திருவழிபாடு ஆண்டு - A 2016-12-18
(இன்றைய வாசகங்கள்:
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 7:10-14,திருப்பாடல்: 24:1-6
,திருத்தூதர் பவுல் உரேமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1:1-7,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:18-24)
திருப்பலி முன்னுரை
கடவுளுக்குரியவர்களே, திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். கிறிஸ்து பிறப்பு விழாவுக்கான இறுதிகட்ட தயாரிப்புக்கு இன்றைய திருவழிபாடு நம்மை அழைக்கிறது. இன்று நாம் வாசிக்கக்கேட்கும் இறைச் செய்திகளில் ஆண்டவரின் பிறப்பிடம் நமக்கு முன்னுணர்த்தப்படுவது குறிப்பிடப்படுகிறது. உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்து விட்டது என்னும் மிக மிக முக்கியமான செய்தியினை இன்றைய இறைவார்த்தைகள் வழியாக இறைவன் வெளிப்படுத்துகின்றார். எனவே புதுவாழ்வு அளிக்க வரும் கிறிஸ்து பிறப்பில் மகிழ
1) என்னை மீட்கத்தான இயேசு வந்தார் என உணர்ந்து வாழ்வோம்
2) இறைத்திருவுளம் எதுவென திருநூல், மறையுரைகள், விவிலியக் கல்வி வழி அறிந்து செயல்படுவோம்.
3) இயன்றவரை மீட்புச் செய்தியை அனைத்து நிலையினருக்கும் அறிக்கையிட முயல்வோம்.
கிறிஸ்துவை நம் உள்ளத்தில் பிறக்கச் செய்து அவரோடு இணைந்து உலகோருக்காக நம்மை இழந்து அவரோடு புதுவாழ்வுக்காய் புதுப்பிறப்படைவோம்.
எனவே, கடவுளின் அன்பைப் பெற்று இறைமக்களாக அழைக்கப்பட்டுள்ள நாம் அனைவரும், இறைவனுடைய திருவுளத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு, இறைவனின் பொறுமைக்கெதிராகச் செயற்படாது, மனமாற்றம் பெற்று புதிய சமுதாயமாக வாழ வரம் கேட்டுத் தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
இதோ கன்னிப் பெண் கருத்தாங்குவார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 7:10-14
அந்நாள்களில். ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது: உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்: அது கீழேபாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்; என்றார். அதற்கு ஆகாசு, நான் கேட்கமாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன் என்றார். அதற்கு எசாயா: தாவீதின் குடும்பத்தாரே! நான்சொல்வதைக் கேளுங்கள்: மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ? ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்: அக்குழந்தைக்கு அவள் 'இம்மானுவேல்' என்று பெயரிடுவார்..
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: ஆண்டவர் எழுந்தருள்வார்: மாட்சிமிகு மன்னர் இவரே.
திருப்பாடல்: 24:1-6
மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை: நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்: ஆறுகள்மீது அதை நிலை நாட்டினவரும் அவரே. பல்லவி:
ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்? கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்: பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர்: பல்லவி:
இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்: தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே:யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. பல்லவி:
இரண்டாம் வாசகம் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்து விட்டது. திருத்தூதர் பவுல் உரேமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1:1-7கடவுளின் அன்பைப் பெற்று இறைமக்களாக அழைக்கப்பட்டுள்ள உரோமை நகர மக்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனாக அழைப்புப் பெற்றவனும் கடவுளின் நற்செய்திப் பணிக்கென ஒதுக்கி வைக்கப்பட்டவனுமாகிய பவுல் எழுதுவது: நற்செய்தியைத் தருவதாகக் கடவுள் தம் இறைவாக்கினர் வழியாக ஏற்கெனவே திருமறை நூலில் வாக்களித்திருந்தார். இந்த நற்செய்தி அவருடைய மகனைப்பற்றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர்:தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் வல்லமையுள்ள இறைமகன். இவர் இறந்து உயிர்த்தெழுந்ததால் இந்த உண்மை நிலைநாட்டப்பட்டது. இவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. பிற இனத்தார் அனைவரும் இவர்மீது நம்பிக்கை கொண்டு இவருக்குக் கீழ்ப்படியுமாறு இவர் பெயர் விளங்க இவர் வழியாகவே நாங்கள் திருத்தூதுப்பணி செய்வதற்குரிய அருளைப் பெற்றுக்கொண்டோம். பிற இனத்தவராகிய நீங்களும் இயேசுகிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்க அழைப்புப் பெற்றிருக்கிறீர்கள். நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல்,அதாவது கடவுள் நம்முடன் இருக்கிறார் எனப் பெயரிடுவர் . அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:18-24
இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, யோசேப்பே,தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூயஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர்.ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்என்றார். இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர் என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பது பொருள். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. நிறைவு தருபவராம் இறைவா, அமைதியின் அரசராம் எங்கள் ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றி, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உலகிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடுப்பவர்களாக திகழ உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. பேருவகை அளிப்பவராம் இறைவா, உம் திருமகனின் பிறப்பு விழாவை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் உலக மக்கள் அனைவரும், தங்கள் மனமாற்றத்தின் வழியாக புதுவாழ்வு காணவும், பிறர் நலனுக்காக தங்களை அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி அடையவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. மீட்பு வழங்கும் நாயகனாம் இயேசுவே, எங்களைப் பாவத்திலிருந்தும், தீமைகள் அனைத்திலிருந்தும் விடுவிக்க வந்தீரே, உம்மைப் போற்றுகிறோம். உமது மீட்பு இந்த அருளின் காலத்தில் எம்மீது நிறைவாய் இறங்க எமக்கு அருள்தர வேண்டுமென்றும், இந்நாட்களிலே எமக்கு நீர் பல்வேறு விதமாக வெளிப்படுத்தும் உமது செய்தியையும், விருப்பத்தையும், சித்தத்தையும் நாம் சரியான விதத்திலே புரிந்துகொண்டு உம்மோடும், எம் உறவுகளோடும் ஒப்புரவாகி, மனமாற்றமடைந்து உமது விருப்பப்படி நடக்க வேண்டிய ஞானத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. நலம் நல்குபவராம் இறைவா, மனம் மற்றும் உடல்நலக் குறைபாடுகளால் துன்புறுவோரும், வறுமை, கடன் சுமை உள்ளிட்ட உலகு சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளோரும் வேதனை நீங்கி புது வாழ்வு காண அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. தோழமையின் நாயகனே எம் இறைவா! நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இவர்கள் உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும்: எமது பிள்ளைகள் இறையுறவிலும், ஒழுக்கத்திலும், ஞானத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கி உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
6. “ஒரு வார்த்தை மட்டும் சொல்லும் என் மகன் குணமடைவான்” தாயும் தந்தையுமானவரே!
உம் சந்நிதானத்தில் உம் பிள்ளைகளாகிய நாங்கள் பல்வேறு தேவைகள் நிறைவேற வேண்டி நிற்கிறோம் ஆண்டவரே. நாங்கள் எப்போதும் உம் அளவற்ற அன்பை சுவைக்கவும் அதனை பிறருக்கு அளிக்கவும் வேண்டிய தராள மனதை தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
7. தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்: தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்: என்ற தந்தையே! எம் இளைஞர்களை ஆன்மீகத்திலும் அருள்வாழ்விலும் உறுதிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
|
இன்றைய சிந்தனை
மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்சவேண்டாம் !
இன்று அன்னை மரியாவின் பிறப்பு விழா. அன்னையை வாழ்த்துவோம், அன்னையை நமக்குக் கொடையாகத் தந்த இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தின் இந்த வசனத்தை இன்று தியானிப்போமா? ஆண்டவரின் துhதர் யோசேப்புக்கு கனவில் தோன்றி வழங்கிய செய்தி: மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். அந்த நொடியே யோசேப்பின் உள்ளத்தில் வழிந்துகொண்டிருந்த தயக்கம், அச்சம் அனைத்தும் அகன்றிருக்கும். மகிழ்ச்சியுடன் மரியாவை அவர் ஏற்றுக்கொண்டார்.
ஆனால், இன்று கிறித்தவர்களிலே ஒரு பிரிவினர் அன்னை மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்சுகின்றனர். மேலும், அன்னையை ஏற்றுக்கொள்வோரையும் இகழ்கின்றனர். எத்துணை துயரமான ஒரு நிகழ்வு! யோசேப்புக்கு வானதுhதர் சொன்ன செய்தியையே இன்றும் நமக்கும், அன்னையை ஏற்றுக்கொள்ளத் தயங்கும் அனைவருக்கும் இறைவன் தருகிறார். அன்னையைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்வது என்றால் இன்றைய சூழலில் இரண்டு பொருள்தான்: ஒன்று அந்தத் தாயை நமது தாயாக ஏற்று, அன்பு செய்யவேண்டும். போற்றி மகிழ வேண்டும். இரண்டாவது, அந்தத் தாய் தருகின்ற செய்தியை, அதாவது இறைவார்த்தையின்படி வாழ வேண்டும், இறைத் திருவுளத்தின்படி வாழவேண்டும், செபமும் தவமும் செய்ய வேண்டும் ... போன்ற செய்திகளை நாம் ஏற்று அதன்படி வாழ வேண்டும். இதுவே அன்னைக்கு நாம் தரும் பிறந்தநாள் பரிசு.
மன்றாட்டு:
உமது அன்னையை எங்களுக்கும் தாயாகத் தந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நன்றி கூறுகிறோம். மரியாவை தாயாக ஏற்க மறுக்கும் அனைவருக்காகவும் நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம். அவரைத் தாயாக ஏற்று மகிழும் நாங்கள், அந்தத் தாயின் மனம் குளிரும்படி, உம் வார்த்தைகளின்படி வாழ அருள்தாரும். ஆமென்.
|