திருவழிபாடு ஆண்டு - B 2018-01-07
ஆண்டவரின் திருக்காட்சி விழா
(இன்றைய வாசகங்கள்:
ஏசாயா நூலிலிருந்து வாசகம் 60:1-6,திருப்பாடல்கள் 72:1-2, 7-8, 10-13,எபேசியர்க்கு எழுதிய நிருபத்தில் இருந்து வாசகம் 3:2-3,5-6,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2:1-12)
திருப்பலி முன்னுரை
இறைமகன் இயேசுவில் அன்புள்ள சகோதரர்களே சகோதரிகளே, அனைவருக்கும் திருக்காட்சிப் பெருவிழாவின் வாழ்த்துக்களைக்கூறி மகிழ்கிறேன். உலக மக்களை மீட்க இறைமகன் இயேசு மனிதனாகப் பிறந்து வந்ததை உலக மக்களுக்கு அறிவிக்க இறைவன் ஓர் அருமையான ஏற்பாட்டை ஏற்படுத்தியிருந்தார். அதைத்தான் திருக்காட்சிப் பெருவிழா எனக் கொண்டாடுகிறோம்.
உலகுக்கு மீட்பு என்ற ஒளி அறிவிக்கப்படுகிறது. அவ்வாறு இறைவாக்கினர் எசாயா நூல் 60: 1 இல் கூறும் அவ்வொளி இயேசுவே. மேலும் அவர் குறிப்பிடும் விடுதலை வாழ்வு இயேசுக் கிறிஸ்துவில்தான் உலகினருக்கு வழங்கப்பட உள்ளது. இவ்வாறு இறைவனை உணர்ந்து நாம் ஏற்றுக்கொண்டது போல இந்த உலக மக்களும்
1 தாங்களும் இறைமக்கள் என உணர்ந்துகொள்ளவும்
2 அந்த உணர்வுக்கேற்றபடி இறைவாக்கு வழி இலட்சிய மக்களாகவும்
3 தாங்களும் இறையரசின் உரிமைக் குடிமக்கள் என உணர்ந்து இயேசுவின் தலைமைப் பண்புகளோடு இணைந்து பணியாற்றும் அன்பிய மக்களாக, பொறுப்பாளர்களாக, வழிகாட்டிகளாக உறவுகளைப் பலப்படுத்துபவர்களாக ஆக்க முயல்வோம். இவ்வாறு ஒரே குடும்பமாய் இறை அன்பால் ஒன்றிணையும் ஒளியின் மக்களாகிய நாம் தலையாகிய இயேசுவோடு இப்பலியில் இணைந்து ஒரே உடலாய் மாறுவோம். ஆமென்.
முதல் வாசகம்
ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்: அவரது மாட்சி உன்மீது தோன்றும்!
ஏசாயா நூலிலிருந்து வாசகம் 60:1-6
1 எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது!2 இதோ! இருள் பூவுலகை மூடும்: காரிருள் மக்களினங்களைக் கவ்வும்: ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்: அவரது மாட்சி உன்மீது தோன்றும்! 3 பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர்: மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்.4 உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்: அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்: தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்: உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர்.5 அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்: உன் இதயம் வியந்து விம்மும்: கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்: பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும்.6 ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்: மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்: இளம் நாட்டினர் யாவரும் பொன், நறுமணப்பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள்
திருப்பாடல்கள் 72:1-2, 7-8, 10-13
1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக!
7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. 8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார்.
10 தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாலவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள். 11 எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள்.
12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். 13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.
