திருவழிபாடு ஆண்டு - A 2017-04-23
(இன்றைய வாசகங்கள்:
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2:42-47,திருப்பாடல் 118:2-4, 13-15, 22-24,திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-9,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-31)
திருப்பலி முன்னுரை
ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்!
ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.
ஆண்டவரே இறைவன். அவர் நம்மீது ஒளிர்ந்து ள்ளார்.
இறை இயேசுவில் அன்புமிக்க சகோதர, சகோதரிகளே! முதலும் முடிவும் , என்றென் றும் வாழ்பவருமான இறைத் தந்தையின் திரு நாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி அன்போடு பாஸ்க்காக் கால இரண்டாம் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வரவேற்கின்றோம்.
இறைஇரக்க ஞாயிறு என்றும் இன்று அழைக்கப்படுகின்றது.
பேதுருவின் நிழல் பட்டாலேயே குணம் பெற்றார்கள் என்று லூக்கா பதிவு செய்துள்ளார். அதே வேளையில் தோமாவின் விருப்பத்தை புரிந்து இரக்கத்துடனே அவரிடம் காயங்களை காட்டி நம்ப அழைக்கின்றார். துன்பங்கள் துயரங்கள் வழி நம்முடைய நம்பிக்கையை உறதிப்படுத்திட முடியும் என்பதனை உணர்த்துகின்றார். குணம் பெற விரும்பியும், வாழ்விலே நாம் படும் துயரங்கள் நம்மை நம்பிக்கையிலே வளர்த்திட விழையும் என்று நம்பியும் பலியிலே பங்கேற்று பயன்பெறுவோம்.
முதல் வாசகம்
ஒவ்வொரு நாளும் அவர்கள் ஒரே மனத்தோடு கோவிலில் தவறாது கூடிவந்தார்கள்;
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2:42-47
அக்காலத்தில் திருமுழுக்குப் பெற்றவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள். மக்கள் அனைவரிடமும் அச்சம் நிலவியது. திருத்தூதர் வழியாகப் பல அருஞ் செயல்களும் அடையாளங்களும் நிகழ்ந்தன. நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒன்றாய் இருந்தனர்; எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர். நிலபுலங்களும் பிற உடைமைகளும் உடையோர் அவற்றை விற்று, அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கு ஏற்பப் பகிர்ந்தளித்தனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் ஒரே மனத்தோடு கோவிலில் தவறாது கூடிவந்தார்கள்; பேருவகையோடும் எளிய உள்ளத்தோடும் வீடுகள் தோறும் அப்பத்தைப் பிட்டு, உணவைப் பகிர்ந்து உண்டு வந்தார்கள். அவர்கள் கடவுளைப் போற்றிவந்தார்கள்; எல்லா மக்களுடைய நல்லெண்ணத்தையும் பெற்றிருந்தார்கள்; ஆண்டவரும் தாம் மீட்டுக் கொண்டவர்களை நாள்தோறும் அவர்களோடு சேர்த்துக்கொண்டேயிருந்தார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
திருப்பாடல் 118:2-4, 13-15, 22-24
2 `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!
3 `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக!
4 `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! -பல்லவி
13 அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்; ஆனால், ஆண்டவர் எனக்குத் துணை நின்றார்.
14 ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே.
15 நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. -பல்லவி
22 கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!
23 ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!
