இரண்டாவது திருவழிபாடு ஆண்டு தவக்காலம் 5வது வாரம் புதன்கிழமை 2018-03-21
முதல் வாசகம்
தானியேல் நூலிலிருந்து வாசகம் 3:14-20, 91-92, 95
14 நெபுகத்னேசர் அவர்களை நோக்கி, சாத்ராக்கு! மேசாக்கு! ஆபேத்நெகோ! நீங்கள் மூவரும் என் தெய்வங்களை வணங்கவில்லை என்பதும், நான் நிறுவிய பொற்சிலையைப் பணிந்து தொழவில்லை என்பதும் உண்மைதானா?15 இப்பொழுதாவது எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய எல்லாவகை இசைக் கருவிகளும் ஒலிக்கக் கேட்டவுடன், நீங்கள் தாழவீழ்ந்து நான் செய்துவைத்துள்ள சிலையைப் பணிந்து தொழத் தயாராயிருக்கிறீர்களா? தொழாவிட்டால் அந்த நொடியிலேயே எரிகிற தீச்சூளையில் தூக்கிப் போட16 சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ என்பவர்கள் செபுகத்னேசர் அரசனை நோக்கிப் பதில்மொழியாக, இதைக் குறித்து நாங்கள் உமக்கு மறுமொழி கூறத் தேவையில்லை.17 அப்படியே எது நிகழ்ந்தாலும், நாங்கள் வழிபடுகின்ற எங்கள் கடவுள், எரிகின்ற தீச்சூளையினின்று எங்களை மீட்க வல்லவர்.18 அவரே எங்களை உம் கையினின்றும் விடுவிப்பார். அப்படியே அவருக்கு மனமில்லாமல் போனாலும், அரசரே! நாங்கள் உம்முடைய தெய்வங்களை வழிபடமாட்டோம்: நீர் நிறுவிய பொற்சிலையையும் நாங்கள் தொழப்போவதில்லை. இது உமக்குத் தெரிந்திருக்கட்டும் என்றார்கள்.19 இதைக் கேட்ட நெபுத்னேசர் அரசன் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோர்மீது வெகுண்டெழ, அவனது முகம் சினத்தால் சிவந்தது. வழக்கத்தைவிட ஏழு மடங்கு மிகுதியாகத் தீச்சூளையைச் சூடாக்கும்படி அரசன் கட்டளையிட்டான்.20 பின்னர் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரைக் கட்டி, எரியும் தீச்சூளைக்குள் தூக்கிப் போடுமாறு தன் படைவீரர்களுள் வலியவர் சிலருக்குக் கட்டளையிட்டான்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
என்றென்றும் அவரைப் புகழ்ந்து போற்றுங்கள்
தானியேல் இணைப்பு 1:29-33
29 எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக: என்றென்றும் நீர் புகழப்பெறவும் ஏத்திப் போற்றப்பெறவும் தகுதியுள்ளவர். மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது. எக்காலத்துக்கும் அது புகழ்ந்தேத்தற்குரியது: எத்திப் போற்றற்குரியது.
30 உமது தூய மாட்சிவிளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப்பெறுவீராக: உயர் புகழ்ச்சிக்கும் மிகு மாட்சிக்கும் நீர் உரியவர். 31 கெருபுகள்மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர் வாழ்த்தப்பெறுவீராக: நீர் என்றென்றும் புகழப்படவும் ஏத்திப் போற்றப்படவும் தகுதியுள்ளவர்.
32 உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப்பெறுவீராக: என்றென்றும் நீர் புகழ்ந்தேத்தப் பெறுவீராக, ஏத்திப் போற்றப்பெறுவீராக.33 உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக: என்றென்றும் நீர் பாடல் பெறவும், மாட்சி அடையவும் தகுதியுள்ளவர்.
