யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்கா காலம் 5வது வாரம் சனிக்கிழமை
2017-05-20




முதல் வாசகம்

திருச்சபைகள் நம்பிக்கையில் உறுதி பெற்று நாளுக்கு நாள் எண்ணிக்கையில் பெருகிவந்தன.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16:1-10

1 பின்பு பவுல் தெருபை, லிஸ்திரா ஆகிய நகர்களை வந்தடைந்தார். லிஸ்திராவில் திமொத்தேயு என்னும் பெயருள்ள சீடர் ஒருவர் இருந்தார். அவருடைய தாய் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட ஒரு யூதப்பெண். தந்தையோ கிரேக்கர். 2 திமோத்தேயு லிஸ்திராவிலும், இக்கோனியாவிலுமுள்ள சகோதரர் சகோதரிகளிடையே நற்சான்று பெற்றவர். 3 பவுல் அவரைத் தம்முடன் கூட்டிச்செல்ல விரும்பினார். அவ்விடங்களிலுள்ள யூதரின் பொருட்டு அவருக்கு விருத்தசேதனம் செய்வித்தார். ஏனெனில் அனைவரும் அவருடைய தந்தை கிரேக்கர் என்று அறிந்திருந்தனர். 4 அவர்கள் நகர் நகராகச் சென்றபோது எருசலேமிலுள்ள மூப்பரும் திருத்தூதரும் செய்த தீர்மானங்களை அவர்களிடம் கொடுத்துக் கடைப்பிடிக்குமாறு கூறினார். 5 இவ்வாறு திருச்சபைகள் நம்பிக்கையில் உறுதி பெற்று நாளுக்கு நாள் எண்ணிக்கையில் பெருகிவந்தன. 6 பின்பு ஆசியாவில் இறைவார்த்தையை அறிவிக்காதவாறு தூய ஆவியார் தடுக்கவே, அவர்கள் பிரிகிய, கலாத்தியப் பகுதிகளைக் கடந்து சென்றனர். 7 அவர்கள் மீசியா அருகே வந்து பித்தினியாவுக்குச் செல்ல முயன்றபோது இயேசுவின் ஆவியார் அவர்களை அங்குப் போகவிடவில்லை. 8 எனவே அவாகள் மீசியா வழியாகச் சென்று துரொவா நகரை அடைந்தனர். 9 பவுல் அங்கு இரவில் ஒரு காட்சி கண்டார். அதில் மாசிதோனியர் ஒருவர் வந்து நின்று, "நீர் மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்" என்று வேண்டினார். 10 இக்காட்சியைப் பவுல் கண்டதும், நாங்கள் மாசிதோனியருக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்துள்ளார் என எண்ணி, அங்குச் செல்ல வழி தேடினோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
திருப்பாடல்கள் 100:1-3,5

1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! 2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்!பல்லவி

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!பல்லவி

5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்என்கிறார் ஆண்டவர். . அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15:18-21

18 "உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்கு முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். 19 நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் தனக்குச் சொந்தமானவர்கள் என்னும் முறையில் உலகு உங்களிடம் அன்பு செலுத்தியிருக்கும். நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது. 20 பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள். என் வார்த்தையைக் கடைப்பிடித்திருந்தால் தானே உங்கள் வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்! 21 என் பெயரின் பொருட்டு உங்களை இப்படியெல்லாம் நடத்துவார்கள். ஏனெனில் என்னை அனுப்பியவரை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன்... உங்களை நான் நண்பர்கள் என்றேன்' என்றார்'' (யோவான் 15:15)