24 ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். -பல்லவி
இரண்டாம் வாசகம் இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருறவேண்டியிருப்பினும் அந்நாளிலே பேருவகை கொள்வீர்கள். திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-9நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி! அவர் தம் பேரிரக்கத்தின்படி, இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப் பிறப்பு அளித்துள்ளார். இவ்வாறு குன்றா எதிர்நோக்குடன் நாம் வாழ்கிறோம். அழியாத, மாசற்ற, ஒழியாத உரிமைப் பேறும் உங்களுக்கென விண்ணுலகில் வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காகக் கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள். இம்மீட்பு இறுதிக் காலத்தில் வெளிப்பட ஆயத்தமாய் உள்ளது. இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருறவேண்டியிருப்பினும் அந்நாளிலே பேருவகை கொள்வீர்கள். அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது அந்நம்பிக்கை உங்களுக்குப் புகழும் மாண்பும் பெருமையும் தருவதாய் விளங்கும். நீங்கள் அவரைப் பார்த்ததில்லை; எனினும் அவர்மீது அன்பு செலுத்துகிறீர்கள். இப்பொழுதும் நீங்கள் அவரைக் கண்டதில்லை; எனினும் நம்பிக்கை கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்கிறீர்கள். இவ்வாறு உங்கள் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பையும் பெறுகிறீர்கள். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்,'' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-31
அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக!'' என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லியபின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்'' என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள்மேல் ஊதி, ``தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா'' என்றார். பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், ``ஆண்டவரைக் கண்டோம்'' என்றார்கள். தோமா அவர்களிடம், ``அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்'' என்றார். எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக!'' என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், ``இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்'' என்றார். தோமா அவரைப் பார்த்து, ``நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!'' என்றார். இயேசு அவரிடம், ``நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்'' என்றார். வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. ஒன்று கூடி வாழ எம்மை அழைக்கும் அன்பு இறைவா! திருத்தூதர்கள் வழியாக செயலாற்றுபவர் இயேசு. திருத்தூதர்கள் வெறும் கருவிகள் தாம். வாழையடி வாழையாக இன்று வரை தொடரும் இந்த திருத்தூதர் மரபில், திருத்தந்தை, ஆயர்கள் மற்றும் அவர்களின் உடன் பணியாளர்கள் அருள்பணியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டியது இதுதான். இவர்கள் தாங்களாக எதையும் செய்வதில்லை. இவர்கள் வழியாக செயலாற்றுபவர் இறைவனே. இவர்கள் இறைவனின் கையில் உள்ள கருவிகள் மட்டுமே. இதனை உணர்ந்து உம் திருஅவையை சிநப்புடன் வழிநடத்த வேண்டிய வரங்களைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் அதிகாரமுடையவரான தந்தையே இறைவா! எம்முடைய விசுவாச வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ள அடையாளங்களையும், அற்புதங்களையும் தேடியலையாது, உம்முடைய வாக்குறுதிகள் நிறைவேறும் என் பதை உணர்ந்து காத்திருந்து செயற்படும் மனவுறுதியை எமக்குத் தர வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. காணமால் நம்புவோர் பேறுபெற்றோர் என்று ஆசீர் வழங்கிய எங்கள் இறைவா! இயேசுவில் நம்பிக்கை கொண்டு கூடிவருதலால் நாங்கள் எங்கள் நம்பிக்கையில் நிலைத்திருப்பதற்கு உதவி செய்ததோடு, நம்பிக்கை குன்றியவர்களுக்கு துணிவையும் தந்து எங்களின் குடும்பம், பின்புலம், சமூக அந்தஸ்து, வேலை போன்றவற்றில் வேறுபட்டிருந்தாலும், இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கை ஒருமனத்தோடு இவர்கள் வாழ வழிசெய்ய வேண்டிய வரங்களை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா! எங்களை பராமரித்து பாதுகாத்த எம் பெரியவர்கள் இன்று ஆதரவின்றி, அனாதைகளாக்கப்பட்டு, தெரு ஒரங்களிலும், பேருந்து நிலையங்களிலும் முதியோர் இல்லங்களிலும் தனித்து விடப்பட்டு, அவர்கள் படும் வேதனைகள் தொடர் நிகழ்வாகவே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. எனவே அவர்கள் உம் இறை இரக்கத்தினால், பாதுகாப்புடன் வாழ, இத்தலைமுறையினர் பெரியவர்கள் மேன்மையை உணர்ந்து அவர்களை பாதுகாக்க தேவையான அருளை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. உயிர்ப்பின் நாயகராம் இறைவா, உமது அன்பில் ஒரே குடும்பமாக ஒன்றித்து வாழும் எங்கள் பங்குத்தந்தை, அருட் சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், உம் திருமகனது சிலுவை மரணம், உயிர்ப்பு ஆகியவற்றின் மேன்மையை உணர்ந்து, கிறிஸ்துவின் உண்மையுள்ள சாட்சிகளாக வாழ வரம் தர வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
|