யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 24வது வாரம் வெள்ளிக்கிழமை
2018-09-21

0புனித மத்தேயு - திருத்தூதர், நற்செய்தியாளர் விழா




முதல் வாசகம்

இறைமக்களை ஆயத்தப்படுத்தவும் தம் மறையுடலைக் கட்டியெழுப்பவுமே கிறிஸ்து எங்களை ஏற்படுத்தினார்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-7, 11-13

சகோதரர் சகோதரிகளே, ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர். கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டுள்ளது. அவரே சிலரைத் திருத்தூதராகவும், சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார். திருத்தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும் இவர்களை அவர் ஏற்படுத்தினார். அதனால் நாம் எல்லாரும் இறைமகனைப் பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம் முதிர்ச்சி அடைவோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.
திருப்பாடல் 19: 1-2. 3-4

வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. 2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது. பல்லவி

3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை. 4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இறைவா, உம்மை வாழ்த்துகிறோம், ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம். திருத்தூதர்களின் அருளணியும் ஆண்டவரே, உம்மைப் போற்றிடுமே.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 9-13

அக்காலத்தில் மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததை இயேசு கண்டார்; அவரிடம், ``என்னைப் பின்பற்றி வா'' என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்த போது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், ``உங்கள் போதகர் வரி தண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?'' என்று கேட்டனர். இயேசு இதைக் கேட்டவுடன், ``நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. `பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு அப்பெண்ணை நோக்கி, 'உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க' என்றார்'' (லூக்கா 7:50)

மனித இதயத்தில் பல ஏக்கங்கள் உண்டு. பிறர் நம்மை ஏற்று, மனிதராக நம்மை மதிக்க வேண்டும் என்பது அடிப்படையான ஏக்கம். ஏதாவது தவறுகள் நேர்ந்துவிட்டால் அவற்றைப் பிறர் மன்னித்துவிட வேண்டும் என்பதும் மனித எதிர்பார்ப்புத்தான். அதுபோலவே, கடவுளுக்கு நாம் ஏற்புடையவர்களாக இருக்கவேண்டும் என்பதும் நம் உள்ளத்தின் அடிப்படையான வேட்கை. நாமாகவே முயன்று நம்மைக் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக மாற்ற இயலாது. ஏனென்றால் நாம் பாவத்தின் விளைவாகக் கடவுளிடமிருந்து பிரிந்து போய்விட்டோம். தவறிச் சென்ற நம்மை மீண்டும் கண்டுபிடித்து, நம்மைத் தம்மோடு உறவுகொண்டாட அழைத்து, அதைச் செயல்படுத்தும் சக்தி கடவுளுக்கு மட்டுமே உண்டு. எனவே, நம்மைத் தமக்கு உகந்தவர்களாக மாற்றுகின்ற கடவுளிடமிருந்து நாம் இரக்கத்தையும் மன்னிப்பையும் கொடையாகப் பெறுகிறோமே தவிர நமது சொந்த சக்தியில் நம்பிக்கை கொண்டு அதைப் பெறுவதில்லை. கடவுளிடமிருந்து நாம் பெறுகின்ற மன்னிப்பு என்னும் அருளைவிடப் பெரிய கொடை இல்லை. இயேசுவை அணுகிவந்து, அவருடைய காலடிகளில் நறுமனத் தைலம் பூசித் தன் அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்திய பெண்ணைப் பார்த்து இயேசு ''அமைதியில் செல்க'' என்கிறார். அப்பெண்ணுக்குக் கடவுளின் இரக்கமும் மன்னிப்பும் கிடைத்ததால் அவர் அமைதியில் செல்லலாம் (லூக்கா 7:36-50).

மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படுவது இயல்பு. மன்னித்து ஏற்கும் பண்பு இல்லாவிட்டால் அந்த விரிசல்கள் விரிந்துகொண்டே போகும். பிறரிடம்தான் குறைகள் எல்லாம் உள்ளன, நம்மிடம் யாதொரு குறையும் இல்லை என நாம் நினைத்தால் முறிந்த உறவுகள் ஒருநாளும் சரியாகிட இயலாது. மாறாக, நம்மை மன்னித்து ஏற்கின்ற கடவுளின் இரக்கத்தை நாம் அனுபவிக்கும்போது, அதே முறையில் பிறரின் குற்றங்களை மன்னித்து அவர்களையும் கடவுளின் அன்பின் பொருட்டு ஏற்றுக்கொள்வோம். அப்போது நம் உள்ளத்தில் அமைதி ஏற்படும். அன்பு இருக்கும் இடத்தில் மன்னிப்புக்கு இடம் உண்டு.

மன்றாட்டு:

இறைவா, அமைதியின் ஊற்றாகிய உம்மிடமிருந்து நாங்கள் மன்னிப்பையும் இரக்கத்தையும் பெற்றிட மனமுவந்து உம்மை நாடிவர எங்களுக்கு அருள்தாரும்.