மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
(இன்றைய வாசகங்கள்:
2அரசர்கள் 5:14-17,
2திமொத்தேயு 2:8-13,
லூக்கா 17:11-19
திருப்பலி முன்னுரை நன்றியுள்ளவர்களே,
பொதுக்காலத்தின் இருபத்தெட்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரின் உதவியை நம்பிக்கையோடு கேட்கவும், பெற்ற நன்மைகளுக்கு முழு மனதுடன் நன்றி செலுத்தவும் இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. அற்புதங்களுக்காகவும், அதிசயங்களுக்காகவும் மட்டும் கடவுளைத் தேடுவது சரியல்ல என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். நமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அல்ல, இறைவனின் விருப்பத்தை முதன்மையாக நிறை வேற்ற இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். குணமடைந்த பத்து தொழுநோயாளர்களில் சமாரியரான ஒருவர் மட்டுமே திரும்பி வந்து இயேசுவுக்கு நன்றி செலுத்தினார். "மற்ற ஒன்பது பேர் எங்கே?" என்ற இயேசுவின் கேள்வி அவர் நன்றியை எதிர்ப்பார்ப்பவர் என் பதை நமக்குத் தெளிவாக்குகிறது. இறைவன் நமக்கு செய்த நன்மைகளுக்கு நன்றி மறக்காதவர்களாய் வாழ வரம் வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.
முதல் வாசகம்
நாமான் கடவுளின் அடியவரிடம் திரும்பி வந்து ஆண்டவரை ஏற்றுக்கொண்டார்.
அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 14-17
அந்நாள்களில் நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். அவரது உடல் சிறு பிள்ளையின் உடலைப் போல் மாறினது.
பின்பு அவர் தம் பரிவாரம் அனைத்துடன் கடவுளின் அடியவரிடம் திரும்பி வந்து,“இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லையென இப்போது உறுதியாக அறிந்து கொண்டேன்.
இதோ, உம் அடியான்! எனது அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளும்” என்றார். அதற்கு எலிசா, “நான் பணியும் வாழும் ஆண்டவர்மேல் ஆணை! நான் எதையும் ஏற்றுக்கொள்ளேன்” என்றார். நாமான் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
அப்பொழுது நாமான் அவரை நோக்கி, “சரி, அப்படியே ஆகட்டும். ஆயினும் ஒரு சிறு வேண்டுகோள்; இரு கழுதைப் பொதி அளவு மண்ணை இங்கிருந்து எடுத்துச் செல்ல உம் அடியானுக்கு அனுமதி தாரும். இனிமேல் உம் அடியானாகிய நான் ஆண்டவரைத் தவிர வேறு தெய்வங்களுக்கு எரிபலியோ வேறு பலியோ ஒருபோதும் செலுத்தமாட்டேன்'' என்றார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவர் தம் மீட்பை மக்களினத்தார் காண வெளிப்படுத்தினார்.
திருப்பாடல் 98: 1. 2-3-4
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி
2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண் முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3ய இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி
3b உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி
இரண்டாம் வாசகம்
கிறிஸ்துவோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சி செய்வோம்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 8-13
அன்பிற்குரியவரே, தாவீதின் மரபில் வந்த இயேசு கிறிஸ்து இறந்து உயிர் பெற்று எழுந்தார் என்பதே என் நற்செய்தி. இதனை நினைவில் கொள். இந்நற்செய்திக்காகவே நான் குற்றம் செய்தவனைப் போலச் சிறையிடப்பட்டுத் துன்புறுகிறேன்.
ஆனால் கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது. தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் மீட்பையும் அதனோடு இணைந்த என்றுமுள்ள மாட்சியையும் கிறிஸ்து இயேசு வழியாக அடையுமாறு அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறேன்.
