யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C

(இன்றைய வாசகங்கள்: ஆமோ 8:4-7, 1 திமொ2:1-8, லூக்கா 16:1-13



 நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்?  நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்?




திருப்பலி முன்னுரை

பொறுப்புக்குரியவர்களே,

பொதுக்காலத்தின் இருபத்தைந்தாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். நேரிய உள்ளத்துடன் ஆண்டவருக்கு பணிவிடை புரிய இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவரின் கட்டளைகளை கடைபிடித்து வாழ்பவர்களாகவும், அதன் வழியாக நற்செய்தியைப் பறைசாற்றுபவர்களாகவும் திகழ நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். உலகெங்கும் கிறிஸ்துவின் அரசை நிறுவும் பொறுப்பு நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நமது தலைவர் இயேசுவின் விருப்பத்தை திருச்சபையிலும், சமூகத்திலும் நிறைவேற்றும் பொறுப்பை உணர்ந்து வாழ்வது நம் கடமை. ஆண்டவரின் திருவுளத்தை பொறுப்புடன் நிறைவேற்றும் நேர்மையுள்ள பணியாளர்களாக வாழும் அருள் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

வெள்ளிக் காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாமா?
இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 8: 4-7

வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்: `நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வு நாள் எப்பொழுது முடிவுறும்? மரக்காலைச் சிறியதாக்கி, எடைக்கல்லைக் கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்; வெள்ளிக் காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்; கோதுமைப் பதர்களையும் விற்கலாம்' என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா?'' ஆண்டவர் யாக்கோபின் பெருமை மீது ஆணையிட்டுக் கூறுகின்றார்: ``அவர்களுடைய இந்தச் செயல்களுள் ஒன்றையேனும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஏழைகளைத் தூக்கிவிடும் ஆண்டவரைப் போற்றுங்கள்.
திருப்பாடல் 113: 1-2. 4-6. 7-8 (

ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள். 2 ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக! பல்லவி

4 மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி. 5 நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர்போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்? 6 அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார். பல்லவி

7 ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்; 8 உயர்குடிமக்களிடையே - தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே - அவர்களை அமரச் செய்கின்றார். பல்லவி

இரண்டாம் வாசகம்

எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென கடவுள் விரும்புகிறார்
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-8

அன்பிற்குரியவர்களே, அனைவருக்காகவும் மன்றாடுங்கள்; இறைவனிடம் வேண்டுங்கள்; பரிந்து பேசுங்கள்; நன்றி செலுத்துங்கள். முதன்முதலில் நான் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே. இறைப் பற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய், தொல்லையின்றி அமைதியோடு வாழ அரசர்களுக்காகவும், உயர் நிலையிலுள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுங்கள். இதுவே நம் மீட்பராகிய கடவுளின் முன் சிறந்ததும் ஏற்புடையதுமாகும். எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார். ஏனெனில் கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர். அனைவரின் மீட்புக்காக அவர் தம்மையே ஈடாகத் தந்தார்; குறித்த காலத்தில் அதற்குச் சான்று பகர்ந்தார். இதற்காகவே நான் நற்செய்தியை அறிவிப்பவனாகவும் திருத்தூதனாகவும் விசுவாசத்தையும் உண்மையையும் பிற இனத்தாருக்குக் கற்பிக்கும் போதகனாகவும் ஏற்படுத்தப்பட்டேன். நான் சொல்வது உண்மையே; பொய் அல்ல. எனவே, ஆண்கள் சினமும் சொற்பூசலும் இன்றி எவ்விடத்திலும் தூய உள்ளத்தோடு கைகளை உயர்த்தி இறைவேண்டல் செய்யுமாறு விரும்புகின்றேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா ! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார் அல்லேலூயா !

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 1-13

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: ``செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது. தலைவர் அவரைக் கூப்பிட்டு, `உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது' என்று அவரிடம் கூறினார். அந்த வீட்டுப் பொறுப்பாளர், `நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கிவிடப் போகிறாரே! மண் வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும்போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும்' என்று அவர் தமக்குள்ளே சொல்லிக் கொண்டார். பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், `நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், `நூறு குடம் எண்ணெய்' என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், `இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்' என்றார். பின்பு அடுத்தவரிடம், `நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், `நூறு மூடை கோதுமை' என்றார். அவர், `இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்' என்றார். நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல் பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள். ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள். மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார். நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத் தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்? பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத் தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்? எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. வழிகாட்டும் தலைவரே இறைவா,

உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து, உம் திருவுளப்படி உண்மையுடன் பணியாற்ற அருள்புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

2. உலகாளும் அரசரே இறைவா,

உலக நாடுகளை ஆட்சி செய்யும் தலைவர்கள், மக்களின் வாழ்க்கை நலனுக்கும் இயற்கைச் சூழலின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து, நீதியுடன் ஆட்சி நடத்த உதவிபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

3. வாழ்வளிக்கும் மீட்பரே இறைவா,

நாட்டை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தவும், மக்களின் வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்யவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் ஆர்வமுள்ள நல்ல தலைவர்களை எம் நாட்டில் உருவாக்கித் தருமாறு உம்மை மன்றாடுகிறோம்.

