முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 27வது வாரம் சனிக்கிழமை 2017-10-07
திருச்செபமாலை அன்னை
முதல் வாசகம்
இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்;கொண்டிருந்தார்கள்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்1;12-14
12 பின்பு அவர்கள் ஒலிவமலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பினார்கள். இம்மலை எருசலேமுக்கு அருகில், ஓய்வுநாளில் செல்லக்கூடிய தொலையில் உள்ளது.
13 பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் திரும்பி வந்தபின் தாங்கள் தங்கியிருந்த மேல்மாடிக்குச் சென்றார்கள்.
14 அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்;கொண்டிருந்தார்கள்
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
"ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.
லூக்கா 1;47-55
47 "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.பல்லவி
49 ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்.50 அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.51 அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார்.பல்லவி
52 வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.53 பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.பல்லவி
54 மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவி;ல் கொண்டுள்ளார்;55 தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார் ".பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! , "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்1;26-38
26 ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.
27 அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.
28 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்றார்.
29 இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
30 வானதூதர் அவரைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.
31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.
32 அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.
33 அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார்.
34 அதற்கு மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்றார்.
35 வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.
36 உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம்.
37 ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார்.
38 பின்னர் மரியா, "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''வானதூதர் அவரைப் பார்த்து, 'மரியா, அஞ்சவேண்டாம்'
கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்'
அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்' என்றார்'' (லூக்கா 1'30-31)
மரியாவிடம் வந்த கபிரியேல் வானதூதர் கடவுளின் செய்தியை அவருக்கு எடுத்துரைக்கிறார். ஆனால் மரியாவுக்கோ ஒரே குழப்பமும் கலக்கமும்தான் மிஞ்சியது. மரியாவின் வழியாகப் பிறக்கவிருக்கும் குழந்தை கடவுளின் வல்லமையால் இவ்வுலகுக்கு வரும் என்ற செய்தி மரியாவுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், வானதூதர் மரியாவுக்குத் தெளிவு வழங்குகின்றார். மரியா கடவுளின் தனிப்பட்ட அன்புக்கு உரித்தானவர் என்றும், கடவுளின் அருள் அவரிடம் நிறைவாக உள்ளது என்றும் வானதூதர் உறுதிகூறுகின்றார். கடவுளின் அருள் நம் எல்லோருக்கும் கொடையாக வழங்கப்படுகிறது. ஆனால் மரியா கடவுளின் மீட்புத் திட்டத்தில் ஒரு சிறப்பிடம் வகிக்கிறார். அவர் கடவுளின் ஒரே மகனை இவ்வுலகிற்குப் பெற்று வழங்கினார். இப்பெரும் பேறு மரியாவுக்குக் கடவுள் வழங்கிய சிறப்புக் கொடை எனலாம். இதனால் மரியா இயேசுவின் தாய் மட்டுமல்ல, இயேசுவின் வழியாக அருள்நிலையில் கடவுளின் பிள்ளைகளாக மாறியிருக்கின்ற நமக்கும் அவர் தாயாகின்றார்.
மரியா ஈந்த மகன் மரியாவுக்கு மட்டும் உரியவரல்ல, அவர் உலகின் சொத்து. அவருடைய பெயரே இந்த ஆழ்ந்த பொருளை விளக்கிநிற்கின்றது. ''இயேசு'' என்னும் பெயருக்கு மீட்பர் என்பது பொருள். இயேசு நம்மை மீட்கின்றார் என்றால் நாம் ஏதோ அடிமைநிலையில் இருந்ததால் நமக்கு மீட்புத் தேவைப்பட்டது என்பதை நாம் உணரலாம். மனித வாழ்க்கை அனுபவமாகிய பாவமும் சாவும் நம்மை அடிமைப்படுத்திய நிலையில் இயேசு கொணர்ந்த மீட்பு நமக்கு ஒரு புதிய நிலையை வழங்குகிறது. நாம் பெறும் புதிய நிலை கடவுளின் அன்பில் நாம் நிலைத்திருப்பதைக் குறிக்கும். கடவுளோடு நமக்குள்ள நெருங்கிய உறவு நம்மை அவரோடு இறுகப் பிணைப்பதால் நாம் கடவுளின் வல்லமையை நம் வாழ்க்கையில் உணரமுடிகிறது. எவ்விதத் தயக்கமும் இன்றி நாம் கடவுளின் வழியில் நடந்தால் அவர் தரும் அருள் ஒருநாளும் குறைபடாது.
மன்றாட்டு:
இறைவா, எங்கள் வாழ்க்கையில் தோன்றுகின்ற அச்சங்களை அகற்றியருளும்.
|