இரண்டாம் வாசகம் பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் எபேசியர்க்கு எழுதிய நிருபத்தில் இருந்து வாசகம் 3:2-3,5-62 உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்களிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன்.3 அந்த மறைபொருள் எனக்கு இறை வெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது. அதைப்பற்றி நான் ஏற்கெனவே சுருக்கமாக உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.5 அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.6 நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2:1-12
1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,2 ' யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் ' என்றார்கள்.3 இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.4 அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.5 அவர்கள் அவனிடம், ' யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்.6 ஏனெனில், ″ யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார் ″ என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார் ' என்றார்கள்.7 பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டு போய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான்.8 மேலும் அவர்களிடம், ' நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன் ' என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.9 அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.10 அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.11 வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.12 ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
01. வழிகாட்டும் நாயகனே எம் இறைவா! மீட்பரைக் காண ஆவலோடு பயணத்தை மேற்கொண்ட மூன்று அரசர்களுக்கு விண்மீன் வழிகாட்டியது போல, உம் திருமகனை முழுமையாக அறிந்து, அவரின் சீடாகளாக வாழத்துடிக்கும் எங்களுக்கு நீர் கொடையாகக் கொடுத்துள்ள திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் தங்கள் சொல், செயல் மற்றும் வாழ்வு வழியாக இயேசுவை நோக்கிய எமது பயணத்தில் விண்மீன்களாய்ச் செயல்பட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
02. அரசருக்கெல்லாம் அரசரே எம் இறைவா! தாங்கள் அரசாகளாய் இருந்தும்: மெசியா என்னும் மீட்பரைக்காண, ஏற்றுக்கொள்ள, வழிபட ஆவலோடு நீண்ட பயணத்தை மேற்கொண்டனர். அதேபோன்று எங்களை வழிநடாத்த நீர் கொடுத்துள்ள அனைத்துத் தலைவர்களும் தாழ்ச்சி, உண்மை, நீதி, நேர்மை, தன்னலமின்மை போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், மூன்ற அரசர்களையும், இயேசுவையும் தங்கள் பணி வாழ்வுக்கு மாதிரிகையாகக் கொண்டு எல்லா மக்களின் நலனுக்காகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் ஆவலுடன் உழைக்கத் தேவையான அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
03. திருக்காட்சி நிகழ்வின் வழியாக உம் அன்பை எல்லா மக்களக்கும் வெளிப்படுத்திய இறைவா! கீழ்த்திசை அரசர்களைப் போன்று, நாங்கள் எளிய மனத்தோடும், திறந்த உள்ளத்தோடும் வாழவும்: எவ்வளவு எதிர்ப்புக்கள், தடைகள் எம் வாழ்வில் வந்தாலும், தொடர்ந்து உம்மைத்தேடி, எம் வாழ்வில் உம்மைச் சொந்தமாக்கிக் கொள்ள அருளைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
04. எங்களை எப்பொழுதும் ஆசீர்வதித்துக்கொண்டிருக்கும் அன்புத் தந்தையே! மூன்று அரசர்கள் பொன், சாம்பிராணி, வெள்ளைப்போளம் போன்றவற்றை அமைதியின் அரசராகிய இயேசுவுக்குத் தங்களின் பரிசாகக் கொடுத்து உமது ஆசீரைப் பெற்றனர். நாங்களும் நீர் விரும்பும் தூய உள்ளத்தையும், நேர்மையான வாழ்வையும் உமக்குப் பரிசாகத் தந்து அமைதியையும், மகிழ்ச்சியையும் எமது வாழ்வில் நிரந்தரமாக்கிக் கொள்ள அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
05. வறியோர்க்கும் ஏழைகட்கும் இரக்கம் காட்டுகிறவரான இறைவா! ஆன்மீகத்தில், அன்பில், பொதுநலனில் வறியவர்களாக இருக்கும் எங்கள் மீது மனமிரங்கி, நாங்கள் எங்களுடைய ஆன்மீக வாழ்வை செழுமையுள்ளதாக்கிட வேண்டிய ஞானத்தை எமக்க அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
06. திக்கற்ற எளியோரை விடுவிப்பவரான தந்தையே இறைவா! சிறைகளிலும், வதை முகாம்களிலும், அகதி முகாம்களிலுமிருந்து வேதனைப்படும் அனைவருக்கும் விடுதலையையும், சுதந்திர வாழ்வையும் அளித்தக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
07. திருக்குடும்ப நாயகனே என் இறைவா! இன்றைய உலகம் பல்வேறு அறிவியல், தொழில்நுட்ப மாற்றங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இந்நாட்களில் குடும்பங்களில் ஏற்படும் உறவின் விரிசல்களிலிருந்து விடுபட்டு, மனிதர்கள், மனிதர்களோடு பேசக்கூடிய நிலைமாறிக் கைப்பேசி, தொலைதொடர்புச் சாதனங்கள் இவை தான் இன்று முக்கியமானவை என்ற சிந்னைகளோடு நில்லாமல் இவற்றைக் கடந்து இவையெல்லாம் நம்வாழ்வின் ஓர் அங்கம் தான் என்ற உண்மை நிலையை உய்துணர்ந்து வாழ உமது ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
08. அன்புத் தந்தையே இறைவா! நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இவர்கள் உம்மையே தேடி நேசிப்பதிலும் , உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும் : எமது பிள்ளைகள் இறையுறவிலும் , ஒழுக்கத்திலும் , ஞானத்திலும் , கல்வியிலும் சிறந்து விளங்கி உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும் ,செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப் படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
|