இயேசு கலிலேயாவில் இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்தபோது பலரைத் தம் சீடராகச் சேர்த்துக்கொண்டார். அவரே விரும்பி தம் சீடரை அழைத்தார். அவர்கள் தம் பணியைத் தொடர வேண்டும் எனவும் இயேசு பணித்தார். எனவே, ஒருவிதத்தில் இயேசுவின் சீடர்கள் எல்லாரும் பணியாளர்களே. ஆனால் இயேசு தம் சீடர்களைப் பணியாளர் என அழைக்காமல் ''நண்பர்கள்'' என அழைக்கிறார். இதில் ஆழ்ந்த பொருள் அடங்கியிருக்கிறது. அதாவது, இயேசுவை அவருடைய சீடர்கள் ஒரு சிறந்த ஆசிரியராகப் பார்த்தார்கள்; ஓர் இறைவாக்கினராகக் கருதினார்கள்; அவருடைய தலைமையை ஏற்றுக்கொண்டார்கள். அக்காலத்தில் யூத சமயத்தில் வழக்கிலிருந்தவாறே இயேசுவைப் பற்றிச் சீடர்கள் சிந்தித்தார்கள். ஆனால் இயேசு அவர்களுடைய சிந்தனையைப் படிப்படியாக மாற்றினார். அவர்கள் இயேசுவை மெசியாவாகப் பார்த்தபோது இயேசு அவர்களுக்குத் தாம் ஒரு துன்புறும் மெசியாவாக வந்ததாக விளக்கினார். இவ்வுலக அதிகாரத்தோடும் ஆட்சித் தோரணையோடும் அவர் வரவில்லை. மாறாக, அவருடைய அதிகாரம் பணிசெய்வதில் அடங்கியது என இயேசு எடுத்துரைத்தார்.

இவ்வாறு தம்மையே பணியாளராகக் கண்ட இயேசு தம் சீடர்களைத் தம் ''நண்பர்கள்'' என அழைத்தது ஏன்? இயேசுவுக்கும் அவர்தம் சீடர்களுக்கும் இடையே நிலவுகின்ற உறவு குரு-சீடன் என்னும் உறவைவிட ஆழமானது. அந்த உறவு அன்பின் அடிப்படையில் உருவாகும் ஒன்று. நண்பர்களுக்கிடையே நெருக்கமான உறவு நிலவும். ஒருவர் மற்றவருடைய சிந்தனைகளையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்வர்; இன்பத்திலும் துன்பத்திலும் பங்கேற்பர். தம்மிடம் இருப்பதை மகிழ்வோடு பகிர்ந்துகொள்வர். இந்த உறவைத்தான் இயேசு தம் சீடர்களுக்கு வாக்களிக்கிறார். சீடர்கள் இயேசுவின் அன்பை அருகிலிருந்து துய்த்து உணர முடிந்தது. அவர்கள் எப்போதுமே இயேசுவுக்குப் பிரமாணிக்கமாக இருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் இயேசுவைப் பொறுத்தமட்டில் அவருடைய அன்பு ஒருநாளுமே குறைபடவில்லை. மன்னித்து ஏற்கும் பண்பும் நட்பின் அடையாளம்தானே. இயேசு தம் சீடர்கள் தவறியபோதெல்லாம் அவர்களை மீண்டும் அரவணைத்திட முன்வந்தார். ஆக, நமக்கும் இயேசு உண்மையான அன்பராக, நண்பராக இருக்கவே விரும்புகிறார். நாம் அவருடைய நட்பை ஒரு கொடையாக ஏற்றிட வேண்டும். அவருடைய அன்பைப் பெற நாம் தகுதியவற்றவர்களாக இருந்தாலும் அந்த அன்பு நம்மைத் தேடி வந்துகொண்டே இருக்கும். தேடி வரும் கடவுளை நாம் நாடிச் செல்லும்போது அங்கே நட்பும் அன்பும் உருவாகும். நம் அன்புக் கடவுளின் பாசக் கயிற்றினால் நாம் பிணைக்கப்படுவோம். அவருடைய பற்றினை நாம் உறுதியாகப் பற்றிக்கொள்வோம். இயேசுவின் நட்பைத் துய்க்கின்ற நாம் அந்த நட்புறவைப் பிறரோடும் பகிர்ந்திட முன்வருவோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்பில் நாங்கள் நிலைத்திருக்க அருள்தாரும்.