இரண்டாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 25வது வாரம் வெள்ளிக்கிழமை 2018-09-28
முதல் வாசகம்
உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலம் உண்டு.
சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 3: 1-11
ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் உண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலம் உண்டு: பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்; நடவுக்கு ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம்; கொல்லுதலுக்கு ஒரு காலம், குணப்படுத்துதலுக்கு ஒரு காலம்; இடித்தலுக்கு ஒரு காலம், கட்டுதலுக்கு ஒரு காலம்; அழுகைக்கு ஒரு காலம், சிரிப்புக்கு ஒரு காலம்; துயரப்படுதலுக்கு ஒரு காலம், துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்; கற்களை எறிய ஒரு காலம், கற்களைச் சேர்க்க ஒரு காலம்; அரவணைக்க ஒரு காலம், அரவணையாதிருக்க ஒரு காலம்; தேடிச் சேர்ப்பதற்கு ஒரு காலம், இழப்பதற்கு ஒரு காலம்; காக்க ஒரு காலம். தூக்கியெறிய ஒரு காலம்; கிழிப்பதற்கு ஒரு காலம், தைப்பதற்கு ஒரு காலம்; பேசுவதற்கு ஒரு காலம், பேசாதிருப்பதற்கு ஒரு காலம்; அன்புக்கு ஒரு காலம், வெறுப்புக்கு ஒரு காலம்; போருக்கு ஒரு காலம், அமைதிக்கு ஒரு காலம். வருந்தி உழைப்பவர் தம் உழைப்பினால் அடையும் பயன் என்ன? மனிதர் பாடுபட்டு உழைப்பதற்கெனக் கடவுள் அவர்மீது சுமத்திய வேலைச் சுமையைக் கண்டேன். கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்; காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!
திருப்பாடல் 144: 1-4
என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! 2 என் கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே! என் கேடயமும் புகலிடமும் அவரே! பல்லவி
3 ஆண்டவரே! மனிதரை நீர் கவனிக்க அவர்கள் யார்? மானிடரை நீர் கருத்தில் கொள்ள அவர்கள் யார்? 4 மனிதர் சிறுமூச்சுக்கு ஒப்பானவர்; அவர்களின் வாழ்நாள்கள் மறையும் நிழலுக்கு நிகரானவை. பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
மானிட மகன் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-22
அக்காலத்தில் இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம் ``நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?'' என்று அவர் கேட்டார்.
அவர்கள் மறு மொழியாக, ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்'' என்றார்கள்.
``ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர்களிடம் அவர் கேட்டார்.
பேதுரு மறுமொழியாக, ``நீர் கடவுளின் மெசியா'' என்று உரைத்தார்.
இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார். மேலும் இயேசு, ``மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்'' என்று சொன்னார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர்.
அப்போது அவர்களிடம், 'நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?' என்று அவர் கேட்டார்'' (லூக்கா 9:18)
இயேசு பல அதிசயங்களைச் செய்கிறார் எனக் கேள்விப்பட்ட குறுநில மன்னன் ஏரோது அந்திப்பா இயேசுவைச் சந்திக்க விருப்பம் கொண்டான். ''இவர் யாரோ?'' என்னும் கேள்வியையும் எழுப்பினான் (காண்க: லூக் 9:9). அதன் பிறகு இயேசு ஐயாயிரம் பேருக்கு அதிசயமான விதத்தில் உணவளிக்கும் நிகழ்ச்சியை லூக்கா பதிவுசெய்துள்ளார் (லூக் 9:10-17). வயிறார உண்ட மக்கள் இயேசுவை ஓர் இறைவாக்கினராகப் பார்த்திருப்பார்கள். முற்காலத்தில் புதுமைகள் புரிந்து மக்களுக்கு உணவளித்த எலியா போன்றவர் இயேசு என நினைத்திருப்பார்கள் (காண்க: 1 அர 17:8-14). ஆனால் இயேசு ''தனித்து இறைவனிடம் வேண்டச் செல்கின்றார்'' (காண்க: லூக் 9:18). முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு முன்னர் இயேசு இறை வேண்டல் செய்தார் என லூக்கா பல இடங்களில் குறிப்பிடுகிறார். அதுபோலவே இங்கும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி நடக்கவிருந்தது. இயேசு சீடர்களிடம் ஒரு கேள்வி கேட்கிறார். அக்கேள்விக்கு அவர்கள் அளித்த பதில் சரியே என இயேசு ஏற்றுக்கொண்டாலும் அதில் ஒரு திருத்தம் கொணர்கிறார்.
''நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?'' - இவ்வாறு இயேசு கேட்ட கேள்விக்கு சீடர்கள் தந்த பதில் சரியானதுதான். மக்கள் இயேசுவை ஓர் இறைவாக்கினராகப் பார்த்தார்கள். ''ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்?'' என்று இயேசு கேட்ட கேள்விக்கு சீடர்களின் பெயரால் பேதுரு அளித்த பதில் ''நீர் கடவுளின் மெசியா'' என்பது (லூக் 9:20). இங்கே லூக்கா நற்செய்தியாளர் இயேசு தம்மைப் படிப்படியாகத் தம் சீடர்களுக்கு வெளிப்படுத்தியதைக் குறிப்பிடுகிறார். இயேசு உண்மையிலேயே கடவுளால் ''திருப்பொழிவு பெற்றவர்'' (மெசியா). ஆயினும் உலகப் பாணியில் அதிகாரம் செலுத்தவோ, ஆட்சியில் அமர்ந்து இஸ்ரயேலை ஒரு வலிமை மிக்க சுதந்திர நாடாக மாற்றிடவோ அவர் வரவில்லை. இயேசு துன்பங்கள் அனுபவிக்க வேண்டும், கொலைசெய்யப்பட வேண்டும் என்பது கடவுளின் திட்டமாக இருந்தது. ஆனால் அவர் சாவையும் முறியடித்து, புதியதொரு வாழ்வுக்கு உயிர்பெற்றெழுவார் (காண்க: லூக் 9:22). ''நான் யார்?'' என இயேசு இன்று நம்மைப் பார்த்துக் கேட்கின்றார். மக்களுக்கு அதியமான விதத்தில் உணவளித்த அதே இயேசு கடவுளை நோக்கி வேண்டுவதில் நேரம் செலவிட்டார். மக்களின் உடல் பசியைப் போக்குவது மட்டுமே அவருடைய நோக்கமாக இருக்கவில்லை. கடவுளோடு ஆழ்ந்த உறவில் நிலைப்பதும் அவருடைய இயல்பாக இருந்தது. கடவுளோடும் மனிதரோடும் இயேசு கொண்டிருந்த உறவு நம்மிலும் துலங்க வேண்டும். ஆக, இயேசுவை நாம் சரியாக அடையாளம் காண வேண்டும் என்றால் அவர் நம் வாழ்வின் மூச்சாக மாற வேண்டும். அவரே நம் உள்ளத்திலிருந்து நம்மை வழிநடத்த நாம் முழுமையாக அவருடைய கைகளில் நம்மை ஒப்படைக்க வேண்டும். அப்போது ''துன்புறும் மெசியா''வாக வந்த இயேசு துன்பங்களின் நடுவிலும் நமக்குத் தோன்றுவார்; நம்மைத் தேற்றி நமக்குத் தம் புது வாழ்வில் பங்களிப்பார். நம்மைக் கடவுளோடும் மனிதரோடும் நல்லுறவில் இணைக்கின்ற பாலமாக விளங்குவார்.
மன்றாட்டு:
இறைவா, உம் திருமகன் இயேசுவை நாங்கள் ஆழமாக அறிந்திட அருள்தாரும்.
|