முதலாவது திருவழிபாடு ஆண்டு பாஸ்கா காலம் 4வது வாரம் வியாழக்கிழமை 2017-05-11
முதல் வாசகம்
கடவுள் தாவீது வழிமரபிலிருந்தே இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 13-25
சகோதரர் சகோதரிகளே, பவுலும் அவரோடு இருந்தவர்களும் பாப்போவிலிருந்து கப்பலேறி, பம்பிலியாவிலுள்ள பெருகை நகருக்கு வந்தார்கள். அங்கே யோவான் அவர்களைவிட்டு அகன்று எருசலேமுக்குத் திரும்பினார். அவர்கள் பெருகையிலிருந்து புறப்பட்டுச் சென்று பிசிதியாவிலுள்ள அந்தி யோக்கியாவை அடைந்தார்கள். ஓய்வுநாளன்று அவர்கள் தொழுகைக் கூடத்திற்குச் சென்று அங்கு அமர்ந்திருந்தார்கள்.
திருச்சட்டமும் இறைவாக்கினர் நூல்களும் வாசித்து முடிந்தபின் தொழுகைக்கூடத் தலைவர்கள் அவர்களிடம் ஆள் அனுப்பி, ``சகோதரரே, உங்களுள் யாராவது மக்களுக்கு அறிவுரை கூறுவதாயிருந்தால் கூறலாம்'' என்று கேட்டுக்கொண்டார்கள்.
அப்போது பவுல் எழுந்து கையால் சைகை காட்டிவிட்டுக் கூறியது: ``இஸ்ரயேல் மக்களே, கடவுளுக்கு அஞ்சுவோரே, கேளுங்கள். இந்த இஸ்ரயேல் மக்களின் கடவுள் நம்முடைய மூதாதையரைத் தேர்ந்தெடுத்தார்; அவர்கள் எகிப்து நாட்டில் அன்னியர்களாகத் தங்கியிருந்தபோது அவர்களை ஒரு பெரிய மக்களினமாக்கினார்.
பின்பு அவர் தம் தோள்வலிமையைக் காட்டி அவர்களை அந்த நாட்டைவிட்டு வெளியே அழைத்துக்கொண்டு வந்தார்; நாற்பது ஆண்டு காலமாய்ப் பாலைநிலத்தில் அவர்களிடம் மிகுந்த பொறுமை காட்டினார். அவர் கானான் நாட்டின்மீது ஏழு மக்களினங்களை அழித்து அவர்கள் நாட்டை இவர்களுக்கு ஏறக்குறைய நானூற்றைம்பது ஆண்டுகள் உரிமைச் சொத்தாக அளித்தார்; அதன்பின்பு இறைவாக்கினர் சாமுவேலின் காலம் வரை அவர்களுக்கு நீதித் தலைவர்களை அளித்தார்.
பின்பு அவர்கள் தங்களுக்கு ஓர் அரசர் வேண்டும் என்று கேட்டார்கள். கடவுள் கீசு என்பவரின் மகனான சவுல் என்பவரை அவர்களுக்கு அரசராகக் கொடுத்தார். பென்யமின் குலத்தினராகிய அவர் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார்.
பின்பு கடவுள் அவரை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்; அவரைக் குறித்து `ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்; என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்' என்று சான்று பகர்ந்தார். தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரயேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார்.
அவருடைய வருகைக்கு முன்பே யோவான், `மனம் மாறி திருமுழுக்குப் பெறுங்கள்' என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார்.
யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில், `நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார்; அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதி இல்லை' என்று கூறினார்.''
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
: ஆண்டவரே, உமது பேரன்பை என்றென்றும் நான் அறிவிப்பேன்.
