யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2016-11-06

(இன்றைய வாசகங்கள்: மக்கபேயர் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1-2, 9-14 , திருப்பாடல் 17: 1. 5-6. 8, 15 ,திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 16 - 3: 5,புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20:27-38)




அவர் இறந்தோரின் கடவுள் அல்ல. மாறாக, வாழ்வோரின் கடவுள். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல. மாறாக, வாழ்வோரின் கடவுள். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல. மாறாக, வாழ்வோரின் கடவுள்.


திருப்பலி முன்னுரை

உயிர்ப்புக்குரியவர்களே,

பொதுக்காலத்தின் முப்பதிரண்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். உயிர்த்த ஆண்டவரின் சீடர்களாகிய நாம் அனைவரும் உயிர்த்தெழுதலின் மக்களாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இவ்வுலக வாழ்வில் அதிக ஆர்வம் காட்டாமல், மறுவுலக வாழ்வுக்குரியவற்றில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள இயேசு நம்மை அழைக்கிறார். இறைவன் தரும் நிலை வாழ்வை நமது சந்தேகங்களாலும், பொறுப்பற்ற நடத்தையாலும் இழந்துவிடாதவாறு நாம் எச்சரிக்கப்படுகிறோம். நாம் உயிர்ப்பின் மக்களாய், வானதூதரைப் போன்று பேரின்ப வாழ்வில் பங்குபெறத் தயாராகுமாறு அழைக்கப்படுகிறோம். இயேசுவின் அழைப்புக்கு கீழ்ப்படிந்து, வாழ்வோரின் கடவுள் தரும் நிலைவாழ்வுக்கு நம்மைத் தயார் செய்ய வரம் வேண்டி இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

நாங்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார்.
மக்கபேயர் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1-2, 9-14

அக்காலத்தில் சகோதரர்கள் எழுவரும் அவர்களுடைய தாயும் கைதுசெய்யப்பட்டார்கள்: சாட்டைகளாலும் வார்களாலும் அடிக்கப்பட்டுச் சட்டத்துக்கு முரணாகப் பன்றி இறைச்சியை உண்ணும்படி மன்னனால் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.அவர்களுள் ஒருவர் மற்றவர்களின் சார்பில், "நீ எங்களிடமிருந்து கேட்டறிய விரும்புவது என்ன? எங்கள் மூதாதையருக்குக் கொடுக்கப்பட்ட சட்டங்களை மீறுவதைவிட நாங்கள் இறக்கத் துணிந்திருக்கிறோம் " என்றார். தாம் இறுதி மூச்சு விடும் வேளையில், "நீ ஒரு பேயன். நீ எங்களை இம்மை வாழ்வினின்று அகற்றிவிடுகிறாய். ஆனால் நாங்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார்: எனெனில் நாங்கள் இறப்பது அவருடைய கட்டளைகளின் பொருட்டே " என்று கூறினார்.அவருக்குப் பிறகு மூன்றாமவரை அவர்கள் கொடுமைப் படுத்தினார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, உடனடியாகத் தம் நாக்கையும் கைகளையும் அவர் துணிவுடன் நீட்டினார்: "நான் இவற்றை விண்ணக இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்டேன்: அவருடைய சட்டங்களுக்காக நான் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை. அவரிடமிருந்து மீண்டும் இவற்றைப் பெற்றுக் கொள்வேன் என நம்புகிறேன் " என்று பெருமிதத்தோடு கூறினார். அவர்தம் துன்பங்களைப் பொருட்படுத்தவில்லை. எனவே மன்னனும் அவனோடு இருந்தவர்களும் இந்த இளைஞரின் எழுச்சியைக் கண்டுவியந்தார்கள். அவரும் இறந்தபின் நான்காமவரையும் அவர்கள் அவ்வண்ணமே துன்புறுத்திக் கொடுமைப்படுத்தினார்கள். அவர் இறக்கும் தறுவாயில், "கடவுள் மீண்டும் உயிர்த்தெழச் செய்வார் என்னும் நம்பிக்கை எனக்கு இருப்பதால், மனிதர் கையால் இறக்க விரும்புகிறேன். ஆனால் நீ வாழ்வு பெற உயிர்த்தெழமாட்டாய் " என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

விழித்தெழும்போது, ஆண்டவரே உம் உருவம் கண்டு நிறைவடைவேன்.
திருப்பாடல் 17: 1. 5-6. 8, 15

ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். பல்லவி

5 என் நடத்தை உம் பாதைகளில் அமைந்துள்ளது; என் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை. 6 இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும். பல்லவி

8 உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும். 15 நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன். பல்லவி

இரண்டாம் வாசகம்

நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை ஆண்டவர் உறுதிப்படுத்துவாராக!
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 16 - 3: 5

நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும் உங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை உறுதிப்படுத்துவார்களாக! சகோதர சகோதரிகளே! இறுதியாக எங்களுக்காக இறைவனிடம் வேண்டுங்கள். ஆண்டவருடைய வார்த்தை உங்களிடையே விரைந்து பரவிப் புகழ் பெற்றது. அதுபோல அது எங்கும் பரவிப் புகழ்பெறவும், தீயோர், பொல்லாதவர் கையினின்று நாங்கள் விடுவிக்கப்படவும் வேண்டுங்கள்: ஏனெனில் நம்பிக்கை எல்லாரிடமும் இல்லை. ஆனால் ஆண்டவர் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களை உறுதிப்படுத்தி, தீயோனிடமிருந்து காத்தருள்வார். நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டதை நீங்கள் செய்கிறீர்கள்: இனியும் செய்வீர்கள் என்னும் உறுதியான நம்பிக்கையை ஆண்டவர் எங்களுக்குத் தருகிறார். கடவுளின் அன்பையும், கிறிஸ்துவின் மன உறுதியையும் அடைய ஆண்டவர் உங்கள் உள்ளங்களைத் தூண்டுவாராக!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவே இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20:27-38

உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி,"போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக் கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார். இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாம்,மூன்றாம், சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்:கடைசியாக அப்பெண்ணும் இறந்தார்.அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே? " என்று கேட்டனர்.அதற்கு இயேசு அவர்களிடம், "இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்துகொள்கின்றனர்.ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை.இனி அவர்கள் சாகமுடியாது: அவர்கள் வானதூதரைப்போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, "ஆபிரகாமின் கடவுள், யாக்கோபின் கடவுள் " என்று கூறியிருக்கிறார்.அவர் இறந்தோரின் கடவுள் அல்ல: மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே " என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. என்றும் வாழ்பவரே இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், நீர் அளிக்கும் உயிர்ப்பின் வாழ்வை இறைமக்கள் உரிமையாக்க உழைக்குமாறு உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.

2. எங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்யும் தந்தையே!

எம் பங்கை வழிநடத்தி இறந்த பங்கு குருக்களுக்காவும், பங்குமக்களுக்காகவும் மன்றாடுகிறோம். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் என்பதிற்கினங்க உம்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்து இறந்த ஆன்மாக்கள் அனைத்தும் தங்களுடைய பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்களை நிறைவாக ஆசிர்வதித்து உம் வானக வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அன்பின் இறைவா,

யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக சிறப்பாக மன்றாடுகிறோம். அவர்கள் தாங்கள் செய்த பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்கள் வேதனை குறைந்து உம் தெய்வீக விருந்தில் பங்குபெற அவர்களை ஆசிர்வதித்து உம்மிடம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வாழ்வு தருபவரே இறைவா,

இல்லாமை, இயலாமை, முதுமை, நோய் போன்றவற்றால் துன்பத்தில் தவிக்கும் மக்கள் அனைவரும், உமது அருளால் புதுவாழ்வைக் கண்டடைய உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.

5. அன்புத் தந்தையே இறைவா!

எம் இளைஞர்களுக்காக உம்மை மன்றாடுகின்றோம். இவர்கள் கடவுளின் பிள்ளைகளாய் நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதிபெறவும்,ஞானத்தோடு அனைத்தையும் செய்து முடிக்கவும், தீமைகளிலிருந்து விலகி உம்முடைய சாட்சிகளாய் அவர்கள் வாழ அவாகளை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''சதுசேயர் இயேசுவிடம், 'உயிர்த்தெழும்போது அவர் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?' என்று கேட்டனர்'' (லூக்கா 20:33)