நற்செய்திக்கு முன் வசனம்
பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை
நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8:31-42
31 இயேசு தம்மை நம்பிய யூதர்களை நோக்கி, ' என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்;32 உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும் ' என்றார்.33 யூதர்கள் அவரைப் பார்த்து, ' ″ உங்களுக்கு விடுதலை கிடைக்கும ″ என நீர் எப்படிச் சொல்லலாம்? நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை. நாங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் ஆயிற்றே! ' என்றார்கள்.34 அதற்கு இயேசு, ' பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.35 வீட்டில் அடிமைக்கு நிலையான இடம் இல்லை; மகனுக்கு அங்கு என்றென்றும் இடம் உண்டு.36 மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால் நீங்கள் உண்மையிலே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள்.37 நீங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் வார்த்தை உங்கள் உள்ளத்தில் இடம் பெறாததால் நீங்கள் என்னைக் கொல்ல முயலுகிறீர்கள்.38 நான் என் தந்தையிடம் கண்டதைச் சொல்கிறேன். நீங்கள் உங்கள் தந்தையிடமிருந்து கேட்டதைச் செய்கிறீர்கள் ' என்றார்.39 அவர்கள் அவரைப் பார்த்து, ' ஆபிரகாமே எங்கள் தந்தை ' என்றார்கள். இயேசு அவர்களிடம், ' நீங்கள் ஆபிரகாமின் மக்கள் என்றால் அவரைப் போலச் செயல்படுவீர்கள்.40 ஆனால் கடவுளிடமிருந்து கேட்டறிந்த உண்மையை உங்களுக்கு எடுத்துரைத்த என்னை நீங்கள் கொல்ல முயலுகிறீர்கள். ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே!41 நீங்கள் உங்கள் தந்தையைப் போலச் செயல்படுகிறீர்கள் ' என்றார். அவர்கள், ' நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல; எங்களுக்கு ஒரே தந்தை உண்டு; கடவுளே அவர் ' என்றார்கள்.42 இயேசு அவர்களிடம் கூறியது: ' கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள். நான் கடவுளிடமிருந்தே இங்கு வந்துள்ளேன். நானாக வரவில்லை; அவரே என்னை அனுப்பினார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''பிலிப்பு இயேசுவிடம், 'ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்' என்றார். இயேசு அவரிடம் கூறியது:
''பிலிப்பே,... நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா?...'' (யோவான் 14:8,10)
இயேசு மக்களுக்குப் போதனை வழங்கினார்; அரும் செயல்கள் பல புரிந்தார். அவருடைய சொற்களும் செயல்களும் கடவுளின் வல்லமையை மக்களுக்கு எடுத்துக்காட்டின. குறிப்பாக, இயேசுவோடு கூட இருந்து அவரைப் பின்தொடர்ந்து சென்ற சீடர்கள் இயேசுவின் சொற்களை நேரடியாகக் கேட்டார்கள், அவர் புரிந்த அரும் செயல்களை அருகிருந்து கண்டார்கள். எனவே அவர்கள் இயேசு யார் என்பதை அறிந்திருப்பார்கள் என நாம் எதிர்பார்க்கலாம். இருந்தாலும், சீடர்கள் இயேசுவை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே பிலிப்புவின் கூற்று வெளிப்படுத்துகிறது. பிலிப்பு இயேசுவுக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவைப் புரிந்துகொள்ளவில்லை. தந்தை வேறு இயேசு வேறு என்றுதான் அவர் நினைக்கின்றார். ஆனால் இயேசு பிலிப்புவின் தவறான பார்வையைத் திருத்துகின்றார். இயேசுவுக்கும் தந்தைக்கும் இடையே நெருங்கிய உறவு உண்டு. இயேசு தந்தையால் அனுப்பப்பட்டு இவ்வுலகிற்கு வந்தவர்; தந்தையே இயேசுவுக்குத் ''தோற்றுவாய்'' எனலாம். எனவே தந்தை இயேசுவிடம் உறைகின்றார்; இயேசு தந்தையிடம் உறைகின்றார். இந்த உண்மை மனித அறிவுக்கு எட்டாததாகத் தெரியலாம். ஆனால் இயேசுவின் சொற்களைக் கேட்டு, அவரிடத்தில் நம்பிக்கை கொள்வோர் இயேசு அறிவிக்கின்ற இந்த உண்மையை ஏற்றுக்கொள்வார்கள்.
-- இயேசுவுக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவு எந்த அளவு நெருக்கமானது என்றால் இயேசு, ''என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்'' எனக் கூறுகிறார் (யோவா 14:9). இந்த உண்மையை நாம் ஏற்றுக்கொண்டால் இயேசு நமக்குக் காட்டுகின்ற வழியே கடவுள் நமக்கு அளிக்கின்ற வாழ்வுமுறை எனவும் ஏற்போம். அப்போது இயேசுவின் தந்தையும் நம் தந்தையுமாகிய கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மைத் தம்மோடு எந்நாளும் நிலைவாழ்வில் பங்குபெறச் செய்வார் என்னும் நம்பிக்கையோடு வாழ்வோம். இந்த நம்பிக்கை நமக்கு இருப்பதால் நாம் இயேசுவின் பெயரால் கேட்பதை அவர் செய்வார் என்னும் உறுதி நமக்கு உண்டு. இத்தகைய உறுதியை நமக்கு அளிப்பவர் இயேசு நமக்குக் கொடையாகத் தருகின்ற தூய ஆவி (காண்க: யோவா 14:16,17).
மன்றாட்டு:
இறைவா, உம் திருமகனில் உம்மைக் கண்டு நாங்கள் நல்லுறவில் வளர்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.
|