பின்வரும் கூற்று நம்பத் தகுந்தது: `நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்; அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சி செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவர் நம்மை மறுதலிப்பார். நாம் நம்பத் தகாதவரெனினும் அவர் நம்பத் தகுந்தவர். ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது.' இவற்றை நீ அவர்களுக்கு நினைவுறுத்து.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா ! எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே அல்லேலூயா !
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11-19
அக்காலத்தில் இயேசு எருசலேமுக்குப் போய்க்கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார்.
ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்துத் தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்றுகொண்டே, ``ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்'' என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள். அவர் அவர்களைப் பார்த்து, ``நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்'' என்றார்.
அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும் போது அவர்கள் நோய் நீங்கிற்று.
அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.
இயேசு அவரைப் பார்த்து, ``பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!'' என்றார்.
பின்பு அவரிடம், ``எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது'' என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. நன்மைகளின் நாயகரே இறைவா, திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது பணியைச் செய்வதில் தளரா மனதுடன் செயலாற்றவும், நீர் வழங்கியுள்ள பொறுப்புகளை நன்றியுணர்வுடன் நிறைவேற்றவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பின் உறைவிடமே இறைவா, அமைதியற்ற இந்த உலகில் உமது அன்பை விதைக்கும் கருவிகளாக உலக நாடுகளின் தலைவர்களை உருவாக்கி, உமது படைப்புகளை நன்றியுணர்வுடன் பாதுகாக்கும் திறனை அவர்களுக்கு அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. வல்லமையும் அன்பும் கட்டுபாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ள தந்தையே! நாம் உம்மிடமிருந்து கேட்ட நலந்தரும் வார்த்தைகளை மேல்வரிச் சட்டமாகக் கொண்டு.
எமக்குள் குடிகொள்ளும் தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக் காத்துக் கொள்ளவும் வேண்டிய நல்லுள்ளத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. நலன்களின் ஊற்றே இறைவா, இவ்வுலகில் பல்வேறு நோய்களால் வருந்துவோர் நம்பிக்கையுடன் உம்மைத் தேடி வரவும், உமது குணமளிக்கும் வல்லமையால் நலம் பெற்று உமக்கு நன்றி செலுத்தவும் அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. ஏழைகளைத் தூசியிலிருந்து தூக்கி நிறுத்துகின்றவரும்: வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றவருமான ஆண்டவரே! அடக்குமுறையின் வலைக்குள் அகப்பட்டுக் கண்ணீரோடும், கவலையோடும், வாழும் அனைவரையும் ஆசீர்வதித்து, அவர் அனைவரும் நீர் வழங்கும் விடுதலையைப் பெற்று மகிழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
|
இன்றைய சிந்தனை
''பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?'' (லூக்கா 17:17)
