யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 25வது வாரம் சனிக்கிழமை
2018-09-29

தூய மிக்கேல், கபிரியேல், ரபேல் - அதிதூதர்கள் விழா




முதல் வாசகம்

பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 9-10, 13-14

நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன. அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணி புரிந்தார்கள்; பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன. இரவில் நான் கண்ட காட்சியாவது; வானத்தின் மேகங்களின் மீது மானிடமகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப் பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றும் உள்ளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்துபோகாது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே! தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
திருப்பாடல்138: 1-5

ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். 2ய உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள்பணிவேன். பல்லவி

2 உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். 3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். பல்லவி

4 ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர். 5 ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்; ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது! பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

ஆண்டவரின் படைகளே! அவர் திருவுளப்படி நடக்கும் அவர்தம் பணியாளரே! அவரைப் போற்றுங்கள்

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 47-51

அக்காலத்தில் நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, ``இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்'' என்று அவரைக் குறித்துக் கூறினார். நத்தனியேல், ``என்னை உமக்கு எப்படித் தெரியும்?'' என்று அவரிடம் கேட்டார். இயேசு, ``பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்'' என்று பதிலளித்தார். நத்தனியேல் அவரைப் பார்த்து, ``ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்'' என்றார். அதற்கு இயேசு, ``உம்மை அத்தி மரத்தின் கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்'' என்றார். மேலும் ``வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று அவரிடம் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

தூதர்களாய் வாழ்வோம் !

இன்று அதிதூதர்களான புனித மிக்கேல், கபிரியேல்,இரபேல் ஆகியோரின் விழாவைக் கொண்டாடுகிறோம். வானதூதர்களைப் பற்றிச் சிந்திக்கும்போது அவர்களின் இரு முக்கியமான பணிகள் நமக்கு நினைவுக்கு வருகின்றன: 1. அவர்கள் எப்போதும் இறைவனின் தூய திருத்தலத்தில் நின்று இறைவனை எந்நேரமும் போற்றித், துதித்து, ஆராதித்து மகிழ்கின்றனர். திருப்பாடல் 84 ஆண்டவரின் இல்லத்தில் தங்கி வாழ்வோர் பேறு பெற்றோர். அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்துகொண்டேயிருப்பார்கள் என்று அழகாகச் சொல்கிறது. கடவுளின் தூதர்கள் அந்தப் பேற்றை எந்நேரமும் பெற்றவர்களாய் இருக்கிறார்கள். 2. அவர்கள் இறைவனின் விருப்பத்தைப் பிறர்க்கு அறிவிப்பவர்களாக, இறைவனின் திருவுளத்தை விரைந்து நிறைவேற்றுபவர்களாக இருக்கிறார்கள். அதிதூதர்கள் மிக்கேல், கபிரியேல், இரபேல் இத்தகைய பணிகளைத் திறம்பட ஆற்றுவதை விவிலியத்தில் காண்கிறோம். அதே திருப்பாடல் 84 கூறுகிறது: பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும் என் கடவுளது இல்லத்தின் வாயிற்காவலனாய் இருப்பதே இனிமையானது. கடவுளின் தூதர்கள் இந்த வரிகளுக்குச் சொந்தமானவர்கள்.

இந்த அதிதூதர்களின் விழாவில் நாமும் அவர்களைப் போலவே எந்நேரமும் இறைவனின் பிரசன்னத்தில், அவரது புகழைப் பாடி மகிழவும், அவரது திருவுளத்தை விரைந்து நிறைவேற்றுபவர்களாய் வாழவும் விரும்புவோம். வேண்டுவோம்.

மன்றாட்டு:

வான்படைகளின் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். வானகத் தூதர் அணிகளோடு சேர்ந்து எந்நேரமும் உமது புகழைப் பாடும் வரத்தை எனக்குத் தாரும். உமது விருப்பத்தை உடனே விரைந்து நிறைவேற்றும் அருளையும் எனக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.