இரண்டாவது திருவழிபாடு ஆண்டு பாஸ்க்கா காலம் 2வது வாரம் சனிக்கிழமை 2018-04-14
முதல் வாசகம்
கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக் கொண்டே சென்றது.
திருத்தூதர்பணி நூலிலிருந்து வாசகம் 6:1-7
1 அக்காலத்தில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர்.
2 எனவே பன்னிரு திருத்தூதரும் சீடர்களை ஒருங்கே வரவழைத்து, "நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல.
3 ஆதலால் அன்பர்களே, உங்களிடமிருந்து, நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம்.
4 நாங்களோ இறை வேண்டலிலும், இறை வார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்" என்று கூறினர்.
5 திரளாய்க் கூடியிருந்த சீடர் அனைவரும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டனர். அதன்படியே அவர்கள் நம்பிக்கையும் தூய ஆவியும் நிறைந்த ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கோலா, தீமோன், பர்மனா, யூதம் தழுவிய அந்தியோக்கிய நகரத்து நிர்கொலா என்பவர்களைத் தெரிந்தெடுத்து
6 அவர்களைத் திருத்தூதர் முன்னால் நிறுத்தினார்கள். திருத்தூதர் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர்.
7 கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக் கொண்டே சென்றது. குருக்களுள் பெருங் கூட்டத்தினரும் இவ்வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நம்பிக்கை கொண்டனர்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவரே உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!
திருப்பாடல்கள் 33:1-2, 4-5, 18-19
1 நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே.
2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்;
4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.
5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.
18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.
நற்செய்திக்கு முன் வசனம்
இயேசு கடல்மீது நடந்து வருவதைச் சீடர்கள் கண்டனர்
நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 16-21
மாலை வேளையானதும் இயேசுவின் சீடர்கள் கடற்கரைக்கு வந்து, படகேறி மறுகரையிலுள்ள கப்பர்நாகுமுக்குப் புறப்பட்டார்கள், ஏற்கெனவே இருட்டிவிட்டது. இயேசுவும் அவர்களிடம் அதுவரை வந்து சேரவில்லை. அப்போது பெருங்காற்று வீசிற்று; கடல் பொங்கி எழுந்தது. அவர்கள் ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர் தொலை படகு ஓட்டியபின் இயேசு கடல்மீது நடந்து படகருகில் வருவதைக் கண்டு அஞ்சினார்கள்.
இயேசு அவர்களிடம், ``நான்தான், அஞ்சாதீர்கள்'' என்றார். அவர்கள் அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விரும்பினார்கள். ஆனால் படகு உடனே அவர்கள் சேரவேண்டிய இடம் போய்ச் சேர்ந்துவிட்டது
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
படகில் ஏற்றிக்கொள்ள !
இயேசு கடல்மீது நடந்து வந்ததையும், #8220;நான்தான் அஞ்சாதீர்கள்” என்று வலிமைப்படுத்தியதையும் கண்ட சீடர்கள் துணிவுபெற்றனர். எனவே,”அவர்கள் அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விரும்பினார்கள்” என்று வாசிக்கிறோம். என்னே ஓர் எண்ணம்! ஆண்டவரைத் தங்கள் படகில் ஏற்றிக்கொள்வதன் மூலம் இரண்டு நன்மைகள் அவர்களுக்குக் கிடைக்கும். 1. பாதுகாப்பு. இயேசுவே அவர்களோடு பயணம் செய்வதால் புயற்காற்றுக்கோ, வேறு எந்தத் தீமைகளுக்கோ அஞ்ச வேண்டியதில்லை. 2. அருகாமை. இயேசுவோடு இருக்க வேண்டும் என்னும் எண்ணம் ஈடேறும். அவர்கள் பயணம் செய்வதன் நோக்கமே இயேசுவோடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே! அந்த எண்ணம் ஈடேறும்.
நம்முடைய வாழ்க்கை என்னும் படகிலும் ஆண்டவர் இயேசுவை நாம் ஏற்றிக்கொள்ள விரும்புகிறோமா என்று நம்மையே இன்று கேட்டுக்கொள்வோம். நமது படகில் இயேசு இருந்தால் நமக்குப் பாதுகாப்பும் கிடைக்கும், இறைவனின் உடனிருப்பு என்னும் ஆன்மீக நிறைவும் கிடைக்கும். சீடர்களைப் போல நாமும் அந்த விருப்பம் கொள்வோமாக!
மன்றாட்டு:
உயிர்த்த மகிமையின் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் வாழ்க்கை என்னும் படகில் நீர் ஏறி எங்களோடு பயணம் செய்யவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். வாரும், ஆண்டவரே வாரும். எங்களோடு பயணம் செய்யும். ஆமென்.
|