திருப்பாடல்கள் 89:1-2,5-6,15,16
1 கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! 2 அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். பல்லவி
4 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். பல்லவி
5 கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! 7 கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு கிறிஸ்துவே, நீரே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; நீர் எம்மீது அன்புகூர்ந்து உமது இரத்தத்தினால் பாவங்களிலிருந்து எங்களை விடுவித்தீர் அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 16-20
அக்காலத்தில் சீடர்களின் பாதங்களைக் கழுவியபின் இயேசு அவர்களுக்குக் கூறியது: ``பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல; தூது அனுப்பப் பட்டவரும் அவரை அனுப்பியவரைவிடப் பெரியவர் அல்ல என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
இவற்றை நீங்கள் அறிந்து அதன்படி நடப்பீர்கள் என்றால் நீங்கள் பேறுபெற்றவர்கள். உங்கள் அனைவரையும்பற்றி நான் பேசவில்லை. நான் தேர்ந்து கொண்டவர்கள் யாரென எனக்குத் தெரியும்.
எனினும், ``என்னோடு உண்பவனே என்மேல் பாய்ந்தான்'' என்னும் மறைநூல் வாக்கு நிறைவேறியாக வேண்டும்.
அது நிறைவேறும்போது, `இருக்கிறவர் நானே' என்று நீங்கள் நம்புமாறு இப்போதே, அது நிறைவேறுமுன்பே, அதுபற்றி உங்களுக்குச் சொல்லி வைக்கிறேன். நான் அனுப்புகிறவரை ஏற்றுக்கொள்பவர் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.
என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''இயேசு, 'பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல; தூது அனுப்பப்பட்டவரும் அவரை அனுப்பியவரைவிடப்
பெரியவர் அல்ல என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்'' (யோவான் 13:16)
இயேசு சீடர்களின் காலடிகளைக் கழுவுகிறார். குரு எனவும் ஆசிரியர் எனவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இயேசு தம்மைப் பின்தொடர்ந்த சீடர்களின் காலடிகளைக் கழுவியது அவர்களுக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். எனவேதான் பேதுரு இயேசுவின் செயலின் பொருள் தெரியாமல் குழப்படைகிறார்; ''ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?'' எனக் கேட்கிறார் (யோவா 13:6). தம் சீடர்களின் காலடிகளைக் கழுவியது வழியாக இயேசு ஓர் ஆழ்ந்த போதனையை வழங்குகிறார். அதாவது அவருடைய சீடர்களாக இருக்க விரும்புவோர் ''ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவ வேண்டும்'' (காண்க: யோவா 13:14). ஏனென்றால் இயேசுவே தம் சீடர்களுக்கு முன்மாதிரி வழங்கியுள்ளார். அவர் கடவுளின் அதிகாரத்தோடு இவ்வுலகிற்கு வந்தார், ஆனால் மக்களுக்குப் பணிபுரிந்தார். சீடர்களும் அவ்வாறே பணிமனப்பான்மை கொண்டு விளங்க வேண்டும்.
இயேசுவை அனுப்பியவர் அவர் தந்தை என அழைத்த கடவுள். ஆனால் இயேசு சீடர்களை அனுப்பினார். எனவே சீடர்கள் பெற்ற பணிப்பொறுப்பு தந்தையிடமிருந்து இயேசு வழியாக அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதுதான். இவ்வாறு அனுப்பப்பட்டவர்கள் தம்மை அனுப்பியரை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட செய்தியை மக்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். இவ்வாறு நாம் செயல்பட அழைக்கப்படுகிறோம். இயேசுவின் சீடராக நாம் வாழ வேண்டும் என்றால் நம்மிடம் இயேசுவின் மன நிலை துலங்க வேண்டும். ஏனென்றால் இயேசு புரிந்த செயல்கள் நாம் கடைப்பிடித்து ஒழுக வேண்டிய வாழ்க்கை முறையை நமக்குப் படம்பிடித்துக் காட்டியுள்ளன. இவ்வாறு நாமும் இயேசுவைப் போலப் பணி செய்கின்ற மன நிலையோடு செயல்பட அழைக்கப்படுகிறோம்.
மன்றாட்டு:
இறைவா, உம் திருமகன் எங்களிடம் ஒப்படைத்த நற்செய்தியை நாங்கள் துணிவோடு அறிவித்திட அருள்தாரும்.
|