4. நலந்தரும் மருத்துவரே இறைவா,

பசித் தீர்க்கும் பணியும், குணம் அளிக்கும் பணியும் வியாபாரமாக மாறிவிட்ட இந்த உலகில், அன்பும் நேர்மையும் பெருகவும், வெறுப்புணர்வும் அநீதியும் வன்முறைகளும் ஒழியவும் துணைபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

5. தாம் செல்வராயிருந்தும் தம்முடைய ஏழ்மையினால் நாங்கள் செல்வராகுமாறு எங்களுக்காக ஏழையான கிறிஸ்துவை எமக்களித்த தந்தையே!

நாங்கள் ஒவ்வொருவரும் தாழ்ச்சி என்னும் நற்பண்பை எம்மில் வளர்த்துக் கொள்ளவும், நாம் அனைவரும் நீதியோடும், உண்மையோடும் செயற்படவும், விவேகத்தோடு கூடிய விசுவாசவாழ்வு வாழவும், நல்லுள்ளத்தோடு அனைவருக்காகவும் பரிந்து பேசி செபிக்கவும், உமக்கு இடைவிடாது நன்றி செலுத்தவும் வேண்டிய மனப்பக்குவத்தை எமக்குத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும்'' (லூக்கா 16:2)

இயேசு கூறிய உவமைகளில் பல வகைகள் உண்டு. சில உவமைகளில் இயற்கை சார்ந்த உருவகங்கள் உள்ளன. மழை, காற்று, புயல், மண், பாறை, கோதுமை, திராட்சைத் தோட்டம், பறவைகள் போன்ற உருவகங்களை இவண் குறிப்பிடலாம். வேறு சில உவமைகள் மனித உறவுகளையும் தொடர்புகளையும் பற்றியவை. நல்ல சமாரியர், காணாமற்போன மகன், ஏழை இலாசர் போன்ற உவமைகள் இவ்வகையைச் சார்ந்தவை. இவ்வாறு மனித செயல்பாடுகள் பற்றிய உவமைகளில் ''வீட்டுப் பொறுப்பாளர்'' பற்றி இயேசு கூறிய உவமைகள் சிறப்பு வாய்ந்தவை. கடவுள் மனிதரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கிறார். பொறுப்புகளைப் பெற்ற மனிதர் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பினை ஆற்றுவதில் பொறுப்போடு செயல்பட வேண்டும். ''உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவதென்ன?'' என்று கேட்ட வீட்டுத் தலைவர், ''உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும்'' (காண்க: லூக்கா 16:2) என்று வீட்டுப் பொறுப்பாளரிடம் கூறுவது கடவுளுக்கும் நமக்கும் இடையே நிலவுகின்ற உறவைப் பிரதிபலிக்கிறது. கடவுளிடமிருந்து நாம் பெறுகின்ற பொறுப்பு பிற மனிதர் நமக்குத் தருகின்ற பொறுப்பு மட்டுமல்ல, மாறாக, நம்மைத் தம் சாயலில் உருவாக்கி நம்மைத் தம் பிள்ளைகளாக ஏற்கின்ற கடவுள் நாம் இவ்வுலகில் அவருடைய பதிலாள்களாக இருந்து அவருடைய பெயரால் நம் பொறுப்பைச் செவ்வனே ஆற்ற வேண்டும் என்றுதான் விரும்புகிறார். எனவே, கடவுளிடமிருந்து நாம் பெறுகின்ற பொறுப்பு ஒரு கொடை ஆகும். நன்றியோடு அக்கொடையைப் பெறுகின்ற நாம் அதை நன்முறையில் பயன்படுத்த அழைக்கப்படுகிறோம்.

பொறுப்போடு செயல்படுகின்ற மனிதர் தாம் புரிகின்ற செயல்களின் விளைவுகளை எண்ணிப் பார்ப்பர். நல் விளைவிகளைக் கொணரும் செயல்களுக்கும் தீய விளைவுகளைக் கொணரும் செயல்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டினையும் தெளிவாக உணர்வர். இவ்வாறு முன்மதியோடு செயல்பட்டால் நாம் கடவுளிடம் கணக்கு ஒப்படைக்கும் நேரம் வரும்போது அஞ்ச வேண்டியதில்லை. ஆனால், பொறுப்பற்ற விதத்தில் செயல்படுவோர் தாம் புரிகின்ற தவற்றிற்குத் தாங்கள் பொறுப்பல்ல என்று கூற முடியாது. ஏனென்றால், கடவுள் நாம் சுதந்திரமாகச் செயல்படுவதற்கான சக்தியை நமக்கு அளித்து, நாம் அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப, முன்மதியோடு செயல்பட வேண்டும் என நம்மை அழைக்கிறார். இச்வாலை ஏற்க நாம் தயாரா?

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் பொறுப்புணர்வோடும் முன்மதியோடும் செயல்பட அருள்தாரும்.