யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்கா காலம் 7வது வாரம் வெள்ளிக்கிழமை
2017-06-02




முதல் வாசகம்

பவுல், பேரரசரே விசாரித்துத் தீர்ப்பு அளிக்கும் வரை தம்மைக் காவலில் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 25;13-21

13 சில நாள்களுக்குப் பின் அகிரிப்பா அரசனும், பெர்னிக்கியுவும் பெஸ்தைச் சந்திக்கச் செசரியா வந்தனர். 14 அவர்கள் பல நாள்கள் அங்குத் தங்கியிருந்தபோது பெஸ்து பவுலுக்கு எதிரான வழக்கை அரசனிடம் எடுத்துக் கூறினார்; "பெலிக்சு கைதியாக விட்டுச் சென்ற ஒரு மனிதர் இங்கு இருக்கிறார். 15 நான் எருசலேமிலிருந்தபோது தலைமைக் குருக்களும், யூதரின் மூப்பர்களும் அவரைப்பற்றிய வழக்கை என்னிடம் தெரிவித்து அவருக்கு எதிராகத் தீர்ப்பளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். 16 நான் அவர்களைப் பார்த்து, "குற்றம் சாட்டப்பட்டவர் எவரும் குற்றம் சாட்டியவர்க்கு முன் நின்று தம் மீது சுமத்தப்பட்ட குற்றத்தைப் பற்றி விளக்குவதற்கான வாய்பைப் பெற வேண்டும். அதற்குமுன் அவருக்குத் தீர்ப்பு அளிப்பது உரோமையரின் வழக்கமல்ல" என்று கூறினேன். 17 எனவே அவர்கள் இங்கே வந்தபோது, சற்றும் காலம் தாழ்த்தாமல் மறுநாளிலேயே நான் நடுவர் இருக்கையில் அமர்ந்து அவரை என்னிடம் கூட்டிக்கொண்டு வருமாறு ஆணை பிறப்பித்தேன். 18 குற்றம் சுமத்தியவர்கள் எழுந்து பேசியபோது நான் நினைத்திருந்த கொடிய குற்றம் எதுவும் அவர்மீது சுமத்தவில்லை. 19 அவர்கள் அவருக்கு எதிராகச் சொன்னதெல்லாம் தங்கள் சமயத்திலுள்ள சில கருத்து வேறுபாடுகளாகத்தான் இருந்தன. இறந்துபோன இயேசு என்னும் ஒருவரைப் பற்றியும் அவர்கள் பேசினார்கள். இந்த இயேசு உயிரோடு இருப்பதாக பவுல் சாதித்தார். 20 இக்கருத்துச்சிக்கல்களைப் பற்றிக் கேட்டதும் நான் குழம்பிப்போய், "நீர் எருசலேமுக்கு வருகிறீரா? அங்கு இவை பற்றி விசாரிக்கப்பட விரும்பகிறீரா?" எனக் கேட்டேன். 21 பவுல், பேரரசரே விசாரித்துத் தீர்ப்பு அளிக்கும் வரை தம்மைக் காவலில் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆதலால் இவரைச் சீசரிடம் அனுப்பும்வரை காவலில் வைக்குமாறு ஆணை பிறப்பித்தேன்."

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு
திருப்பாடல்கள் 103;1-2,11-12,19-20

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவுபோன்று உயர்ந்தது. மேற்கினின்று கிழக்கு எத்துணைத்; தொலைவிலுள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார் பல்லவி .

19 ஆண்டவர் தமது அரியணையை விண்ணகத்தில் நிலைநிறுத்தியுள்ளார்; அவரது அரசு அனைத்தின்மீதும் பரவியுள்ளது.20 அவர்தம் சொற்கேட்டு நடக்கும் வலிமைமிக்கோரே! ஆண்டவரின் தூதர்களே! அவரைப் போற்றுங்கள்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு சீமோன் பேதுருவிடம், "யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21;15-19

15 அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், "யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?" என்று கேட்டார். அவர் இயேசுவிடம், "ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!" என்றார். இயேசு அவரிடம், "என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்" என்றார். 16 இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், "யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?" என்று கேட்டார். அவர் இயேசுவிடம், "ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!" என்றார். இயேசு அவரிடம், "என் ஆடுகளை மேய்" என்றார். 17 மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், "யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?" என்று கேட்டார். "உனக்கு என்னிடம் அன்பு உண்டா?" என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், "ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?"" என்றார். இயேசு அவரிடம், ""என் ஆடுகளைப் பேணிவளர். 18 "நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன் " 19 பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்ன பின் பேதுருவிடம், "என்னைப் பின் தொடர்" என்றார்..

