மூன்றாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 24வது வாரம் செவ்வாய்க்கிழமை 2016-09-13
முதல் வாசகம்
நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 12-14. 27-31
சகோதரர் சகோதரிகளே, உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாய் இருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம். உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல; பல உறுப்புகளால் ஆனது. நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்.
அவ்வாறே திருச்சபையிலும் கடவுள் முதலாவது திருத்தூதர்களையும், இரண்டாவது இறைவாக்கினர்களையும், மூன்றாவது போதகர்களையும், பின்னர் வல்ல செயல் செய்வோர்களையும், அதன்பின் பிணிதீர்க்கும் அருள்கொடை பெற்றவர்கள், துணை நிற்பவர்கள், தலைமையேற்று நடத்துபவர்கள், பல்வகை பரவசப் பேச்சுப் பேசுகிறவர்கள் ஆகியோரையும் ஏற்படுத்தினார். எல்லாருமே திருத்தூதர்களா? எல்லாருமே இறைவாக்கினர்களா? எல்லாருமே போதகர்களா? எல்லாருமே வல்ல செயல் செய்பவர்களா? இல்லை. எல்லாருமே பிணி தீர்க்கும் அருள்கொடையைப் பெற்றவர்களா? எல்லாருமே பரவசப் பேச்சுப் பேசுகிறவர்களா? எல்லாருமே விளக்கம் அளிப்பவர்களா? இல்லையே! எனவே நீங்கள் மேலான அருள் கொடையையே ஆர்வமாய் நாடுங்கள்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவரின் மக்கள் நாம், அவர் மேய்க்கும் ஆடுகள்
திருப்பாடல் 100: 1-2. 3. 4. 5
அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! 2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! பல்லவி
3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! பல்லவி
4 நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! பல்லவி
5 ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார் அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 11-17
அக்காலத்தில் இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர். அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர். அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவு கொண்டு, ``அழாதீர்'' என்றார்.
அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள். அப்பொழுது அவர், ``இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு'' என்றார்.
இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார். அனைவரும் அச்சமுற்று, ``நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்'' என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
அவரைப் பற்றிய இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''அக்கைம்பெண்ணைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவு கொண்டு,
'அழாதீர்' என்றார்'' (லூக்கா 7:17)
உலகத்தில் மக்கள் அனுபவிக்கின்ற துன்பங்கள் கணக்கிலடங்கா. பசியும் பட்டினியும், வறுமையும் ஏழ்மையும், நோயும் நோக்காடும், வீடின்மையும் கல்வியறிவின்மையும் என்று மனிதரை வாட்டி வதைக்கின்ற இழிநிலைகள் இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் பாரெங்கும் பரவியிருப்பது கவலையானதே. எத்தனையோ தேவைகள் இருக்கின்ற போது நம்மை அடுத்திருக்கின்ற மனிதரின் வேதனைகளை நாம் கண்டுகொள்ளாமல் போகின்ற ஆபத்து உள்ளது. உதவி கேட்டுப் பலர் வரும்போது நம் அருகிலிருப்பவருக்கு உதவி தேவை என்பதை நாம் மறந்துவிடக் கூடும். இயேசுவிடம் உதவி கேட்டு எத்தனையோ மனிதர் வந்தனர். கும்பல் கும்பலாக அவரைத் தேடிச் சென்றனர். தம்மை நெருக்கிய கூட்டத்தின் நடுவிலும் இயேசு ஓர் எளிய கைம்பெண்ணின் வேதனையைக் கவனிக்கத் தவறவில்லை. அப்பெண்ணின் ஒரே மகன் இறந்துவிட்டிருந்தார். கணவனும் இல்லை, மக்களும் இல்லை என்ற அவல நிலைக்குத் தள்ளப்பட்ட அப்பெண்ணைக் கண்டு இயேசு இரக்கம் கொள்கிறார். அவருடைய மகனுக்கு உயிர் அளிக்கிறார். இச்செயல் வழியாக இயேசுவின் வல்லமை விளங்கியது ஒருபுறமிருக்க, அவருடைய இரக்க மனப்பான்மையும் இளகிய மனதும் இங்கே தோன்றுவதையும் நாம் கவனிக்க வேண்டும்.
எத்தனையோ அலுவல்கள் நமக்கு இருந்தாலும் நம்மை அடுத்திருக்கின்ற ஒருவருடைய தேவையை உணர்ந்து அவருக்கு உதவிசெய்ய நாம் நேரம் ஒதுக்க வேண்டும். பல அலுவல்களில் ஈடுபட்டு சுறுசுறுப்பாக உழைப்பவர்களுக்கு மேன்மேலும் பொறுப்புக்கள் வந்து சேரும் என்பது அனுபவ உண்மை. அந்த வேளைகளிலும் பிறருடைய தேவைகளைக் கண்டு, அவர்கள் நம்மை அணுகுவதற்கு முன்னரே உதவி செய்ய முன்வருவது இயேசுவின் சீடருக்கு அழகு. தம் ஒரே மகனை இழந்த கைம்பெண் இயேசுவிடம் உதவி கேட்டுக் கைநீட்டவில்லை; ஆனாலும் இயேசு அவருடைய தேவையைத் தாமாகவே உணர்ந்து அவருக்கு உதவிசெய்ய முன்வந்தார். வள்ளுவரும் நட்புப் பற்றிப் பேசும் போது ''உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு'' என்று போற்றியுரைப்பார் (குறள் 788). நட்பையும் விஞ்சிச் செல்வது இயேசு நம்மிடம் எதிர்பார்க்கின்ற அன்பு. கடவுளின் பண்பே அன்புதானே!
மன்றாட்டு:
இறைவா, குறிப்பறிந்து உதவி செய்ய எங்களுக்கு நன்மனதைத் தந்தருளும்.
|