இரண்டாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 4வது வாரம் புதன்கிழமை 2018-01-31
ஜோன் பொஸ்கோ
முதல் வாசகம்
பாவம் செய்தவன் நானல்லவோ? இம்மந்தை எக்குற்றம் செய்தது?
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 24: 2,9-17
அந்நாள்களில் தாவீது அரசர் யோவாபையும் அவரோடிருந்த படைத்தலைவர்களையும் அழைத்து, �மக்கள் தொகை என்னவென்று நான் அறிய வேண்டும். நீங்கள் தாண் முதல் பெயேர்செபா வரை அனைத்து இஸ்ரயேல் குலங்களிடையே சென்று வீரர்கள் தொகையைக் கணக்கிடுங்கள்� என்றார். யோவாபு, வீரர்களின் தொகைக் கணக்கை அரசரிடம் தந்தார். வாளை ஏந்தும் வீரர்கள் எண்ணூறு ஆயிரம் பேர் இஸ்ரயேலிலும், ஐந்நூறு ஆயிரம் பேர் யூதாவிலும் இருந்தனர். வீரர்களின் தொகையைக் கணக்கெடுத்த பிறகு தாவீது மனம் வருந்தினார்.
�நான் மாபெரும் பாவம் செய்தேன்! ஆண்டவரே! உம் அடியானின் குற்றத்தை மன்னித்தருளும்! ஏனெனில் நான் பெரும் மதியீனனாய் நடந்து கொண்டேன்� என்று தாவீது ஆண்டவரிடம் மன்றாடினார்.
தாவீது காலையில் எழுந்தார். தாவீதின் திருக்காட்சியாளராகிய இறைவாக்கினர் காதிற்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது: �நீ சென்று இவ்வாறு ஆண்டவர் கூறுவதாகத் தாவீதிடம் சொல்: �நான் உன்மீது மூன்று தண்டனைகளைக் குறிப்பிடுகிறேன். நீ ஒன்றைத் தேர்ந்தெடு. அதன்படி நான் செய்வேன்� �.
காது தாவீதிடம் வந்து அவரிடம் பேசி வெளிப்படுத்தியது: �உனது நாட்டில் ஏழு ஆண்டுகள் பஞ்சம் வரட்டுமா? உன் எதிரிகள் உன்னைப் பின்தொடர, மூன்று மாதங்கள் நீ தப்பியோட வேண்டுமா? அல்லது உன் நாட்டில் மூன்று நாள்கள் கொள்ளை நோய் ஏற்படலாமா? என்னை அனுப்பியவருக்கு நான் என்ன மறுமொழி சொல்ல வேண்டும் என்று சிந்தித்து முடிவுசெய்�.
�நான் மிகவும் மனவேதனையுற்றுள்ளேன். ஆண்டவரது கையில் நாம் விழுவோம்; ஏனெனில் அவரது இரக்கம் பெரிது! மனிதரின் கையில் விழ வேண்டாம்� என்று தாவீது கூறினார்.
ஆண்டவர் காலைமுதல் குறித்த நேரம்வரை இஸ்ரயேலின் மீது கொள்ளைநோய் அனுப்பினார். தாண் முதல் பெயேர்செபாவரை எழுபதாயிரம் மக்கள் மாண்டனர். வானதூதர் எருசலேமை அழிப்பதற்காக அதன்மீது தம் கையை ஓங்கினார்.
ஆண்டவர் அத்தீமையைக் குறித்து மனம் வருந்தி மக்களை அழித்துக்கொண்டிருந்த வானதூதரை நோக்கி, �போதும்! உன் கையைக் கீழே போடு� என்றார்.
அப்போது ஆண்டவரின் தூதர், எபூசியன் அரவுனாவின் போரடிக்கும் களத்தருகே இருந்தார். மக்களை அழித்துக்கொண்டிருந்த ஆண்டவரின் தூதரைத் தாவீது கண்டபோது, அவர் ஆண்டவரை நோக்கி, �பாவம் செய்தவன் நானல்லவோ? தீச்செயல் புரிந்தவன் நானல்லவோ? இம்மந்தை எக்குற்றம் செய்தது? இப்போது உம் கை என்னையும் என் தந்தையின் வீட்டாரையும் வதைப்பதாக!� என்று கூறினார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவரே, என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர்.
