முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 21வது வாரம் செவ்வாய்க்கிழமை 2017-08-29
திருமுழுக்கு யோவானின் பாடுகள்
முதல் வாசகம்
உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்'' என்கிறார் ஆண்டவர்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 1: 17-19
அந்நாள்களில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது. ``நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. இல்லையேல், அவர்கள் முன் உன்னைக் கலக்கமுறச் செய்வேன். இதோ, இன்று நான் உன்னை நாடு முழுவதற்கும், அதாவது, யூதாவின் அரசர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதன் குருக்களுக்கும் நாட்டின் மக்களுக்கும் எதிராக அரண்சூழ் நகராகவும் இரும்புத் தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன். அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன் மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்'' என்கிறார் ஆண்டவர்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும்.
திருப்பாடல்கள் 71: 1-2. 3-4. 5-6. 15-,17
1 ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும். 2 உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக் கொள்ளும். பல்லவி
3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர். 4ய என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். பல்லவி
5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை. 6 பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். பல்லவி
15யb என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்; உம் அருட்செயல்களை என்னால் கணிக்க இயலாது. 17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனி வரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! யோவான் ஏரோதிடம், ``உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல'' எனச் சொல்லி வந்தார். அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 17-29
அக்காலத்தில் ஏரோது, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்தான்; அவள் பொருட்டு ஆள் அனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். ஏனெனில் யோவான் ஏரோதிடம், ``உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல'' எனச் சொல்லி வந்தார்.
அப்போது ஏரோதியா அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்; ஆனால் அவளால் இயலவில்லை. ஏனெனில் யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்துவந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான். ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது.
ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான். அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள்.
அரசன் அச்சிறுமியிடம், ``உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்'' என்றான். ``நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்'' என்றும் ஆணையிட்டுக் கூறினான்.
அவள் வெளியே சென்று, ``நான் என்ன கேட்கலாம்?'' என்று தன் தாயை வினவினாள். அவள், ``திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்'' என்றாள்.
உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, ``திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்'' என்று கேட்டாள்.
இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர் முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டு வருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டு வந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.
இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
"ஏரோது...ஆள் அனுப்பிச் சிறையில் இருந்த யோவானின்
தலையை வெட்டச் செய்தான்" (மத்தேயு 14:10)
திருமுழுக்கு யோவான் ஒரு தலைசிறந்த இறைவாக்கினர். கடவுளுடைய வார்த்தையை அறிவிப்பதில் அவருக்கு ஒருபோதுமே தயக்கம் இருந்ததில்லை. கடவுளின் ஆட்சி நெருங்கிவருகிறது என்னும் செய்தியை யோர்தான் நதிக்கரையில் மக்களுக்கு அறிவித்து, அவர்கள் மனம் திரும்பாவிட்டால் அழிந்தொழிவர் என அவர் முழக்கமிட்டதுண்டு. அதே துணிச்சலோடு அவர் ஏரோது மன்னனின் தவறான நடத்தையைச் சுட்டிக்காட்டி அவனைக் கண்டித்தார். ஏரோதுக்கு யோவானின் மட்டில் மதிப்பு இருந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால், அவனோ ஒரு கோழைபோல நடந்துகொள்கிறான். தன் உண்மையான நிலையை யோவான் தனக்கு உணர்த்திக் காட்டியபிறகும் ஏரோது அந்த உண்மையை ஏற்க முன்வரவில்லை. மாறாக, பிறர் தன்னைப் பற்றிக் குறைகூறுவார்களோ என நினைத்து, விவேகமற்ற முறையில் வாக்குக் கொடுத்துவிட்டு, அந்த வாக்கை மீற முடியாது எனவும் தவறாக நினைக்கிறான். எப்படியாயினும், உண்மைக்குச் செவிமடுத்து, உண்மையின் வழியில் நடக்கவும், யோவான் சுட்டிக்காட்டிய உண்மையை ஏற்றிடவும் ஏரோதுக்கு மனமில்லை. அவன் ஒளியைவிட இருளையே தெரிந்துகொள்கிறான்; எனவே, இருளின் வல்லமை மேலோங்கி, ஏரோது தன் உண்மையான மனச் சான்றை உதறி எறிந்துவிட்டுக் கொடூரமான கொலைச்செயலில் ஈடுபடுகிறான்.
உண்மை எப்போதும் இனிப்பதில்லை. கசப்பான உண்மையைக் கேட்க நாம் விரும்புவதில்லை. நமக்கு சாதகமானவற்றைப் பிறர் சொன்னால், அல்லது நம்மைப் புகழ்ந்துரைத்தால் நாம் மகிழ்கின்றோம். ஆனால், உண்மையாகவே நம்மிடம் இருக்கின்ற குறைகளை நம் நண்பர்கள் அல்லது நமது நலனை விரும்புவோர் நமக்குச் சுட்டிக்காட்டி நம்மைத் திருத்த முனையும்போது நாம் பல தடவைகளிலும் மகிழ்வதில்லை. மாறாக, சில சமயங்களில் நம்மில் பழிக்குப் பழி என்னும் மனநிலையே மேலோங்கிவிடுகிறது. மேலும், பிறர் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ எனத் தவறாக எண்ணிப் பிறருடைய குற்றத்தைச் சுட்டிக்காட்டி அவர்களை நல்வழிப்படுத்தவும் நாம் தயங்குகிறோம். யோவானிடம் துலங்கிய துணிச்சல் நம்மிடமும் துலங்க வேண்டும். அப்போது, உண்மையான இறைவாக்கினராக நாம் செயல்பட முடியும். நமது வாழ்வு கடவுளுக்கு உகந்ததாக இருக்கும்போது, நம்மைச் சூழ்ந்து நிகழ்கின்ற அநீதிகளைக் கண்டிக்கவும் நீதியான சமுதாயம் உருவாக நம்மையே அர்ப்பணிக்கவும் நாம் தயங்கமாட்டோம்.
மன்றாட்டு:
இறைவா, உண்மையால் நாங்கள் வழிநடத்தப்பட எங்களை முழுமையாக உம்மிடம் கையளிக்க அருள்தாரும்.
|