கிறிஸ்து பிறப்புக்காலம் 2017-12-28
புனித மாசில்லாக் குழந்தைகள் - மறைச்சாட்சியர் விழா
முதல் வாசகம்
தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 5 - 2: 2
சகோதரர் சகோதரிகளே, நாங்கள் இயேசு கிறிஸ்துவிடமிருந்து கேட்டறிந்து உங்களுக்கு அறிவிக்கும் செய்தி இதுவே: கடவுள் ஒளியாய் இருக்கிறார்; அவரிடம் இருள் என்பதே இல்லை. நாம் இருளில் நடந்து கொண்டு, அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம்; உண்மைக்கேற்ப வாழாதவர் ஆவோம். மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும் அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும். ஆனால் பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோம் என்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர், நேர்மையுள்ளவர். நாம் பாவம் செய்யவில்லை என்போமென்றால் அவரைப் பொய்யர் ஆக்குவோம். அவருடைய வார்த்தை நம்மிடம் இல்லை என்றாகும். என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்; ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து. நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவை போல் ஆனோம்.
திருப்பாடல்: 124: 2-3. 4-5. 7b-8 (பல்லவி: 7ய)
2 ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது, 3 அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். பல்லவி
4 அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்; பெருவெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்; 5 கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும். பல்லவி
7 கண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம். 8 ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே! பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம், ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்; மறைச்சாட்சியரின் வெண்குழுவும் நிறைவாய் உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-18
ஞானிகள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, ``நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும் வரை அங்கேயே இரும். ஏனெனில் குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்'' என்றார். யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்; ஏரோது இறக்கும் வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, ``எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்'' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது. ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றம் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கு ஏற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான். அப்பொழுது ``ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; இராகேல் தம் குழந்தைகளுக்காக அழுது கொண்டிருக்கிறார்; ஆறுதல் பெற அவர் மறுக்கிறார்; ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை'' என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
குழந்தைகள் என் சாட்சிகள்
குழந்தைகள், இவர்கள்தான் இயேசுவின் அன்புக்குறியவர்கள். "குழந்தைகளை இயேசு தொடவேண்டும்" (லூக் 18 :15) "ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினார" ( லூக்10 :21) "பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் உம்மைப் புகழ ஏற்பாடு செய்தீர்"(மத் 21 :16). இயேசுவுக்காக இரத்தம் சிந்தி முதல்முதலில் மறை சாட்சியம் தந்தவர்களும் இக் குழந்தைகளே. இரண்டு வயது குழந்தைகள் தங்கள் உயிரைக் கொடுத்து இயேசுவைப் பாதுகாத்தனர். இன்றும் கொல்லப்படுகின்ற குழந்தைகள் ஒவ்வொன்றும் இயேசுவைப் பாதுகாக்கின்றது. உண்மை, நீதி, தூய்மை, இறைச்சார்பு இவைபோன்ற ஆண்டவனின் பண்புகளைப் பாதுகாக்கின்றனர். குழந்தைகளே அன்பு, எளிமை, அமைதி, மகிழ்ச்சி, நல்மனது இவைகளை இன்றும் உலகுக்கு அவ்வப்போது அறிமுகம் செய்கின்றனர், நினைவூட்டுகின்றனர்.
தன்னைப் பாதுகாக்க, தன் ஆட்சியை, பெருமையை தக்கவைக்க அப்பாவி குழந்தைகளைக் கொன்றான்;. இன்று நடக்கவில்லையா? தங்கள் இன்பத்துக்காக எத்தனை பிறக்கும் குழந்தைகள் கொல்லப்படுகின்றனர். பணத்திற்காக எத்தனை குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். குழந்தை தொழிலாளர்கள் என்னும் போர்வைக்குள் நசுக்கப்படும் குழந்தைகள் எத்தனை? இன்றைய ஏரோதுக்கள் வாழ அநியாயமாகக் கொல்லப்படும் இயேசுவின் சாட்சிகள். நீ இயேசுவாக இருந்தால் எனக்காக எத்தனை குழந்தைகளையும் இந்த சமுதாயம் தயார்.ஆனால் ஏரோதுகளுக்காக கருவில் உள்ள குழந்தையையும் இழக்க முடியாது. இறைவன் இக்குழந்தைகளுக்கா போராடி இத்தகைய ஏரோதுக்களை அழிப்பார்.
மன்றாட்டு:
அனைத்துக் குடும்பங்களின் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் குடும்பங்களை ஆசிர்வதியும். எல்லாக் குடும்பங்களும் இயேசு, சூசை, மரியா போன்ற திருக்குடும்பங்களாக வாழ அருள்தாரும். எங்கள் குடும்பங்களில் நாங்கள் இறைநம்பிக்கை, நற்பணி, நல்லுறவு, நற்செய்தி அறிவிப்பு என்னும் நான்கு தளங்களிலும் நிறைவாக வாழ்வோமாக. ஆமென்.
|