இயேசுவிடம் கேள்வி கேட்டவர்கள் பலர். சில வேளைகளில் அவர்கள் நல்ல எண்ணத்தோடு கேள்விகள் கேட்டார்கள். அக்கேள்விகளுக்கு இயேசு பொருத்தமான பதிலளித்தார். ஆனால் வேறு சில வேளைகளில் சிலர் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்கத்துடன் கேள்வி கேட்டனர். இத்தகைய கேள்விகளில் ஒன்று ''உயிர்த்தெழுதல்'' பற்றியது. இக்கேள்வியைக் கேட்டவர்கள் சதுசேயர்கள். இவர்கள் பரிசேயருக்கு எதிரான குழுவினர். பரிசேயர் தொழுகைக் கூடங்களை ஆதரித்தவர்கள். ஆனால் சதுசேயரோ எருசலேம் நகரில் அமைந்த கோவிலில் மட்டுமே கடவுளுக்கு வழிபாடு நடத்தப்பட வேண்டும் என வாதாடினார்கள். அவர்கள் விவிலியத்தில் ஏற்றுக்கொண்ட நூல்கள் ''தோரா'' என்றழைக்கப்படுகின்ற முதல் ஐந்து நூல்கள் மட்டுமே. மேலும், சதுசேயர் சாவுக்குப் பின் உயிர்த்தெழுதல் உண்டு என்னும் உண்மையை மறுத்தனர். இயேசுவிடம் அவர்கள் கேட்ட கேள்வி நமக்கு விசித்திரமாகப் படலாம். ஆனால் அன்றைய யூத வழக்கப் பின்னணியில் அக்கேள்வியை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு பெண்ணின் கணவன் இறந்துவிட்டால் அவருடைய கொழுந்தனே அப்பெண்ணை மனைவியாக ஏற்றுத் தம் சகோதரருக்கு வழிமரபு உண்டாக்க வேண்டும் என்பது மோசே வழங்கிய சட்டம். அது இணைச் சட்டம் என்னும் விவிலிய நூலில் உள்ளது (காண்க: இச 25:5-6). இவ்வாறு ஏழு சகோதரர்களை ஒருவர்பின் ஒருவராக மணந்த பெண் ''உயிர்த்தெழும்போது யாருக்கு மனைவி ஆவார்?'' (லூக் 20:33) என்பது சதுசேயர் எழுப்பிய தந்திரக் கேள்வி.

இக்கேள்விக்கு இயேசு அளித்த பதிலில் இரு பகுதிகள் உள்ளன. முதலில் இயேசு ''உயிர்த்தெழுவோர் பெறும் வாழ்வு'' எவ்வாறு இருக்கும் என்பதை விளக்குகிறார். பின்னர், சாவுக்குப் பின் உயிர்த்தெழுதல் உண்டு என்பதற்கு விவிலிய ஆதாரம் வழங்குகிறார். விண்ணக வாழ்வு இம்மண்ணக வாழ்வின் பிரதிபலிப்பாக இராது. மாறாக, மனிதர் ஒரு புதிய நிலை அடைவார்கள். எனவே, இவ்வுலக வழக்கங்கள் போலவே மறுவுலகிலும் இருக்கும் என நினைப்பது சரியல்ல. மனிதருக்கு உயிரளிக்கின்ற கடவுள் அந்த உயிர் முற்றிலுமாக மறைந்துவிடுவதை விரும்பவில்லை. ''வாழ்வோரின் கடவுளாக'' விளங்கும் இறைவன் நமக்கு வாழ்வளிக்க விரும்புகிறார். எனவே, சாவுக்குப் பின் ஒரு புதிய வாழ்வு நிலையை நாம் பெறுவோமே ஒழிய, நாம் அழிந்துபடுவதில்லை. இம்மண்ணகத்தில் கடவுள் நமக்கு வழங்குகின்ற உயிர் அவர் தருகின்ற கொடை. அதுபோலவே, நிலை வாழ்வை வழங்கும் கடவுள் நமக்குத் தம்மையே கொடையாக அளிக்கின்றார். எந்நாளும் வாழ்கின்றவர் கடவுள் என்பதால் நாமும் நிலை வாழ்வில் பங்கேற்போம். அதற்கு ஒரே வழி நாம் இயேசுவைப் பின்பற்றிச் செல்வதுதான்.

மன்றாட்டு:

இறைவா, எங்களுக்கு வாழ்வளிப்பவர் நீரே என உணர்ந்து நாங்கள் செயல்பட அருள்தாரும்.