யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 3வது வாரம் செவ்வாய்
2018-01-23




முதல் வாசகம்

தாவீதும் இஸ்ரயேல் வீட்டாரும் ஆரவாரத்தோடு ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள்.
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 6: 12b-15.17-19

அந்நாள்களில் தாவீது புறப்பட்டுச் சென்று கடவுளின் பேழையை ஓபேது - ஏதோமின் இல்லத்திலிருந்து தாவீதின் நகருக்கு அக்களிப்போடு கொண்டு வந்தார். ஆண்டவரின் பேழையை ஏந்தியவர்கள் ஆறு அடிகள் எடுத்து வைத்ததும் ஒரு காளையையும் ஓர் ஆட்டுக் கிடாயையும் பலியிட்டார். நார்ப் பட்டால் நெய்யப்பட்ட ஏபோத்தை அணிந்துகொண்டு, தாவீது தம் முழு வலிமையோடு ஆண்டவர் முன்பாக நடனமாடிக் கொண்டிருந்தார். தாவீதும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரவாரத்தோடும் எக்காள முழக்கத்தோடும் ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள். ஆண்டவரின் பேழையைக் கொணர்ந்து, அதற்கென நிறுவிய கூடாரத்தின் நடுவில் அதை வைத்தார்கள். தாவீது ஆண்டவர் முன்பு எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தினார். எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தியபின் தாவீது படைகளின் ஆண்டவர் பெயரால் மக்களுக்கு ஆசி வழங்கினார். பிறகு தாவீது ஆண் முதல் பெண் வரை மக்கள் அனைவருக்கும் இஸ்ரயேல் கூட்டம் முழுவதற்கும் ஆளுக்கொரு அப்பத்தையும், பொரித்த இறைச்சியையும், திராட்சைப் பழ அடையையும் கொடுத்தார். மக்கள் அனைவரும் தம் இல்லங்களுக்குச் சென்றனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? ஆண்டவர் இவரே.
திபா 24: 7. 8. 9. 10

வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். பல்லவி

8 மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவர்; இவரே போரில் வல்லவரான ஆண்டவர். பல்லவி

9 வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள். மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். பல்லவி

10 மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? படைகளின் ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 31-35

அக்காலத்தில் இயேசுவின் தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்றுகொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள். அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. ``அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்றுகொண்டு உம்மைத் தேடுகிறார்கள்'' என்று அவரிடம் சொன்னார்கள். அவர் அவர்களைப் பார்த்து, ``என் தாயும் என் சகோதரர்களும் யார்?'' என்று கேட்டு, தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, ``இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

வெளியே நின்றுகொண்டிருக்கிறார்கள் !

இன்றைய நற்செய்தி வாசகம் ஒரு வித்தியாசமான காட்சியையும், செய்தியையும் நமக்குத் தருகின்றது. இயேசுவின தாயும், சகோதரர்களும் இயேசுவிடம் வந்தார்கள். ஆனால், மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுகமுடியவில்லை. எனவே, உம் தாயும், சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்றுகொண்டிருக்கிறார்கள் என்று இயேசுவுக்கு அறிவிக்கப்பட்டது என்று வாசிக்கிறோம்.

இந்தக் காட்சியை இரண்டு கோணங்களில் அணுகலாம். இயேசுவின் கோணம் மற்றும் அன்னை மரியா மற்றும் சகோதரர்களின் கோணம். இயேசுவின் கோணத்திலிருந்து பார்த்தால், சொந்தத் தாயும், உறவினர்களும் வந்திருந்தும்கூட அவர்களைக் காண இயலாதபடி பெருந்திரளான மக்களுக்கு அவர் போதித்துக்கொண்டிருந்தார். தன் சொந்த குடும்பத்தினரைவிட தந்தை இறைவன் தந்த பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை அறியலாம். அன்னை மரியாவின் கோணத்திலிருந்து பார்த்தால், பரபரப்பான இறைப் பணியில் ஈடுபட்டிருந்த தம் மகனைப் பற்றி அந்தத் தாய் பெருமிதம் அடைந்திருப்பார். அத்தோடு, அவரது பணிக்கு இடையூறு செய்யாமல், ஆவலுடன் வெளியே காத்துக்கொண்டிருக்கவும் முன் வந்தார். இது அன்னையின் எளிமையையும், இறைத் தந்தைக்கு அவர் காட்டிய பணிவையும், தமது மகனின் போதனையைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள்மீது அவர் கொண்ட பரிவையும் ஒருசேரக் காட்டுகிறது. என்னே அன்னையின் பெருந்தன்மை! என்னே அன்னையின் எளிமை! உரிமை கொண்டாடாமல், ஒதுங்கி நின்றுகொண்டிருக்கும் இந்தக் காட்சி நமக்கும் தாழ்ச்சியையும், பற்றிக்கொள்ளா தன்மையையும், நிறை அன்பையும் கற்றுத் தரட்டும்.

மன்றாட்டு:

இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிற அனைவரையும் உம் தாயாக, சகோதர சகோதரிகளாக ஏற்றுக்கொண்ட இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது தாய் உம்மைக் காண விரும்பி வெளியே பொறுமையுடன் நின்றுகொண்டிருந்த பெருந்தன்மைக்காக உம்மைப் போற்றுகிறோம். அந்த அன்னையிடம் விளங்கிய தாழ்ச்சி, எளிமை, பெருந்தன்மை, பற்றிக்கொள்ளாப் பாசம் போன்ற அனைத்து நற்பண்புகளையும் எங்களுக்கும் தந்தருளும். ஆமென்.