யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம்
2018-02-15




முதல் வாசகம்

இதோ இன்று நான் ஆசியையும் சாபத்தையும் உங்களுக்கு முன் வைக்கிறேன்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 30: 15-20

மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன். அது இதுதான்; இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு. அவரைப் பின்பற்றி அவரது வழியில் நட. அவரது கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் கடைப்பிடி. அப்போது நீ வாழ்வாய், நீ பலுகுவாய். நீ உடைமையாகக் கொள்ளப்போகும் நாட்டில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார். ஆனால் உனது உள்ளம் விலகிச் சென்று, நீ செவிகொடாமல் கெட்டலைந்து, வேறு தெய்வங்களை வணங்கி, அவற்றுக்குப் பணிவிடை புரிந்தால், இன்று நான் உனக்கு அறிக்கையிட்டுக் கூறுகிறேன். நீ நிச்சயம் அழிந்து போவாய். நீ உரிமையாக்கிக்கொள்ளுமாறு, யோர்தானைக் கடந்து சென்றடையும் பூமியில் உன் வாழ்நாள் நீடித்திருக்காது. உன்மேல் இன்று நான் விண்ணையும் மண்ணையும் சான்றாக அழைத்து, வாழ்வையும் சாவையும், ஆசியையும் சாபத்தையும் உனக்கு முன் வைக்கிறேன். நீயும் உனது வழித்தோன்றல்களும் வாழும்பொருட்டு வாழ்வைத் தேர்ந்துகொள். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு; அவரது குரலுக்குச் செவிகொடு; அவரையே பற்றிக்கொள். ஏனெனில், அவரே உனது வாழ்வு; அவரே உன் நீடிய வாழ்வு. அதனால், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில் நீ குடியேறுவாய்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்.
திபா 1: 1-2. 3. 4,6

நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது, என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 22-25

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கி, ``மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்'' என்று சொன்னார். பின்பு அவர் அனைவரையும் நோக்கிக் கூறியது: ``என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார். ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக்கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?"

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்' என்றார்'' (மாற்கு 8:34)

கடந்த இருபது நூற்றாண்டுகளுக்கு மேலாகவே மனிதர்கள் ''யார் இந்த இயேசு?'' என்னும் கேள்வியை எழுப்பி வந்துள்ளனர். அக்கேள்விக்குப் பதில் என்ன? இயேசுவே மக்களும் சீடர்களும் தம்மை யார் என்று கூறுகிறார்கள் என்னும் கேள்வியைக் கேட்கிறார் (மாற் 8:27-29). இக்கேள்விக்கு மக்கள் அளித்த பதில் ''இயேசு ஓர் இறைவாக்கினர்'' என்பதாகும் (மாற் 8:28). ஆனால் இயேசுவின் சீடர்களுள் முதன்மையிடம் வகித்த பேதுரு இயேசு பற்றிய உண்மையைக் கண்டுகொள்கின்றார். இயேசுவைப் பார்த்து, ''நீர் மெசியா'' (மாற் 8:29) என்று உற்சாகத்தோடு கூறுகிறார் பேதுரு. இயேசு கேட்ட கேள்விக்குச் சரியான பதில் அளித்துவிட்ட திருப்தி பேதுருவுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். இயேசுவும் பேதுரு தம்மை அடையாளம் கண்டுகொண்டதைப் பற்றி மகிழ்ந்திருப்பார். ஆனால் ''மெசியா'' என்றால் யார் என்பது பற்றிய விளக்கத்தை இயேசு அளிக்கிறார். சீடர்களும் அவர்கள் காலத்து யூதர்களும் மெசியா பற்றி எண்ணியதற்கும் இயேசு தருகின்ற விளக்கத்திற்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது. சீடர்கள் கருத்துப்படி மெசியா என்பவர் மிகுந்த வல்லமையோடு வந்து, மக்களுக்கு எதிரிகளாக இருப்பவர்களை முறியடித்து, இஸ்ரயேல் நாட்டைச் சுதந்திர நாடாக ஏற்படுத்தி ஆட்சி செய்வார். ஆனால் இயேசுவுக்கு அக்கருத்து ஏற்புடையதாக இல்லை. இயேசு மெசியா என்பது உண்மையே. ஆனால் அவர் ''துன்புறும் மெசியா''; உலகப் பார்வையில் மகிமையும் மாட்சியும் கொண்டவராய் ஆட்சி செய்கின்ற அரசியல் தலைவர் அல்ல அவர். மாறாக, எல்லாராலும் இகழப்பட்டு, துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறக்கப் போகின்ற மெசியா அவர்.

இப்பின்னணியில்தான் இயேசு தம் சீடர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என விளக்குகிறார். அவர்களும் இயேசுவை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். அவர்கள் ''தன்னலம் துறக்க வேண்டும்''; ''தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு இயேசுவைப் பின்பற்ற வேண்டும்'' (காண்க: மாற் 8:34). பிறருக்காகத் துன்பங்களை ஏற்கும் மன நிலை நம்மில் தோன்றுவது எப்போது? நாம் உண்மையிலேயே பிறரை அன்புசெய்யும் போது அவர்களுக்காகத் தியாகம் செய்ய முன்வருகிறோம். ஆக, அன்பு தான் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் மன நிலையை நம்மில் உருவாக்குகிறது. இயேசு நம்மை அன்புசெய்து நமக்காகத் துன்புற்றார். நாமும் அவர் மீது அன்புடையவர்களாக இருந்தால் துன்பத்தை மகிழ்ச்சியோடு ஏற்போம். ஏனென்றால் நம் துன்பத்தின் வழியாக நன்மை பிறக்கும் என நாம் உறுதியாக நம்புகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் துன்பங்களைக் கிறிஸ்துவின் துன்பங்களோடு இணைக்கும் போது நாங்கள் வாழ்வடைகிறோம் என உணர்ந்தறிய அருள்தாரும்.