கலிலேயாவிலிருந்து எருசலேம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார் இயேசு. அவரோடு சீடர்களும் நடந்துசெல்கிறார்கள். வழியில் இயேசு தம் சீடர்களுக்கு இறையாட்சி பற்றிப் போதிக்கிறார். பல புதுமைகள் நிகழ்த்தி, மக்களுக்கு நலமளிக்கிறார். அத்தகைய நலமளிக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று ''பத்துத் தொழுநோயளர்கள் நோய்நீங்கப்பெறுதல்'' என்பதாகும் (லூக் 17:11-19). கலிலேயாவிலிருந்து எருசலேம் வருவதற்கு யோர்தான் பள்ளத்தாக்கைக் கடப்பதே நேர்வழி. லூக்கா கூற்றுப்படி இயேசு ஒரு சுற்றுவழியைத் தேர்ந்தெடுத்து சமாரியாப் பகுதிகள் வழியே நடந்து செல்கிறார். கடவுளின் திட்டத்தில் யூதர்களுக்கு மட்டுமன்றி எல்லா மக்களுக்கும் இடமுண்டு என்பது இங்கே குறிக்கப்படுகிறது. இயேசு இவ்வாறு வழிநடந்து செல்லும் போது பத்துத் தொழுநோயாளர்கள் அவரை அணுகிவந்து, ''ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்'' என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டுகிறார்கள் (லூக் 17:13). இயேசு அவர்களுக்கு நலமளிக்கிறார். பத்துப் பேரில் ஒன்பது பேர் யூதர்கள், ஒருவர் மட்டும் சமாரியர். குணமடைந்த ஒன்பது யூதர்களும் லேவியர் நூலில் வழங்கப்பட்ட சட்டத்திற்கு ஏற்ப (காண்க: லேவி 14:2-9), குருவிடம் சென்று தங்களைக் காட்ட வேண்டும்; அவர்கள் குணமடைந்துவிட்டார்கள் என்று கண்டால் குரு சமுதாயத்தோடு அவர்கள் உறவாடலாம் என அறிவிப்பார். குணமடைந்த அந்த மனிதர்கள் இன்னும் சட்டத்தின் பிடியில் இருப்பதை இங்கே காண்கின்றோம். ஆனால் இயேசுவின் வல்லமையால் குணம்பெற்ற பத்தாவது மனிதர் ஒரு சமாரியர். அவருக்கு யூத சட்டப்படி குருவைப் போய் பார்க்க வேண்டும் என்ற கடமை இருக்கவில்லை. ஆனால் அந்த மனிதர் தாம் பெற்ற நன்மைக்கு நன்றி செலுத்த விரும்புகிறார். எனவே, இயேசுவிடம் செல்கிறார். அவ்வாறு செல்லும்போது ''கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே'' போகிறார். இயேசுவின் காலில் முகங்குப்புற விழுகிறார். இயேசுவுக்குத் தம் இதய நன்றியை வெளிப்படுத்துகிறார்.
இங்கே இரு ஆழ்ந்த கருத்துக்களை நாம் காண்கின்றோம். பத்துத் தொழுநோயாளர்களும் ஒன்று சேர்ந்து இயேசுவிடம் வருகிறார்கள். அவர்களில் ஒன்பது பேர் யூதராக இருந்தாலும், ஒருவர் சமாரியராக இருந்தாலும் ஒருவருக்கொருவர் வேறுபடுத்தி ஒதுக்கிட விரும்பவில்லை. ஒரே குடும்ப உணர்வு அவர்களைப் பிணைக்கிறது. கடவுளின் குடும்பம் சாதி இன அடிப்படையில் பிளவுபடலாகாது என்னும் உண்மையை இங்கே காண்கிறோம். இரண்டாவது கருத்து, இயேசுவைத் தேடி வந்த சமாரியத் தொழுநோயாளர் அவருக்கு நன்றிசெலுத்திய முறையாகும். லூக்கா நற்செய்திப்படி, இயேசுவிடமிருந்து நலம் பெறுகின்ற மனிதர் கடவுளைப் புகழ்வர்; இயேசு கடவுளிடமிருந்த வந்தவர் என்பதை ஏற்பர் (காண்க: லூக் 17:6). நாமும் இயேசுவின் வல்லமையால் நலம் பெறுகின்றோம்; அவருடைய சக்தியால் மீட்பு அடைகின்றோம். இந்த அரும் கொடையைப் பெற்ற பிறகு நாம் நன்றியற்றவர்களாக இருத்தல் ஆகாது. நாம் செலுத்துகின்ற நன்றி இறைப்புகழாக ஒலிக்க வேண்டும்; இயேசுவிடமிருந்து இறையருளும் வல்லமையும் ஊற்றெடுத்து எழுந்து நம்மைக் கழுவித் தூய்மையாக்குவதை உள்ளத்தின் ஆழத்தில் உணர்ந்து, அவரை நம் ஆண்டவராக ஏற்றுப் பணிய வேண்டும்.
மன்றாட்டு:
இறைவா, நாங்கள் உமக்கு எந்நாளும் நன்றி செலுத்துகின்ற வரம் தந்தருளும்.
|