலையிலுள்ள தீவு நாடுகள் ஆகியவற்றிற்குச் செல்வார்கள்.
இந்நாட்டினர் என் புகழ் பற்றிக் கேள்விப்படாதவர்; என் மாட்சியைக் கண்டிராதவர்; அவர்களும் என் மாட்சி பற்றி மக்களினத்தாருக்கு எடுத்துரைப்பார்கள்.
அவர்கள் உங்கள் உறவின் முறையார் அனைவரையும் அனைத்து மக்களினத்தாரிடையே இருந்து ஆண்டவருக்கு அளிக்கும் படையலாகக் கொண்டு சேர்ப்பார்கள்; இஸ்ரயேல் மக்கள் தூய கலம் ஒன்றில் உணவுப் படையலை ஆண்டவரின் கோவிலுக்கு எடுத்து வருவதுபோல், அவர்களைக் குதிரைகள், தேர்கள், பல்லக்குகள், கழுதைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றின்மேல் ஏற்றி, எருசலேமிலுள்ள என் திருமலைக்கு அழைத்து வருவார்கள், என்கிறார் ஆண்டவர்.
மேலும் அவர்களுள் சிலரைக் குருக்களாகவும், லேவியராகவும் நியமிப்பேன், என்கிறார் ஆண்டவர்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
திருப்பாடல் 117: 1. 2
பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! பல்லவி
2 ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. பல்லவி
இரண்டாம் வாசகம்
ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 5-7,11-13சகோதரர் சகோதரிகளே, தம் பிள்ளைகளிடம் பேசுவதுபோல் இறைவன் உங்களுக்குத் தந்த பின்வரும் அறிவுரையை நீங்கள் மறந்துவிட்டீர்கள்: ``பிள்ளாய், ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாம் எனத் தள்ளிவிடாதே.
அவர் கண்டிக்கும்போது தளர்ந்துபோகாதே. தந்தை தாம் ஏற்றுக் கொண்ட மக்களைத் தண்டிக்கிறார்; ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்.'' திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளுங்கள். கடவுள் உங்களைத் தம் பிள்ளைகளாக நடத்துகிறார். தந்தை தண்டித்துத் திருத்தாத பிள்ளை உண்டோ? இவ்வாறு திருத்தப்படுவது இப்போது மகிழ்ச்சிக்குரியதாய் இராமல், துயரத்துக்குரியதாகவே தோன்றும். ஆனால் பின்னர், இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் அமைதியையும் நேர்மையான வாழ்வையும் பயனாகப் பெறுவர்.
எனவே, ``தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள், தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். நீங்கள் நேர்மையான பாதையில் நடந்து செல்லுங்கள்.'' அப்போதுதான் ஊனமாய்ப் போன கால்மூட்டு பிசகாமல் குணமடையும்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா ! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா !
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 22-30
அக்காலத்தில் இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக் கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார். அப்பொழுது ஒருவர் அவரிடம், ``ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?'' என்று கேட்டார்.
அதற்கு அவர் அவர்களிடம் கூறியது: ``இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். `வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்' என்று கேட்பீர்கள்.
அவரோ, `நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது' எனப் பதில் கூறுவார்.
அப்பொழுது நீங்கள், `நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே' என்று சொல்வீர்கள்.
ஆனாலும் அவர், `நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்' என உங்களிடம் சொல்வார். ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள். இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.
ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. வாழ்வின் ஊற்றாம் இறைவா, உம்மிடம் கொண்டுள்ள நம்பிக்கையால் நாளும் வளர்ந்து வருகின்ற உமது திருச்சபை யினை வழிநடத்தி வரும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரையும், உம் மீதான நம்பிக்கையில் உறுதிபடுத்திக் காத்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. நம்பிக்கை தருபவரே இறைவா, உலகில் போர் பதற்றம், வன்முறை, வேலையின்மை போன்ற பல்வேறு பிரச்சனை களால் நம்பிக்கை இழந்து தவிக்கும் இளையோர், உம் திருமகன் இயேசு வழியாக நம் பிக்கை நிறைந்த எதிர்காலத்தைக் காண உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
3. என்றென்றும் மாறாத பேரன்பு உடையவரான தந்தையே! நாங்கள் ஒவ்வொருவரும் கிறீஸ்துவிடமிரு ந்து பெற்றுக்கொண்ட அழைத்தலை ஆழமாக உணர்ந்து திருச்சபையின் வளர்ச்சிக்காக உழைக்கவும் தூய ஆவியின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழவும், தீமைகளை எம் வாழ்விலிருந்து அகற்றி நாங்கள் பெற்றுக் கொண்ட அழைப்பிற்கேற்ப பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. வாழ்வை வழங்குபவரே இறைவா, உலகெங்கும் உமது நற்செய்தியைப் புறக்கணிப்பவர்களால், கிறிஸ்தவ மக்களும் மறை போதகர்களும் அனுபவிக்கும் துன்பங்கள் நீங்கிட, மீட்பின் மறைபொருளை உலகோர் அனைவரும் புரிந்துகொள்ளச் செய்யுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
அன்புத் தந்தையே இறைவா! உலகிலிருந்து தவறுகள் அகலவும், நோய்கள் நீங்கிப் பஞ்சம் ஒழியவும், சிறைப்பட்டோர் விடுதலை பெறவும், வழிப்போக்கர் பாதுகாப்புப் பெறவும், பயணம் செய்வோர் நலமாக நாடு திரும்பவும், நோயுற்றோர் நலம் பெறவும், இறக்கின்றவர் மீட்பின் நிறைவு பெறவும் வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
|
இன்றைய சிந்தனை
இன, மொழித் தடைகள் தகர்க !
மார்டின் லூத்தர் கிங் அவர்களின் “எனக்கொரு கனவு உண்டு. ஒருநாள் வெள்ளை நிறக் குழந்தைகளும், கறுப்பினக் குழந்தைகளும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு நடப்பர்” என்னும் பிரபலமான கனவை இன்றைய முதல் வாசகம் நமக்கு நினைவுபடுத்துகிறது. ஆம், இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் வழியாக இறைவனின் மாபெரும் கனவொன்று வெளிப்படுகிறது. “பிற இனத்தார், பிற மொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன். அவர்களும் கூடி வந்து என் மாட்சியைக் காண்பார்கள்” என்று உரைக்கிறார் ஆண்டவர். இதுதான் இறைவனின் கனவு. மண்ணுலகில் வாழும் அனைவரும் ஒரே தந்தையின் பிள்ளைகள். எந்தவிதமான பிளவுகளோ, தடைகளோ இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். இறைவனின் இந்தக் கனவு நிறைவேறுவதற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் “ஆண்டவரே, மீட்பு பெறுவோர் சிலர் மட்டும்தானா?” என்;னும் கேள்விக்கான விடையை இன்றைய முதல் வாசகத்தில் நாம் காண்கிறோம். அனைவருக்கும் மீட்பு உண்டு. ஆனால், அனைவருக்கும் அந்த மீட்பின் செய்தியை அறிவிக்கும் கடமை நமக்கு இருக்கிறது. எப்படி அந்த செய்தியை அறிவிப்பது? நமது வாழ்வால்தான்! நம்மிடையே எந்தப் பிளவுகளும் இன்றி கிறித்தவர்களாகிய நாம் வாழும்போது, பிறருக்கு இறைவனின் கனவை நாம் அறிவிக்கிறோம். குறிப்பாக, சாதியின் பெயரால் கிறித்தவர்கள் பிளவுபட்டு நிற்பது இறைவனின் கனவை முறியடிக்கும் செயல். ஒற்றுமையுடன் வாழ்வோம், இறைவனின் கனவை நனவாக்குவோம்.
மன்றாட்டு:
ஒற்றுமையின் வேந்தனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். ஒரே ஆயனும், ஒரே மந்தையுமாக நாங்கள் அனைவரும் வாழும் வரம் தாரும். எங்களிடையே சாதி, மதம், மொழி, நாட்டின் பெயரால் அமைந்துள்ள வேலிகளை, தடைகளைத தகர்த்தெறிந்து, அனைவரும் உமது பிள்ளைகள் என்னும் உம் கனவை நனவாக்கும் பணியில் எங்களை ஈடுபடுத்த எங்களை ஆசிர்வதித்தருளும். ஆமென்.
|