இரண்டாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 20வது வாரம் வெள்ளிக்கிழமை 2018-08-22
அரசியான தூய கன்னிமரியா
முதல் வாசகம்
ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 9: 2-4, 6-7
காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும் போது அக்களிப்பது போல் களிகூர்கிறார்கள். மிதியான் நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர். அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர்.
ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ `வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்' என்று அழைக்கப்படும். அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது; தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலைநாட்டுவார்; இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலைபெயராது உறுதிப்படுத்துவார்; படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவரது பெயர் இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக!
திருப்பாடல் 113: 1-2. 3-4. 5-6. 7-8
ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள். 2 ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக! பல்லவி
3 கீழ்த்திசை முதல் மேற்றிசை வரை ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக! 4 மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி. பல்லவி
5 நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர் போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்? 6 அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார். பல்லவி
7 ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்; 8 உயர்குடி மக்களிடையே - தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே - அவர்களை அமரச் செய்கின்றார். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார். பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்
நற்செய்தி வாசகம்
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38
ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.
வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, ``அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'' என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
வானதூதர் அவரைப் பார்த்து, ``மரியா, அஞ்ச வேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது'' என்றார்.
அதற்கு மரியா வானதூதரிடம், ``இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!'' என்றார்.
வானதூதர் அவரிடம், ``தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை'' என்றார்.
பின்னர் மரியா, ``நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்'' என்றார்.
அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''பின்னர் மரியா, 'நான் ஆண்டவரின் அடிமை:
உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்றார் (லூக்கா 1:38)
மரியாவின் வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்ச்சிகள் பல நிகழ்ந்தன. திருமண ஒப்பந்தம் ஆகி, இல்லறம் நடத்துவதற்கு முன் மரியா கடவுளின் திருமகனைத் தம் உதரத்தில் கருத்தாங்க அழைப்புப் பெறுகிறார். இது வியத்தகு நிகழ்ச்சி மட்டுமல்ல, மரியாவைப் பொறுத்தமட்டில் இது பெரும் அதிர்ச்சிதரும் செய்தியாக இருந்தது. இந்நிகழ்ச்சிக்குப் பின் யோசேப்பு மரியாவின் வாழ்வில் நிகழ்ந்ததைப் புரிந்துகொள்ள இயலாமல் திணறிக்கொண்டிருந்தார். இதுவும் மரியாவுக்கு ஒரு சோதனையாகவே அமைந்திருக்க வேண்டும். குழந்தைப் பேறு நெருங்கியதும் தம் குழந்தையை ஈன்றெடுத்து வசதியாகக் கிடத்துவதற்குக் கூட அவருக்குக் கிடைத்தது தீவனத்தொட்டியே. குழந்தை இயேசு எருசலேம் கோவிலில் காணாமற்போன நேரமும் மரியாவுக்குப் பெருவேதனை தந்தது. ஆனால் இத்துயரமான தருணங்களிலும் மகிழ்ச்சியான நேரங்களிலும் மரியா கடவுளின் வார்த்தையைத் ''தம் உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்'' (லூக்கா 2:50). கடவுளின் வார்த்தை மரியாவுக்கு ஆறுதல் தரும் ஊற்றாயிருந்தது.
மரியாவுக்கு ஏற்பட்ட மாபெரும் வேதனை அவர்தம் அருமைந்தன் எதிரிகளால் கொடுமைப்படுத்தப்பட்டதும், இயேசுவின் தோள்மேல் சிலுவை சுமத்தப்பட்டு இறுதியில் அச்சிலுவையில் ஒரு குற்றவாளிபோல அறையப்பட்டு உயிர்துறந்ததுமே. இத்துயரம் மரியாவின் இதயத்தை ஈட்டிபோல் துளைத்தது. இந்த நேரங்களிலெல்லாம் மரியா மன உறுதி இழக்கவில்லை; உள்ளதம் தளரவில்லை. மாறாக, கடவுளின் வல்லமையில் நம்பிக்கை கொண்டார். கடவுளால் எல்லாம் இயலும் என்பதை மரியா இத்தருணங்களில் மிக ஆழமாக உணர்ந்தார். மரியா கடவுளின் ''அடிமை'' என்றதும் கடவுள் அடிமைத்தனத்தை ஏற்கிறார் என்று பொருளாகாது. மாறாக, மரியா தம்மைப் படைத்து, பாவத்திலிருந்து காப்பாற்றிய கடவுளையே தம் வாழ்வின் மையாமாகக் கொண்டிருந்தார் என்பதே பொருள். இவ்வாறு செயல்பட்டதால் மரியா தம் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற முனையவில்லை. கடவுளின் திருவுளம் இவ்வுலகில் நிறைவேற வேண்டும் என்பது மட்டுமே மரியாவின் வாழ்க்கை நோக்கமாக இருந்தது.
மன்றாட்டு:
இறைவா, உம் திருவுளத்தை அறிந்து அதன் கோரிக்கைகளை நாங்கள் ஏற்று வாழ அருள்தாரும்.
|