திருப்பாடல் 32: 1-2. 5. 6. 7
1 எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறுபெற்றவர். 2 ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். பல்லவி
5 `என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக் கொள்வேன்' என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். பல்லவி
6 ஆகவே, துன்ப வேளையில் உம் அன்பர் அனைவரும் உம்மை நோக்கி மன்றாடுவர்; பெருவெள்ளம் பாய்ந்து வந்தாலும் அவர்களை அது அணுகாது. பல்லவி
7 நீரே எனக்குப் புகலிடம்; இன்னலினின்று என்னை நீர் பாதுகாக்கின்றீர்; உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச் சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
சொந்த ஊரிலும் சுற்றத்திலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினருக்கு மதிப்பு உண்டு.
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6
அக்காலத்தில் இயேசு தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிலிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின்தொடர்ந்தனர். ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர்.
அவர்கள், ``இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?'' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.
இயேசு அவர்களிடம், ``சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்'' என்றார்.
அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர, வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்து வந்தார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
வாழ்கை அனுபவங்கள் பல
ஆண்டவர் இயேசு தனது சொந்த ஊருக்கு வந்தபோது அவருக்குக் கிடைத்த அனுபவத்தை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குத் தருகிறது. அவருடைய போதனையைக் கேட்ட அவருடைய சொந்த ஊரினர் அவரை நம்ப மறுத்தனர். அவரை ஓர் இறைவாக்கினராக ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். இந்த அனுபவம் அவருக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தையும், வேதனையையும் அளித்திருக்க வேண்டும். எனவேதான், இயேசுவே கூறினார்; சொந்த ஊரிலும், சுற்றத்திலும், தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர் என்று. இத்தகைய அனுபவங்கள் சில நேரங்களில் நமக்கும் நடந்திருக்கும். நம்மைச் சுற்றி வாழ்பவர்களே நமது ஆர்வங்களை, கனவுகளை, நம்பிக்கைகளை அங்கீகரிக்க மறுத்தபோது நாமும் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருப்போம். நமது பெற்றோர், உடன் பிறந்தோர் நமது திறமைகளை, ஆற்றல்களை ஏற்றுக்கொள்ளத் தயங்கியபோது நாமும் மிகுந்த வேதனை அனுபவித்திருப்போம். ஆனால், இன்று இந்த வாசகம் வழியாக ஆண்டவர் நமக்கு விடுக்கும் அழைப்பே பிறர் நமக்குச் செய்த தவறுகளை, நாம் பிறருக்குச் செய்யக்கூடாது என்பதுதான். எனவே, நமது வீட்டில் நம்மோடு வாழ்பவர்களை இனி நிறைவான பார்வையால் பார்க்கக் கற்றுக்கொள்வோம். அவர்களுக்குரிய அங்கீகாரத்தை, தன் மதிப்பை வழங்க முன் வருவோம். அதுபோல, நம்மோடு பணிபுரிகி;ன்ற, உழைக்கின்ற, படிக்கின்ற நண்பர்கள், தோழியரின் திறமைகளை, ஆற்றல்களை ஊக்கப்படுத்துவோம். அவரவர்க்குரிய தன் மதிப்பை வழங்குவோம்.
மன்றாட்டு:
அன்பின்; இயேசுவே, நீர் எங்களுக்குக் கொடையாகத் தந்திருக்கிற எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக, உடன் பிறப்புகளுக்காக, உடன் உழைப்பாளர்களுக்காக, நண்பர்கள், தோழியருக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்களோடு வாழ்கின்ற, உழைக்கின்ற அவர்களைப் புரிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும், மதிக்கவும், ஊக்குவிக்கவும் எங்களுக்கு அருள் தாரும். ஆமென்.
|