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு அவர்களிடம், 'பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?' என்று கேட்டார். அதற்கு அவர்கள், 'இல்லை' என்றார்கள். அவர், 'படகின் வலப்பக்கத்தில் வீசுங்கள்; மீன் கிடைக்கும்' என்று அவர்களிடம் கூறினார்'' (யோவான் 21:5-6)

தங்கள் குருவும் ஆசிரியருமாக இருந்த இயேசுவை யூத சமயத்தலைவர்களும் உரோமை அதிகாரிகளும் சேர்ந்து சிலுவையில் அறைந்து கொன்றுபோட்டதை அறிந்த இயேசுவின் சீடர்களை மிகுந்த அச்சம் மேற்கொண்டது. அவர்கள் எதிர்பார்த்த வல்லமை மிக்க மெசியாவாக இயேசு தம்மைக் காட்டிக்கொள்ளவில்லை என்பது அவர்களுக்கு ஒரு பெரிய வருத்தமாக இருந்திருக்கவேண்டும். அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக, எருசலேம் நகரை விட்டுத் தங்கள் சொந்த இடமாகிய கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றார்கள். தங்கள் முன்னாளைய தொழிலாகிய மீன்பிடித்தலைத் தொடர்ந்தார்கள். இவ்வாறு தங்கள் தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது இயேசு அவர்களுக்குத் தோன்றுகிறார். இங்கேயும் சீடர்கள் இயேசுவை உடனடியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ஏதோ ஒருவர் தங்களுக்கு மீன்பாடு எவ்வாறு இருந்தது எனக் கேட்டதாக அவர்கள் நினைத்தார்கள். இரவும் பகலும் வேலை செய்தும் அவர்களுக்கு ஒரு மீனும் அகப்படாத நிலையில், கரையில் நின்றுகொண்டிருந்த அன்னிய மனிதர் அவர்களுக்கு ஒரு உத்தி சொல்லிக்கொடுக்கிறார்: ''படகின் வலப்பக்கத்தில் வலைவீசுங்கள்; மீன் கிடைக்கும்'' என அவர் கூறியதை அவர்கள் கருத்தில் ஏற்று அவ்வாறே செய்கிறார்கள். யாரும் எதிர்பாராத விதத்தில் அவர்களுக்கு அதிசயமான விதத்தில் பெரும் மீன்பாடு கிடைக்கிறது. யோவான் நற்செய்தியில் ''அடையாளங்கள்'' பற்றிய குறிப்பு அடிக்கடி வருகிறது. அதுபோல இதையும் ஓர் அடையாளமாகக் காண்கிறார் ''இயேசுவின் அன்புச் சீடர்'' (காண்க: 2:11; 6:14; 9:16; 11:47; 21:7). அதாவது, இயேசு யார் என்பதை வெளிப்படுத்துகின்ற ஒரு தனிப்பட்ட பொருள்நிறைந்த அடையாளம் இங்கே குறிக்கப்படுகிறது.

இயேசுவை நாம் காண வேண்டும் என்றால் நமக்கு நம்பிக்கை தேவை. சாதாரண மனிதராக இயேசுவை நாம் பார்த்தால் அவருடைய போதனைகளும் சாதனைகளும் நம்மைக் கவர்ந்தாலும்கூட அவர் கடவுளின் மகனாக நம்மிடையே வந்து நமக்காகத் துன்புற்று இறந்து நமக்கு இறைவாழ்வில் பங்களித்துள்ளார் என்னும் உண்மையைக் கண்டுகொள்ள நாம் தவறிவிடுவோம். நாளெல்லாம் உழைத்து, இன்னல்களுக்கு நடுவிலேயும் வெற்றி காண இயலாமல் நாம் தவிக்கின்ற தருணங்கள் உண்டு. எவ்வளவுதான் முயன்றாலும் நம்மால் சாதிக்க இயலாத காரியங்களும் உண்டு. அவ்வேளைகளில் நாம் இயேசுவின் குரலுக்குச் செவிமடுக்க வேண்டும். கரையில் நின்றுகொண்டு அவர் நம்மை நோக்கி, 'படகின் வலப்பக்கத்தில் வலையை வீசுங்கள்'' என நமக்குக் கூறுகின்ற வேளைகளில் நாம் அவருடைய குரலைக் கேட்டு அதன்படி செயல்பட்டால் வெற்றி நமதாகும். ஏனென்றால் நன்மை செய்ய நாம் விழையும்போது கடவுளின் அருள்துணையோடு நாம் எதையும் சாதிக்கலாம்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனின் குரலுக்கு எப்போதும் செவிமடுக்க எங்களுக்கு அருள்தாரும்.