யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 25வது வாரம் வெள்ளிக்கிழமை
2016-09-23




முதல் வாசகம்

உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலம் உண்டு.
சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 3: 1-11

ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் உண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலம் உண்டு: பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்; நடவுக்கு ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம்; கொல்லுதலுக்கு ஒரு காலம், குணப்படுத்துதலுக்கு ஒரு காலம்; இடித்தலுக்கு ஒரு காலம், கட்டுதலுக்கு ஒரு காலம்; அழுகைக்கு ஒரு காலம், சிரிப்புக்கு ஒரு காலம்; துயரப்படுதலுக்கு ஒரு காலம், துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்; கற்களை எறிய ஒரு காலம், கற்களைச் சேர்க்க ஒரு காலம்; அரவணைக்க ஒரு காலம், அரவணையாதிருக்க ஒரு காலம்; தேடிச் சேர்ப்பதற்கு ஒரு காலம், இழப்பதற்கு ஒரு காலம்; காக்க ஒரு காலம். தூக்கியெறிய ஒரு காலம்; கிழிப்பதற்கு ஒரு காலம், தைப்பதற்கு ஒரு காலம்; பேசுவதற்கு ஒரு காலம், பேசாதிருப்பதற்கு ஒரு காலம்; அன்புக்கு ஒரு காலம், வெறுப்புக்கு ஒரு காலம்; போருக்கு ஒரு காலம், அமைதிக்கு ஒரு காலம். வருந்தி உழைப்பவர் தம் உழைப்பினால் அடையும் பயன் என்ன? மனிதர் பாடுபட்டு உழைப்பதற்கெனக் கடவுள் அவர்மீது சுமத்திய வேலைச் சுமையைக் கண்டேன். கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்; காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!
திருப்பாடல் 144: 1-4

என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! 2 என் கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே! என் கேடயமும் புகலிடமும் அவரே! பல்லவி

3 ஆண்டவரே! மனிதரை நீர் கவனிக்க அவர்கள் யார்? மானிடரை நீர் கருத்தில் கொள்ள அவர்கள் யார்? 4 மனிதர் சிறுமூச்சுக்கு ஒப்பானவர்; அவர்களின் வாழ்நாள்கள் மறையும் நிழலுக்கு நிகரானவை. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-22

அக்காலத்தில் இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம் ``நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?'' என்று அவர் கேட்டார். அவர்கள் மறு மொழியாக, ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்'' என்றார்கள். ``ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, ``நீர் கடவுளின் மெசியா'' என்று உரைத்தார். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார். மேலும் இயேசு, ``மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்'' என்று சொன்னார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

இயேசுவின் செபம்

இயேசுவின் வாழ்விலே, அவர் அதிகமான நேரத்தை செபத்திலே செலவழித்ததாக நற்செய்தியிலே வாசிக்கிறோம். பகல் முழுவதும் களைப்பாக இருந்தாலும், அந்த களைப்பிலும் இயேசு செபிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சீடர்கள் இயேசுவோடு உடன் நடந்தார்கள், பயணித்தார்கள். ஆனால், போதித்தது இயேசு தான். எனவே, சீடர்களை விட இயேசு தான் களைப்பாக இருந்திருக்க வேண்டும். ஆனால், சீடர்கள் களைப்பில் உறங்குகிறார்கள். இயேசு செபிக்கிறார். இயேசு எதற்காக செபிக்க வேண்டும்? இயேசுவுக்கு அப்படி என்ன தேவை இருந்திருக்கும்? இயேசுவும் தந்தையைப் புகழ வேண்டுமா? இயேசுவும் தனது தந்தைக்கு நன்றி செலுத்த வேண்டுமா? இந்த கேள்விகள் நிச்சயம் நமக்குள்ளாக எழும்.

இயேசுவின் செபத்தின் மையக்கருத்து என்னவாக இருந்திருக்கும்? லூக்கா நற்செய்தியாளர் இயேசுவைப்பற்றிச் சொல்கிறபோது, ஒரு வார்த்தைக்கு அதிக அழுத்தம் கொடுக்கிறார். ”இயேசு அவர்களிடம், நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?(2: 49). ”இயேசுவோ அவர்களிடம், நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப்பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும். இதற்காகவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னார் (4: 43). ”இன்றும் நாளையும் அதற்கடுத்த நாளும் நான் தொடர்ந்து சென்றாக வேண்டும்” (13: 33). மேற்கூறிய இறைவார்த்தைகள் அனைத்துமே, இயேசு, தந்தையாகிய கடவுள் தன்னிடம் ஒப்படைத்திருந்த பணியை நிறைவேற்றி முடிப்பதில் எந்த அளவுக்கு ஆர்வத்தோடு இருந்தார் என்பதையும், அவரது முழு சிந்தனையும் அதைப்பற்றித்தான் இருந்தது என்பதையும் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. ஆக, இயேசுவின் செபம், அவரது தந்தையின் திருவுளத்தை நிறைவாக முடிக்க வேண்டும், என்பதாகத்தான் இருந்திருக்கும். தந்தை தனக்காகக் கொடுத்திருக்கிற பணியிலிருந்து, தான் எந்தவித சோதனைக்கும், நெருக்கடிகளுக்கும் ஆளாகாமல் சிறப்பாக செய்துமுடிக்க வேண்டும் என்பதாகவே நிச்சயம் இருந்திருக்கும்.

மன்றாட்டு:

நமது வாழ்க்கையில் நாம் எதைச் செய்து முடிக்க வேண்டுமென்று நாம் நினைத்தாலும், அதைச் சிறப்பாகச் செய்து முடிக்க கடவுளின் அருள் வேண்டுவோம்.